தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. தொன்மை:

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.
தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும்.

எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலை எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 குறிஞ்சி முல்லை வாணர் மிகப்  பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும்,
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்
பஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.

தொன்மை:

 அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ் முன்பாலை நாடும்,
ஏழ் பின்பாலை நாடும்,
ஏழ்குன்ற நாடும்,
ஏழ்கண காரை நாடும்,
ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.
இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழியான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...

2.முன்மை:

முன்மை என்றால் முந்தி நிற்குந் தன்மை என்க...

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு... அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே...

பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்...

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே....

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
- (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்...

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்...

3. எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.


 தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை.  (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான சொற்கள் இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ஷி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

"தண்டலை மயில்க ளாடத்
 தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
 குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத் 
 தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட 
 மருதம்வீற் றிருக்கு மாதோ"

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர்.


ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக்களல்ல.

வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார்.


4. ஒண்மை (ஓளிமை);

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து, அதனை நல்வழிப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு இயற்றப்பட்ட திருக்குறளை விட, இதற்கு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர்.
அவையாவன

1. பொய் பேசுதல்,
 2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
 3. தீயசொற்களைப் பேசுதல்
 4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.

இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.

பொதுவாக , இல்லற வாழ்க்கையில், சொந்தங்களோடு கூடி வாழ்கையில் வரும் சண்டைகளில், பெரும்பான்மைச் சண்டைகள், இந்த மூன்று வகைப் பேச்சுக்களால் தான் என்பதை நாம் எளிதில் உணரலாம். இத்தகைய, வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்களும் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழ் என்று.


5. இளமை : எழில் கொஞ்சும் இளமை.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்று பாடினார், பேராசிரியர் பெரும்புலவர் மனோன்மணியம் கண்ட பெ.சுந்தரனார்..

மேற்கண்ட பாடலின் பொருள்:

தமிழ்மொழியானது, தன் வயிற்றில் இருந்து பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் இருந்தும், ஆரிய சமற்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து  சிதைந்து போகாது, இன்றும் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது எப்படியுள்ளது என்றால், பல உயிர்களைப் பல உலகங்களைப் படைத்தும் அழித்தும் செய்த செய்கின்ற எல்லாம் வல்ல இறைவன் தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது போலவுள்ளதன்றோ.. அத்தகைய தமிழின் சீரிய இளமையின் திறத்தை வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே.....(பிள்ளை பெற்றவுடன், தாய் முதுமையுறுதல் போல அல்லாமல், முன் இருந்தபடியே இளமையாய் இருக்கும் தமிழின் இளமையைப் போற்றுவது என்றவாறு)

6. வளமை - (சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை)

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,

அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,

கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.

யானையைக் குறிக்க 25 பெயர்கள் உள்ளன.

கன்று,பிள்ளை,குட்டி,குஞ்சு,சேய்,குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே.  யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க.  

அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.

7. தாய்மை; (பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை)

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர்.

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

8. தூய்மை :

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை... பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்பதனை அறிவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.

9. செம்மை - (செழுமை)

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. மக்களுக்கு ஒழுக்க வரம்பு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பு ஆகும். சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.
'என்ன செய்யுற' என்று பேசினாலும், 'என்ன செய்கிறாய்' என்றே எழுதப்படுவது நம் நடைமுறை.
இவ்வாறு இரு நிலைகளாக வேறு மொழிகளில் நடைமுறை இல்லை என்பது தமிழின் செம்மைக்குச் போதிய சான்றாம்.

தமிழில் புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல், மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல், தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய திறமையோடிருத்தலைக் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச் சொல் கன்னடத்தில் மாடுதல் என்னும் வடிவில் பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும்
 கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழ் எழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும், ரகரம் தொகல் (மறைதல்) தெலுங்கிற்கும், பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும் சிறப்பாகும்

எடுத்துக்காட்டு:

மலையாளம்: கஞ்சி - கஞ்ஞி, நீங்கள் - நிங்ங்ள், வந்து -  வந்நு...

தெலுங்கு:பருப்பு -  பப்பு, மருந்து -  மந்து

கன்னடம்: பள்ளி - ஹள்ளி, பாளை -ஹாளெ, பொன்- ஹொன்னு

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்:
ஆயிரம் -ஸகஸ்ர, கலுழன் -கருட(g), கோட்டம்- கோஷ்ட, சாயை -சாயா (ch), தூண்டம் - ஸ்தூணா, மயில் -மயூர முகம்- முக(kh) வட்டம் - வ்ருத்த.

இனனும் விரிவுக்குப், பாவாணரின் ‘செந்தமிழ்ச் சிறப்பு’ என்ற நூலைக் காண்க.


10. மும்மை (இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை)

இயல், இசை,  நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

11. இனிமை

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!

சிலம்பின் இக்கானல்வரிகளே தமிழினினிமைக்குப் போதிய சான்றாம்.


12. தனிமை :

தனித்து இயங்கும் தன்மை.

இது வேறெம்மொழிக்கும் இல்லாத தமிழின் தனிப்பெருஞ் சொத்தாகும்.

தமிழ் மொழியானது வேறு எந்த மொழியின் சொற்களைப் பயன்கொள்ளாமல் தனித்து இயங்கும் தன்மை கொண்ட ஒரே மொழியாகும்.

 ‘மற்ற மொழிகளில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர, அதன் வளம் பெருகும். தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர அதன் வளம் குன்றும்.’

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப்பகைவர்கள் சிலர், ‘தனித்தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி தக்கதாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்?

அட்காக் கமிட்டி, லோக் சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக் கேடானது. வடமொழிச் சொற்களையும் நன்கு பலுக்கும் தமிழனுக்குத் ‘தமிழ் பலுக்க வராது‘ எனக் கூறுவது மானக்கேடாகும்."
தமிழின் சிறப்பு என்ற நூலில் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறியது.


13. நுண்மை :

தமிழின் நுண்மைக்கு, உயிரும் மெய்யும் என்று எழுத்துகளை வகைப்படுத்தியது தொடங்கி கணக்கிலா சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ.

தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியலின் சுருக்கம்:

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப.

என்று மெய்ப்பாடுகள் (மெய் படும் பாடுகள்) எட்டே என்று குறித்ததோடு...

*அவற்றுள் நகை என்பது...

"எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு' என்ப"

என்று நான்கு வழி வருவதே நகை என்றும்...
 
*அழுகை என்பதோ...

"இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே"

*இளிவரல் என்னும் இழிவுறுதல்.  இகழ்வுறுதல் என்பதோ...

மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

*மருட்கை எனப்படும் வியப்புறுதல் என்பதோ...
 
"புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே."
 
*அச்சம் என்பதோ...

அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
 
*பெருமிதம் என்பதோ...

கல்வி, தறுகண், புகழ்மை, கொடை, எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
 
*வெகுளி எனப்படும்  சினத்தல் என்பதோ

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

*உவகை என்பதோ
 
செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.

இவ்வாறான நுட்பமான உளவியல் வரையறைகளை, தன் முதுபழம் நூலான தொல்காப்பியத்துள் வைத்துக் காட்டுவதே, நம் தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

14. திருமை - 'திரு' என்னும் அடை பொருந்தும் தன்மை, தெய்வமாகிய தன்மை.

இன்றைய அளவில், தமிழரைக் காப்பாற்ற, தமிழை விட வேறு தெய்வம் இல்லை என்க.

திருமைக்கு அழகு என்றும் பொருள்.


15. இயன்மை - இயல்பான தன்மை...

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காக படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி... தேவபாடை என்பது போன்றது அல்லாமல் இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால்   உருவானது என்க...
(சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன... தமிழைத் தோற்றுவித்தார் எனப் பாடப்படவில்லை...)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல் அதாவது ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்...


16. வியன்மை - உலகெங்கும் பரவியுள்ள தன்மை ...  சில தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன... எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.

இவையே பாவாணர் தமிழின அரும்பண்புகளாகக் கண்டு சொன்ன பதினாறு குணங்களாகும். நன்றி...


மேலும் படிக்க »