இதுவரை ரகர, றகர, லகர, ளகர, ழகர வேறுபாட்டு சொற்களைக் கண்டொம்.
இனி காணவிருப்பது னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்.
னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்
அரன் - சிவன்
அரண் - கோட்டை
அன்னம் - சோறு/ அன்னபறவை
அண்ணம் - வாயின் மேற்பகுதி
ஆனி - ஆனி மாதம்
ஆணி - இரும்பு ஆணி
என்ன - என்ன வேண்டும்
எண்ண - சிந்திக்க / நினைக்க
ஏனை - மற்ற
ஏணை - தொட்டில்
கனம் - பாரம்
கணம் - கூட்டம் / தேவகணம்
கனை - ஒலி / கனைத்தல்
கணை - அம்பு
கன்னி - திருமணமாகாதப் பெண்
கண்ணி - மாலை / பிராணிகளைப் பிடிக்கும் பொறி
தனி - தனிமையான
தணி- குறைதல்
தன்மை - இயல்பு
தண்மை - குளிர்ச்சி
தினை - ஒரு வகை தானியம்
திணை - குலம் / இடம்
தின் - சாப்பிடு
திண் - வலிமை / பலம்
நான் - யான்
நாண் - வெட்கம் / வில்லின் கயிறு
பனி - குளிர்ச்சி
பணி - வேலை
பானம் - குடிக்கும் பானம் / குளிர் பானம்
பேன் - தலையில் வாழும் பேன்
பேண் - காப்பாற்று
மன் - அரசன்
மண் - பூமி/ நிலம்
மனம் - உள்ளம்
மணம் - வாசனை / கல்யாணம்
மனை - வீடு
மணை - அமரும் பலகை
மான் - ஒரு மிருகம்
மாண் - பெருமை
வன்மை - வலிமை
வண்மை - கொடை / ஈகை
சில நகர னகர ணகர வேறுபாட்டுச் சொற்கள்:
இதன் - இதனுடைய ; இதண் - பரண்
உன்னி - நினைத்து; உண்ணி - நாயுண்ணி
என்னாள் - எனது நாள் ; எந்நாள் - எந்த நாள்
கான் - காடு ; காண் - பார்
கன்னி - குமரி ; கண்ணி - தலையில் அணியும் மாலை, தொடரியின் கண்ணி
(கன்னி, குமரி இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே... குமரி என்பதைத் தேவையின்றி குமாரி , குமாரன் என நீட்டி ஆரியமாக வழங்குதல் கூடாது)
இதண் - பரண்,,, காவலுக்காக மூங்கில்களால் கட்டப்படும் உயரமான இடம், வீட்டுப் பரண்
கோன் - அரசன் ; கோண் - வளைவு (கோணம்)
சனம் - ஜனம் (மக்கள்)
சானம் - பெருங்காயம் ; சாணம் - சாணி
துனி - துன்பம்; துணி - ஆடை,
துனை - வேகம்; துணை - உதவி (எத்துணை என்ற வழக்கு காண்க)
நன்னுதல் - நல்ல நுதல் (அழகிய நெற்றி); நண்ணுதல் - பொருந்துதல்
நன்னுதல் வானமென் றாகிட வேயிரு
நாணவில் கோடென தோன்றிடவே
பொண்வண்ணச் செங்கதிர் போலமின் னுஞ்சிறு
பொட்டொன்று சாந்தெடுத்(து) இட்டிடுவாள்.
சிட்டுக்கும்மி:
அம்மா தன் பெண்குழந்தைக்கு சாந்துப்பொட்டு வைக்கிறாள். அவ்வாறு சிவந்த பொட்டு வைத்தவுடன் அப்பெண்ணின் அழகிய நெற்றி வானமாகவும், வில் போன்ற இரு புருவங்கள் மலைகளாகவும், வைத்த அப்பொட்டு அம்மலையிடை எழுகின்ற ஞாயிறாகவும் தோன்றினவாம்.
கடந்த கிழமையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பின் வருமாறு:
1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)
3. னகர ணகர வேறுபாடு:
4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)
5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)
6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)
7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)
இவைகளில் இதுவரை நாம் கற்றறிந்தவை:
1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு.
3. னகர ணகர வேறுபாடு.