எழுத்திலக்கணம் : புணர்ச்சி விதிகள்

1/11/2015

புணர்ச்சி யிலக்கணம் : புணர்ச்சி இலக்கணத்தின் முன்னுரை கோப்புக்கு இதை சொடுக்கவும் .





புணர்ச்சி என்பது இரண்டு ஒலிகள் சேரும் விதம் என்க.

திரு ஐயாறு என்ற இரு சொற்களுள் திரு என்பது நிற்க ஐயாறு என்பது வந்து சேருகின்றது... எனவே திரு என்பது நிலைமொழி என்றும் ஐயாறு என்பது வருமொழி என்றும் சொல்லப்படுகின்றது.

திரு ஐயாறு என்ற இரண்டு சொற்கள் இணைவதானது உண்மையில் திரு என்ற நிலைமொழியின் கடைசி எழுத்தும் ஐயாறு என்ற வருமொழியின் முதல் எழுத்தும் சேருவதே.

அதாவது, ரு என்ற உயிர்மெய்யும் ஐ என்ற உயிரும் சேருகின்றது...

ரு என்பதோ ர் +உ என்பதே ஆதலால், உண்மையில் உ என்ற உயிரும் ஐ என்ற உயிரும் சேருகின்றது....

இவ்வாறு இரு ஒலிகள் சேருவதே புணர்ச்சி என்க...
இப்புணர்ச்சி என்பது இருவகைப்படும்.

வேற்றுமை உருபுகள் தோன்றியும் தொக்கியும் வந்து புணர்வது முதல் வகை. இதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.

வேற்றுமை அல்லாத வழிப் புணர்வது இரண்டாவது வகை. இதை அல்வழிப் புணர்ச்சி என்பர்.
அப்பரின் பாட்டு
அப்பர் பாட்டு - இவை வேற்றுமைப் புணர்ச்சி.

நல்ல பாட்டு - இஃது அல்வழிப் புணர்ச்சி
அப்பரின் பாட்டு என்பதில் அப்பர் என்ற நிலைமொழியில் இன் எனும் வேற்றுமை உருபு தோன்றி, பாட்டு என்ற வருமொழியோடு புணர்கின்றது...

அப்பர் பாட்டு என்பதில் அப்பர் என்ற நிலைமொழியில் இன் என்ற வேற்றுமை உருபு தொக்கி நின்று, பாட்டு என்ற வருமொழியோடு புணர்கின்றது...

இவ்வாறு வேற்றுமை உருபுகள் தோன்றியும் தொக்கி நின்றும் புணர்வது வேற்றுமைப் புணர்ச்சி என்க.

நல்ல பாட்டு என்பதில் வேற்றுமை உருபுகளுக்கு வேலை இல்லை.

நல்ல என்ற குறிப்புப் பெயரெச்சம், பாட்டு என்ற வருமொழியோடு புணர்கின்றது. எனவே இஃது அல்வழிப் புணர்ச்சி என்க.

ஆக, புணர்ச்சி என்பது வேற்றுமையும் அல்வழியும் ஆன இரண்டு வழிகளில், நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் புணர்வதாகும் என்க.

இனி,

தமிழ் கற்போம்
தமிழ்த்தொண்டு

இந்த இரண்டு சொற்றொடர்களைப் பாருங்கள்.

இரண்டிலும் நிலைமொழி 'தமிழ்' எனும் சொல்தான். வருமொழிகள் மட்டும் மாறுகின்றன.

முதல் புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் எந்த மாற்றமும் இல்லாது இயல்பாகப் புணர்ந்துள்ளன, இதனை இயல்புப்புணர்ச்சி என்பர்.

இரண்டாம் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்றில் த் எனும் தகர வல்லினமெய் தோன்றியுள்ளது. இது வருமொழி முதலெழுத்தான தொ எனும் உயிர்மெய்யில் முதலில் நிற்கும் தகரமெய்யே. இத்தகர வல்லின மெய் மிகுந்துள்ளதையே 'வலி மிகுதல்' என்பர். இவ்வகையில் நிலைமொழியோ வருமொழியோ மாற்றமடைந்து புணர்வதை, மாற்றப் புணர்ச்சி (விகாரப் புணர்ச்சி) என்பர்.

ஆக, புணர்ச்சி என்பது வேற்றுமையும் அல்வழியும் ஆன இரண்டு வழிகளில், நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும், இயல்பாயும் மாற்றமடைந்தும் புணர்வதாகும் என்க.

" புணர்ச்சி பற்றிய நம் கற்றல் தொடரும்"

புணர்ச்சி விதி 1:

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிறீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

எ-டு.
கிளி + அழகு - கிளியழகு
தீ + எரிந்தது - தீயெரிந்தது
பனை + ஓலை - பனையோலை
---
அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிறீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

எ-டு.
பல + அணி - பலவணி
பலா + இலை - பலாவிலை
திரு + அடி - திருவடி
பூ + அரும்பு - பூவரும்பு
நொ + அழகா - நொவ்வழகா
கோ + அழகு - கோவழகு
கௌ + அழகு - கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.

கோ + இல் - கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
---
ஏகாரவுயிறீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

அவனே + அழகன் - அவனேயழகன்
சே + உழுதது - சேவுழுதது

புணர்ச்சி விதி 2:

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்:

ஆடு + அரிது - ஆடரிது

குற்றியலுகரம், யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.

நாகு + யாது - நாகியாது

இது + என = இதுவென (விதி 1)

இங்கு + என = இங்கென (விதி 2)...

வேறுபாட்டையுணர்க...
குற்றியலுகரஞ் சமற்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.

சம்பு + அருளினான் - சம்புவருளினான்
இந்து + உதித்தது - இந்துவுதித்தது

பிறமொழிச் சொற்கள் நம் இலக்கணத்திற்கு ஒவ்வாதவை... அவை சேரச்சேர நம் இலக்கணத் தூய்மை கெட வாய்ப்புண்டு...

மற்ற மொழிகளில் பிறமொழிச் சொற்கள் சேரச்சேர வளம் பெருகும். தமிழிலோ வளங்குன்றும் என்ற உண்மை இதனால் விளங்கும்....
புணர்ச்சி விதி 2 (தொடர்ச்சி)

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்:

சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.

கதவு + அழகு - கதவழகு
கதவு + யாது - கதவியாது

புணர்ச்சி விதி 3:

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்.

மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி = செய்ந்நன்றி
கை + மாறு = கைம்மாறு

புணர்ச்சி விதி 4:

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் வரும் வருமொழி புணர்தல்

அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.


அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யானை இவ்யானை உவ்யானை எவ்யானை
அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்
---
அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.

அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

புணர்ச்சி விதி 5:

ஆ, ஏ, ஒ ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்:

ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யாகார வினா முன்னும் வரும் வல்லினம் மிகாவாம்.

அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய

புணர்ச்சி விதி 6:


வினைமுற்று வினைத்தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்:

வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம்.

அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.

எ-டு:

தெரிநிலை வினைமுற்று:

உண்டன குதிரைகள்
உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா
வந்தனை சாத்தா
வந்தது புலி
வந்தாய் பாணா
உண்டீர் தேவரே
உண்டாள் சாத்தி
வந்தான் சாத்தன்

குறிப்பு வினைமுற்று:

கரியன குதிரைகள்
வில்லி சாத்தா
ஊக்கமது கைவிடேல்
கரியை தேவா
கரியாய் சாத்தா
கரியீர் சாத்தரே
...............

வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வினைமுற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னும் வரும் வல்லினம் மட்டும் மிகுமெனக் கொள்க.

கூவிற்றுக் குயில், குத்தாட்டுக் களிறு எனவாறு...


ஏவலொருமை வினைமுற்று:

நட கொற்றா
வா சாத்தா
எறி தேவா
கொடு பூதா
ஓடு கொற்றா
வெஃகு சாத்தா
பரசு தேவா
நடத்து புதியா
அஞ்சு கொற்றா
எய்து சாத்தா
வனை தேவா
செய்கொற்றா
சேர் சாத்தா
வாழ் பூதா
நில் கொற்றா
கேள் சாத்தா
உண் கொற்றா
தின் சாத்தா

வினைத்தொகை:

விரிகதிர்
ஈபொருள்
அடுகளிறு
வனைகலம்
ஆடு பாம்பு
அஃகுபிணி
பெருகுபுனல்
ஈட்டுதனம்
விஞ்சுபுகழ்
மல்கு சுடர்
உண்கலம்
தின்பண்டம்
கொல்களிறு
கொள்கலம்
செய்கடன்
வீழ்புனல்
..................

புணர்ச்சி விதி 7:

 பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்:

அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா.

உண்ட கொற்றன்
கரிய காற்றன்
உண்ணாத குதிரை
இல்லாத குதிரை

அதே வேளை, ஈற்றுயிர் மெய் கெட்டு ஆகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.

உண்ணாக் குதிரை
இல்லாக் குதிரை

புணர்ச்சி விதி 8:

இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.


தேடிக்கொண்டான்
போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான்
 உண்ணப் போனான்
மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்
உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்
அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செய்வான்

புணர்ச்சி விதி 9:

 வன்றொடர்க்குற்றியலுகர வீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்

பொருது சென்றான்
நடந்து போனான்
எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்

துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.

உண்ணாப் போனான்

புணர்ச்சி விதி 10:

அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறு உயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

விளக்குறிது
விளக்கோடு
தாராச்சிறிது
தாராச்சிறை
தீச்சுடும்
தீச்சட்டி
கொண்மூக்கரிது கொண்மூக்கருமை (கொண்மூ என்றால் முகில்)
சேப்பெரிது
சேப்பெருமை
கோச்சிறிது
கோச்செவி

 இருவழி என்றது வேற்றுமை வழியும் அது அல்லாத அல்வழியும் என்க.

புணர்ச்சி விதி 11:

அகரவீற்று அஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும், வகர வைகார வீற்று அஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா.

பல போயின
பல படைத்தான்
சில சென்றன
சில சொற்றான்
உள்ளன குறைந்தன
உள்ளன கொடுத்தான்
உள்ளவை தகர்ந்தன
உள்ளவை தந்தான்

...........

பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் திரியாதும், வரும்.

பலபல பலப்பல பற்பல பல்பல
சிலசில சிலசில சிற்சில சில்சில
........

பல, சில என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும்.

பல்கலை பல்கலை சிலகலை சில்கலை
பலமலை பன்மலை சிலமலை சின்மலை
பலயானை பல்யானை சிலயானை சில்யானை
பலவணி பல்லணி
சிலவணி சில்லணி

புணர்ச்சி விதி 12:

பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும்.


பூங்கொடி பூங்கரும்பு...

 ககரத்து இனமான ஙகரம் மிகுந்து வந்துள்ளது... இனவெழுத்துக்கள் என்று நாம் முன்பு கண்டதை யோர்க...

ஓர்க - எண்ணிக்கொள்க

பூ + கொடி = பூங்கொடி
பூ + செடி = பூச்செடி , பூஞ்செடி
பூ + தளிர் = பூந்தளிர்
பூ + பிஞ்சு = பூப்பிஞ்சு , பூம்பிஞ்சு....

புணர்ச்சி விதி 13:

முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும்,
எது என்னும் வினாப் பெயர் முன்னும்,
ஒரு, இரு, அறு, எழு என்னும் திரிந்த எண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகாவாம்.

அது குறிது அது கண்டான்
இது சிறிது இது சொன்னான்
உது தீது உது தந்தான்
எது பெரிது எது பெற்றான்

ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல்

புணர்ச்சி விதி 14:

இ ஐ ய ர ழ வீற்று அஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்:

இகர ஐகாரவுயிர்களையும் யகர ரகர ழகர வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும் மிகும்

எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.

வேற்றுமை:

கரிக்கோடு
நாய்க்கால்
யானைச்செவி
தேர்த்தலை
பூழ்ச்செவி

பண்புத்தொகை:

மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி
சாரைப்பாம்பு
கார்ப்பருவம்
பூழ்ப்பறவை

உவமைத்தொகை:

காவிக்கண்
வேய்த்தோள்
குவளைக்கண்
கார்க்குழ்
காழ்ப்படிவம்

எழுவாய்:

பருத்திகுறிது
நாய்தீது யானைகரிது
வேர்சிறிது யாழ்பெரிது

உம்மைத்தொகை

பரணிகார்த்திகை
பேய்பூதம்
நீர்கனல்
 இகழ்புகழ்

இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா.

இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான்
குவளை கொய்தான் வரைபாய்ந்தான்
வேய் பிளந்தான் வாய்புகுந்தது
தேர் செய்தான் ஊர் சென்றான்
தமிழ் கற்றான் அகழ் குதித்தான்


காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க.

புளி தின்றான், அடவி புக்கான் என்பன, புளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை.

காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.


புணர்ச்சி விதி 15:

மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்:

 சில உயிரீற்று மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.

மா + காய் - மாங்காய்
விள + காய் - விளாங்காய்

இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம் எனும் சாரியை தோன்றும்.

புளி + காய் - புளியங்காய்
புன்கு + காய் - புன்கங்காய்
ஆல் + காய் - ஆலங்காய்
---

ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்று ஐகாரங் கெட்டு அம் எனும் சாரியை தோன்றும்.

எலுமிச்சை + காய் - எலுமிச்சங்காய்
மாதுளை + காய் - மாதுளங்காய்


புணர்ச்சி விதி 16:

குற்றியலுகரவீறு

வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும் .

அல்வழி:
கொக்குக்கடிது
சுக்குத்திப்பிலி

வேற்றுமை:
கொக்குச்சிறை
சுக்குக்கொடு

மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.

அல்வழி:
குரங்கு கடிது
அம்பு தீது

வேற்றுமை:
 குரங்குக்கால்
அம்புத்தலை

குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.
---

ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.

அன்று கண்டான்
பண்டு பெற்றான்
இன்று தந்தான்
முந்து கொண்டான்
என்று சென்றான்

ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு, உங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, யாண்டு என்னும் இடைச்சொற்களின முன் வரும் வல்லினம் மிகும்.

அங்குக்கண்டான்
ஆங்குக்கண்டான்
இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான்
உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான்
---

நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.

அல்வழி வேற்றுமை
நாகு கடிது நாகு கால்
எஃகு கொடிது எஃகு கூர்மை
வரகு சிறிது வரகு சோறு
தௌ;கு பெரிது தௌ;கு பெருமை
---

டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.

ஆட்டுக்கால்
ஆட்டுமயிர்
ஆட்டுவால்
ஆட்டதர் ஆற்றுக்கால்
ஆற்றுமணல்
ஆற்றுவழி
ஆற்றூறல் நெடிற்றொடர்
பகட்டுக்கால்
பகட்டுமார்பு
பகட்டு வால்
பகட்டடி வயிற்றுக்கொடல்
வயிற்றுமயிர்
வயிற்றுவலி
வயிற்றணி உயிர்த்தொடர்
காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.
ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.

மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.

பண்புத்தொகை
மருந்து + பை - மருந்துப்பை
கரும்பு + நாண் - கருப்புநாண்
கரும்பு + வில் - கருப்புவில் வேற்றுமை
கன்று + ஆ - கற்றா
அன்பு + தளை - அற்புத்தளை
என்பு + உடம்பு - எறபுடம்பு

உவமைத்தொகை
குரங்கு + மனம் - குரக்குமனம்
இரும்பு + நெஞ்சம் - இருப்புநெஞ்சம்

---

சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.

பண்டு + காலம் - பண்டைக்காலம்
இன்று + நாள் - இற்றைநாள்

அல்வழி
அன்று + கூலி - அன்றைக்கூலி வேற்றுமை
இன்று + நலம் - இற்றை நலம்
சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

நேற்று + பொழுது - நேற்றைப்பொழுது. எ-ம்.
நேற்று + கூலி - நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

புணர்ச்சி விதி 17:

குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்:

வடக்கு, குணக்கு, குடக்கு, என்னுஞ் சொற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும்.

வடக்கு + கிழக்கு - வடகிழக்கு
மேற்கு - வடமேற்கு
திசை - வடதிசை
மலை - வடமலை
வேங்கடம் - வடவேங்கடம்

குணக்கு + திசை - குணதிசை
கடல் - குணகடல்

குடக்கு + திசை - குடதிசை
நாடு - குடநாடு

கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்ஙனம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து மிகுந்தும் புணரும்.

கிழக்கு + பால் - கீழ்பால்
திசை - கீழ்த்திசை
கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு.

தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.

தெற்கு + கிழக்கு - தென்கிழக்கு
மேற்கு - தென்மேற்கு
மலை - தென்மலை

மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது.

மேற்கு + கடல் - மேல்கடல்
வீதி - மேல்வீதி
திசை - மேற்றிசை
மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு.

இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்குவாயில், தெற்கு மலை, கிழக்குத் திசை, மேற்கு மலை, என இங்ஙனங் காட்டிய திரிபன்றியும் வரும்.

வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

வடதிசை என்பது, வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை.

புணர்ச்சி விதி 18:

உகரவீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி:

ஒன்று:
ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.

ஒன்று + கோடி - ஒருகோடி
கழஞ்சு - ஒருகழஞ்சு
நாழி - ஒருநாழி
வாழை - ஒருவாழை
ஆயிரம் - ஓராயிரம்

இரண்டு:
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.

இரண்டு + கோடி - இருகோடி
கழஞ்சு - இருகழஞ்சு
யானை - இருயானை
வாழை - இருவாழை
ஆயிரம் - ஈராயிரம்

மூன்று:
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும்.

மூன்று + ஆயிரம் - மூவாயிரம்
கழஞ்சு - முக்கழஞ்சு
நாழி - முந்நாழி

நான்கு:
நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம்.

நான்கு + ஆயிரம் - நாலாயிரம்
யானை - நால்யானை
கழஞ்சு - நாற்கழஞ்சு
மணி - நான்மணி

ஐந்து:
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழுத்தாகத் திரியும்.

ஐந்து + ஆயிரம் - ஐயாயிரம்
கழஞ்சு - ஐங்கழஞ்சு
மூன்று - ஐம்மூன்று
வட்டி - ஐவ்வட்டி

நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும்.

ஆறு:
ஆறென்னும் எண் உயிர் வரின் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.

ஆறு + ஆயிரம் - ஆறாயிரம்
கழஞ்சு - அறுகழஞ்சு
மணி - அறுமணி
வழி - அறுவழி

ஏழு:
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும்.

ஏழு + ஆயிரம் - ஏழாயிரம்
கழஞ்சு - எழுகழஞ்சு
மணி - எழுமணி
வகை - எழுவகை
ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு.

எட்டு:
எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும்.

எடடு + ஆயிரம் - எண்ணாயிரம்
கழஞ்சு - எண்கழஞ்சு
மணி - எண்மணி
வளை - எண்வளை

இத் திரிபுகளின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
---

ஒன்பது:
ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு ஆயிரமாவுந் திரியும்.

ஒனபது + பத்து - தொண்ணூறு

ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும்.

என்பது + நூறு - தொள்ளாயிரம்
இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
---

ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும்.

ஒன்று பத்து - ஒருபது, ஒருபஃது
இரண்டு இருபது, இருபஃது
மூன்று முப்பது, முப்பஃது
நான்கு நாற்பது, நாற்பஃது
ஐந்து ஐம்பது, ஐம்பஃது
ஆறு அறுபது, அறுபஃது
ஏழு எழுபது, எழுபஃது
எட்டு எண்பது, எண்பஃது
---
ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும்.

ஒருபது ஒன்று - ஒருபத்தொன்று
இருபது இரண்டு - இருபத்திரண்டு
முப்பது மூன்று கழஞ்சு - முப்பத்துமூன்று கழஞ்சு
மற்றவைகளு மிப்படியே
-----

பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும்.

பத்து இரண்டு - பன்னிரண்டு

பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.

பத்து ஒன்று - பதினொன்று
மூன்று - பதின்மூன்று
நான்கு - பதினான்கு
ஐந்து - பதினைந்து
ஆறு - பதினாறு
ஏழு - பதினேழு
எட்டு - பதினெட்டு
---

பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்..

பத்து ஒன்று - பதிற்றொன்று
இரண்டு - பதிற்றிரண்டு
மூன்று - பதிற்றுமூன்று
பத்து - பதிற்றுப்பத்து
நூறு - பதிற்றுநூறு
ஆயிரம் - பதிற்றாயிரம்
கோடி - பதிற்றுக்கோடி
கழஞ்சு - பதிற்றுக்கழஞ்சு
கலம் - பதிற்றுக்கலம்
மடங்கு - பதிற்றுமடங்கு
ஒன்பது ஒன்று - ஒன்பதிற்றொன்று
இரண்டு - ஒன்பதிற்றிரண்டு
மூன்று - ஒன்பதிற்றுமூன்று
பத்து - ஒன்பதிற்றுப்பத்து
நூறு - ஒன்பதிற்றுநூறு
ஆயிரம் - ஒன்பதிற்றாயிரம்
கோடி - ஒன்பதிற்றுக்கோடி
கழஞ்சு - ஒன்பதிற்றுக்கழஞ்சு
கலம் - ஒன்பதிற்றுக்கலம்
மடங்கு - ஒன்பதிற்றுமடங்கு

பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும்.

பத்து ஆயிரம் - பதினாயிரம்
கழஞ்சு - பதின்கழஞ்சு
கலம் - பதின்கலம்
மடங்கு - பதின்மடங்கு
ஒன்பது ஆயிரம் - ஒன்பதினாயிரம்
கழஞ்சு - ஒன்பதின்கழஞ்சு
கலம் - ஒன்பதின்கலம்
மடங்கு - ஒன்பதின்மடங்கு
----
ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும்.

ஒன்று ஒன்று - ஒவ்வொன்று
இரண்டு இரண்டு - இவ்விரண்டு
மூன்று மூன்று - மும்மூன்று
நான்கு நான்கு - நந்நான்கு
ஐந்து ஐந்து - ஐவைந்து
ஆறு ஆறு - அவ்வ

புணர்ச்சி விதி 19: 

ணகர னகர வீற்றுப் புணர்ச்சி:
ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயல்பாம்.
வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும்.
அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.
அல்வழி:
மண்சிறிது
மண்டீது
பொன் குறிது

வேற்றுமை:
மட்சாடி
மட்டூண்
பொற்கலம்
பொன்றீது
பொற்றூண்

கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும்,
விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம்.
மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
--—
ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம்.
அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.
அல்வழி:
மண்ஞான்றது
மண்ணீன்டது
மண்வலிது
பொன்ஞான்றது
பொன்னீண்டது
பொன்வலிது

வேற்றுமை:
மண்ஞாற்சி
மண்ணீட்சி
மண்வன்மை
பொன்ஞாற்சி
பொன்னீட்சி
பொன்வன்மை
 ——
தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.
அல்வழி:
 தூணன்று
அரணன்று
வானன்று
செம்பொனன்று

வேற்றுமை:
தூணன்மை
அரணன்மை
வானன்மை
செம்பொனன்மை
--—
பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
பாண்குடி உமண்சேரி அமண்பாடி பரண்கால் கவண்கால்
(பாண் - பாடுதற்றொழில். உமண் - உப்பமைதற்றொழில். அமண் - அருகனை வழிபடுவோர்).
--—
தன், என், என்னும் திரிபு மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும்.
தன்பகை
தற்பகை
என்பகை
எற்பகை

நின் என்னும் திரிபுமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.
நின்பகை

தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.
-—
குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம். . குயின்கடுமை - தேன்பெருமை ஊன்சிறுமை - மீன்கண் எயின்குடி - மான்செவி எகின்சிறுமை - மின்கடுமை குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள் தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.

புணர்ச்சி விதி 20:

மகரவீற்றுப் புணர்ச்சி:

மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும்.
எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
வேற்றுமை:
மரக்கோடு
நிலப்பரப்பு

பண்புத்தொகை:
வட்டக்கடல்
சதுரப்பலகை

உவமைத்தொகை
கமலக்கண்

எழுவாய்:
முரங்குறிது
யபங்கொடியேம்

உம்மைத்தொகை
நிலந்தீ

பெயரெச்சம்:
பயங்காக
செய்யுங்காரியம்
உண்ணுஞ்சோறு

வினைமுற்று:
தின்றனங்குறியேம்


உம்மையிடைச் சொல்:
சாத்தானுங்கொற்றனும்
பூதனுந் தேவனும்

மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம்.

தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.
----

தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.

அல்வழி. வேற்றுமை கங்குறிது.

கங்குறுமை
அஞ்சிறிது. அச்சிறுமை
செங்கோழி. நங்கை
தஞ்செவி
எந்தலை
---

மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

அல்வழி வேற்றுமை
மரஞான்றது மரஞாற்சி
மரநீண்டது மரமாட்சி
---

தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.

அஞ்ஞானம் நுஞ்ஞானம்
எந்நூல் தந்நூல்
---

மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.

மரவடி
மரவேர் (இவை வேற்றுமை)

வட்டவாழி
வட்டவடிவம் பண்புத்தொகை

பவளவிதழ்
பவளவாய் உவமைத்தொகை

மரமரிது
மரம்வலிது எழுவாய்

வலமிடம்
நிலம்வானம் உம்மைத்தொகை

உண்ணுமுணவு
ஆளும்வளவன் பெயரெச்சம்

உண்டனமடியேம்
உண்டனம்யாம் வினைமுற்று

அரசனுமமைச்சனும்
புலியும் யானையும் உம்மையிடைச்சொல்

செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும்.

வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.

புணர்ச்சி விதி 21:

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி:

லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரிலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.

பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை

வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை

வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை

குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய்

கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை

பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும்,
கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
----

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.

கல் குறிது கற்குறிது
முள் சிறிது முட்சிறிது
 எழுவாய்

அல் பகல் அட்பகல்
உள் புறம் உட்புறம்
உம்மைத்தொகை

நெல், செல், கொல், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கொற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த் தொடரிலும் உறழாது திரிந்தே வரும்.
செல் - மேகம், கொல் - கொல்லன்
உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியவிகாரப்பட்டும் திரிந்தும் வருதல். உறழ்ச்சி எனினும், விகற்ப்பவினுமெனினும் ஓங்கும்.

கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்த ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.
----

அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.

அல்வழி வேற்றுமை
கற்றீது கற்றீமை
முட்டீது முட்டீமை
---

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.

கற்றீது கஃறீது
முட்டீது முஃடீது
---
தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.

வேறீது வாடீது
தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்
தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்
காறலை தாடலை - உம்மைத்தொகை
உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்
பயிறோகை அருடேவன் - வினைத்தொகை
குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்
வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.
நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.
---
லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.


கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி
வில் - வின்னீண்டது வின்னீட்சி
புல் - புன்டாண்டது புன்மாட்சி
முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி
புள் - புண்ணீண்டது புண்ணீட்சி
கள் - கண்மாண்டது கண்மாட்சி
-----

தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
வேனன்று வேனன்மை
பொருணன்று பொருணன்மை
-----
லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்

அல்வழி வேற்றுமை
கல்யாது கலயாப்பு
விரல்வலிது விரல்வன்மை
முள்யாது முள்யாப்பு
வாள்வலிது வாள்வன்மை

புணர்ச்சி விதி 22:

விதியில்லாத் திரிபுகள்
----
விதியின்றி திரிந்து வருவனவுஞ் சிலவுள. அவை

மருவி வழங்குதல்,
ஒத்து நடத்தல்,
தோன்றல்,
திரிதல்,
கெடுதல்,
நீளல்,
நிலை மாறுதல்

என எழுவகைப் படும்.
அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.
---
1. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.

அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை
பாண்டியனாடு - பாண்டி நாடு
சோழநாடு - சோணாடு
மலையமானாடு - மலாடு
தொண்டைமானாடு - தொண்டைநாடு
தஞ்சாவூர் - தஞ்சை
சென்னபுரி - சென்னை
குணக்குள்ளது - குணாது
தெற்குள்ளது - தெனாது
வடக்குள்ளது - வடாது
என்றந்தை - எந்தை
நுன்றந்தை - நுந்தை
---

2. ஒத்து நடத்தலாவது, ஓரெழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வருமாறு :-
அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

அகம் - அகன்
முகம் - முகன்
நிலம் - நிலன்
நலம் - நலன்

மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

பசல்
மஞ்சு
மயல் பைசல்
மைஞ்சு
மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது

அமச்சு
இலஞ்சி
அரயர் அமைச்சு
இலைஞ்சி
அரையர் மொழியிடையில்
ஒத்து நடந்தது

ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

நண்டு
நெண்டு
நமன் ஞண்டு
ஞெண்டு
ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது

ஐந்நூறு
மைந்நின்ற கண் ஐஞ்ஞூறு
மைஞ்ஞன்ற கண் ஐகாரத்தின் பின்
ஒத்து நடந்தது

சேய்நலூர்
செய்நின்ற சேய்ஞலூர்
செய்ஞ்ஞன்ற
 யகரத்தின் பின் ஒத்து நடந்தது

ஒரொவிடத்து அஃறிணைப் பெயரொற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

சாம்பல் - சாம்பர்
பந்தல் - பந்தர்
குடல் - குடர்
அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

அரும்பு - அரும்பர்
கரும்பு - கரும்பர்
கொம்பு - கொம்பர்
வண்டு - வண்டர்

ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்
பொள்ளாமணி - பொல்லாமணி
---

3. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

யாது - யாவது
குன்றி - குன்றம்
செல் உழி - செல்வுழி
விண் அத்து - விண்வத்து
----

4. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.

மாகி - மாசி
மழைபெயின் விளையும் - மழைபெயில் விளையும்
கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு
உயர்திணைமேலே - உயர்திணை மேன்
---

5. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.

யாவர் - யார்
யார் - ஆர்
யானை - ஆனை
யாடு - ஆடு
யாறு - ஆறு
எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
---
6. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.

பொழுது - போழ்து
பெயர் - பேர்
---
7. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.

வைசாகி - வைகாசி
நாளிகேரம் - நாரிகேளம்
மிஞிறு - ஞிமிறு
சிவிறி - விசிறி
தசை - சதை
இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.

கண்மீ - மீகண்
நகர்ப்புறம் - புறநகர்
புறவுலா - உலாப்புறம்
இன்முன் - முன்றில்
பொதுவில் - பொதியில்
முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின

தமிழ் இலக்கணம் இவ்வளவு விரிவானதா என்றும் இத்தனை புணர்ச்சி விதிகளையும் எப்படிநினைவில் வைத்துக் கொள்வது என்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதெனின்.... ஆங்கிலத்தில் எழுத்துக்கள் 26 மட்டுமே என்று நாம் நினைத்தாலும் அதன் ஒவ்வொரு சொல்லின் எழுத்துக்களையும் (spelling) மனப்பாடம் செய்தே தீர வேண்டும் என்றும், அவ்வாறு 50,000 சொற்களின் எழுத்தமைவை மனப்பாடம் செய்து வைத்துள்ள நமக்கு இந்த 22 விதிகள் ஒன்றும் கடிதல்ல என்றும் ஓர்க...

 மேலும் இவற்றுள் பல, நாம் அறிந்தவையே...