லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்களை இனி கண்டறிவோம்.


அலகு - பறவையின் நீண்ட மூக்கு; அழகு - அவள் அழகு, தமிழ் அழகு...

 தவலை - தண்ணீர் எடுப்பது
தவளை - தண்ணீரில் இருப்பது

வாளை - மீன் பெயர்
வாழை - மரத்தின் பெயர்


அலை - கடலலை; அழை - கூப்பிடு

அலைத்தல் - அடித்தல் ; அழைத்தல் - கூப்பிடுதல்

அல்லி - ஒரு பூ; அள்ளி - கையால் அள்ளி

லகர ளகர மெய்களுக்குப் பின் வேறு எந்த மெய்யெழுத்தும் வாரா...

ழகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வரும்

எ-டு; வாழ்த்து, வாழ்க்கை

அளி - கொடு ; அழி - இல்லாமல் செய்...

ஆலம் - ஒரு மரம்; ஆழம் - ஆழமான குளம்

இளி - ஒரு பண்: இழி - இழிவு

இலை - வாழை இலை; இளை - மெலி, இளைப்பு ; இழை - நூலிழை

ஒலி - கேட்கும் ஒலி; ஒளி - காணும் ஒளி; ஒழி - விடு, அழி, துப்புரவாக்கு....


குளம்பு - ஆடு, மாடுகளின் காலில் பகுதி ;

குழம்பு - சோற்றோடு சேர்த்து உண்ணும் உணவு.

(பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உணர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பி என்பதை குளம்பி என்று தமிழாக்க்கம் செய்தாராம்.

 கழை - மூங்கில் குழாய்... கழைக்கூத்தாடி

களை - ஓய்ந்து போதல், பயிர்களுக்கு இடையே வளரும் பயனற்ற செடி...

கலை - தமிழர் கண்ட 64 கலைகள்; என்னசேதிக் குழு (whatsapp) வழியாக தமிழைக் கற்பது இந்த  64க்குள்  வராது ...

உலை - கொதிகலன் boiler (உலை வச்சிட்டேன்... சோறு இப்ப ஆயிரும் என்ற பேச்சு வழக்கு)

உளை - விலங்குகளின் பிடறி மயிர்

உழை - உழைப்பு செய்தல்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்.

ஒல்லி - மெலிந்த , ஒள்ளிய - ஒளி பொருந்திய

உளை - விலங்குகளின் பிடறி மயிர்...


குறுந்தொகை - 121:

"விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா
   
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்"

விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க....


மளைப்பு? மலைப்பு/// மலையை அண்ணாந்து கண்டால் வரும் உணர்வு*....

 விழைதல் - விருமபுதல்

துல்லிய மெல்லிய
துள்ளிய  குதித்த/ ஆடிய

ஈர்ந்தண் - ஒரு பொருள் இருசொல்... ஈரம் - குளிர்ச்சி, தண்மை - குளிர்ச்சி (தண்ணீர் என்பது குளிர்ந்த நீரே...)

இன்றைக்கு, பலர்,  இந்த ஒருபொருள் இருசொல்லை ஆங்கிலம் புகுத்தி சொல்கின்றனர்

butஆனா, gateகதவு, ditchகாவா......


பால் - பசுவின் பால்
பாள் - தாழப்பாள்
பாழ் - வீணாகுதல்

பாலை - நீர் வளமற்ற நிலம்.
பாளை - தென்னை மரத்தின் பூ மடல்

தாலி - மங்கலக்கயிறு
தாளி - சமையலுக்கு தாளித்தல்.
தாழி - பெரிய பானை


லகர ளகர சொற்களைப் பார்க்கும் இவ்வேளையில் லகர ளகர மெய்களை ஈற்றெழுத்தாகக் கொண்ட சொற்களின் புணர்ச்சியையும் சற்று நினைவு கூர்வோம்....

லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி:

நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + கோயில் = கற்கோயில்
முள் + செடி = முட்செடி

(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி – முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழிப் புணர்ச்சியில், (வேற்றுமை உரபு புணர்ச்சி அல்லாதவை அல்வழி என்று முன்னர் கண்டோம்) வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல் இயல்பாயும் வரும்.

சான்று:

கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது
முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது

(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + மனம் = கன்மனம்

வாள் + மாண்டது = வாண்மாண்டது
(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)

தோல் + முரசு = தோன்முரசு
முள் + மலர் = முண்மலர்
(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.

சான்று:

கொல் + யானை
= கொல்யானை

கள் + வழிந்தது = கள்வழிந்தது

(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)

வில் + வளைத்தான்
= வில் வளைத்தான்  வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின் நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர, டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.

சான்று:

கல் + தீது = கற்றீது, கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர, தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.

லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி
சில சிறப்புச் சொற்களுக்கு மட்டுமுள்ள சில சிறப்பு விதிகளைக் காண்க

வேல் + தீது = வேறீது
வாள் + தீது = வாடீது

கால் + கை = கால்கை (காலும் கையும்)
பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)
வேல் + படை = வேற்படை (வேல் ஆகிய படை)
வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )
நெல் + சிறிது = நெற்சிறிது
செல் + கரிது = செற்கரிது
கொல் + கடிது = கொற்கடிது
சொல் + புதிது = சொற்புதிது

இவை பொது விதிகளை மீறி வரும் சொற்களின் புணர்ச்சி என்க



லகர ழகர ளகர  வேறுபாடுகள்:

உளவு - வேவு
உழவு - பயிர்த்தொழில்
உழ - பண்படுத்த
உள - உள்ளன
உழி - இடம்; பக்கம்

 உலுக்கு - குலுக்கு, அசை;
உளுக்கு - சுளுக்கு
உல் - தேங்காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல்கு - சுங்கம்
உள்கு - நினை
உல்லம் - ஒரு மீன்
உள்ளம் - மனம்



 எலும்பு - எலும்பு
எழும்பு - உயர்
எல் - பகல், ஞாயிறு
எள் - ஓர் செடி, நிந்தை

 எள்ளி என்பதை யோர்க



கலம் - பாத்திரம், அளவு
களம் - மிடறு, போர்க்களம்; நெற்களம்; இடம்
கலவு - கூட்டு (கலத்தல்)
களவு - திருட்டு
கலி - ஒலி, வறுமை
களி - மகிழ்ச்சி, ஓர் உணவு
கழி - நீக்கு



கல்வி - படிப்பு
கள்வி - திருடி
காலம் - பருவம்
காளம் - கருமை, நஞ்சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ்ச்சொல்)



கிலி - அச்சம் (இது தெலுங்குச் சொல்)
கிளி - கிளிப்பிள்ளை
கிழி - கிழிப்பாய்



குலை - கொத்து
குழை - தளிர் இலை,, இளகச்செய், சேர்த்துக் குழை


கூலம் - கடைவீதி
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி - பேய், பெருங்கழுகு


கேழ் - ஒப்பு, ஒளி, நிறம்
கேள் - கேட்பாய், உறவு (யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
கேலி - பகடி (கேலி, பரிகாசம் என்பன சமற்கிருத ஆரியச் சொற்கள், பகடி கிண்டல் என்பவை தமிழ்)


 கொலு - நிமிர்ச்சி, குமுகம்
கொழு - ஏரின் முனை, காறு
கொளு - பாட்டின் கருத்தினை விளக்குஞ் சொற்றொடர் (இந்த கொளு என்பதே க்ளூ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியிருக்கக் கூடும்!)

 கொலை - கொல்லுதல்
கொளை - இசைப்பாட்டு
கொல் - கொல்லன், கொல்லு
கொள் - வாங்கு, கொள்ளு எனும் தவசம் (தானியம் என்பது தமிழில் தவசம்)

 கொல்லி - ஒரு மலை
கொள்ளி - நெறுப்புறு விறகு
கொல்லை - தோட்டம்
கொள்ளை - கொலை, விலை


 கோலம் - அழகு, தமிழ்ப்பெண்டிர் வாசலிலிடும் கோலம்
கோளம் - உருண்டை
கோழி - கோழி
கோளி - அத்தி
கோல் - அம்பு, ஊன்றுகோல், எழுதுகோல்
கோள் - புறங்கூறல், கோள் சொல்லுதல்



சுல்லி - அடுப்பு
சுள்ளி - சிறு விறகு



சூலி - பிள்ளைத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம்), சூல் கொண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்

சூலை - ஒரு நோய்
சூளை - செங்கற் சூளை
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற்றிச் சூழ்தல்
சூள் - சூளுரை, ஆணை, அருஞ்சூள் (அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்)... (சபதம் என்பது ஆரியம்)



செதில் - மரச்செதில்
செதிள் - மீன் செதிள்

செல்லு - கழிவு
செள்ளு  - ஒரு பூச்சி , தெள்ளுப்பூச்சி


சோலி - கருமம் (இதுவும் தெலுங்குச்சொல்)
சோளி (பிச்சைக்காரர் பை) ....ஜோல்னா பை என்பது தொங்கு பை இது உருதுச் சொல், ஜோல்னா என்றால் ஊஞ்சலாடுதல்


தாலி - தாலிக்கயிறு
தாளி - பனை
தாழி - குடம், சாடி, (முதுமக்கள் தாழி)


நலி - வருந்துதல், நலிவடைதல்
நளி - நெருக்கம், குளிர்
நல்லார் - நல்லவர்
நள்ளார் - பகைவர்