அறிவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. தொன்மை:

தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.
தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும்.

எட்டாம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் புறப்பொரும் வெண்பா மாலை எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் இடத்து,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

 குறிஞ்சி முல்லை வாணர் மிகப்  பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும்,
இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்
பஃறுளி யாற்றுடன் பன்மைலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழன் தொன்மையும் விளக்குகின்றது.

தொன்மை:

 அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த ஏழ்தெங்க நாடும்,
ஏழ்மதுரை நாடும்,
ஏழ் முன்பாலை நாடும்,
ஏழ் பின்பாலை நாடும்,
ஏழ்குன்ற நாடும்,
ஏழ்கண காரை நாடும்,
ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமெ என்றார் என்று உணர்க’ என்று தொடியோள் பௌவமும் என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்கு இவற்றால் தெரிகின்றன.
இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழியான கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...

2.முன்மை:

முன்மை என்றால் முந்தி நிற்குந் தன்மை என்க...

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு... அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே...

பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்...

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே....

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
- (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்...

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்...

3. எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.


 தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை.  (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான சொற்கள் இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ஷி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

"தண்டலை மயில்க ளாடத்
 தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
 குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத் 
 தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட 
 மருதம்வீற் றிருக்கு மாதோ"

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர்.


ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களே யன்றித் தனியெழுத்துக்களல்ல.

வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார்.


4. ஒண்மை (ஓளிமை);

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து, அதனை நல்வழிப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு இயற்றப்பட்ட திருக்குறளை விட, இதற்கு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர்.
அவையாவன

1. பொய் பேசுதல்,
 2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
 3. தீயசொற்களைப் பேசுதல்
 4. தேவையற்றதைப் பேசுதல் என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.

இதில் பொய் என்பது இல்லறத்தார்க்குத் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதால், வாய்மை என்பதை மட்டும் துறவறவியலில் வைக்கிறார். மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.

பொதுவாக , இல்லற வாழ்க்கையில், சொந்தங்களோடு கூடி வாழ்கையில் வரும் சண்டைகளில், பெரும்பான்மைச் சண்டைகள், இந்த மூன்று வகைப் பேச்சுக்களால் தான் என்பதை நாம் எளிதில் உணரலாம். இத்தகைய, வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்களும் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழ் என்று.


5. இளமை : எழில் கொஞ்சும் இளமை.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்று பாடினார், பேராசிரியர் பெரும்புலவர் மனோன்மணியம் கண்ட பெ.சுந்தரனார்..

மேற்கண்ட பாடலின் பொருள்:

தமிழ்மொழியானது, தன் வயிற்றில் இருந்து பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் இருந்தும், ஆரிய சமற்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து  சிதைந்து போகாது, இன்றும் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது எப்படியுள்ளது என்றால், பல உயிர்களைப் பல உலகங்களைப் படைத்தும் அழித்தும் செய்த செய்கின்ற எல்லாம் வல்ல இறைவன் தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது போலவுள்ளதன்றோ.. அத்தகைய தமிழின் சீரிய இளமையின் திறத்தை வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே.....(பிள்ளை பெற்றவுடன், தாய் முதுமையுறுதல் போல அல்லாமல், முன் இருந்தபடியே இளமையாய் இருக்கும் தமிழின் இளமையைப் போற்றுவது என்றவாறு)

6. வளமை - (சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை)

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,

அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,

கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.

யானையைக் குறிக்க 25 பெயர்கள் உள்ளன.

கன்று,பிள்ளை,குட்டி,குஞ்சு,சேய்,குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே.  யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க.  

அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.

7. தாய்மை; (பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை)

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர்.

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

8. தூய்மை :

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை... பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்பதனை அறிவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.

9. செம்மை - (செழுமை)

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. மக்களுக்கு ஒழுக்க வரம்பு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பு ஆகும். சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.
'என்ன செய்யுற' என்று பேசினாலும், 'என்ன செய்கிறாய்' என்றே எழுதப்படுவது நம் நடைமுறை.
இவ்வாறு இரு நிலைகளாக வேறு மொழிகளில் நடைமுறை இல்லை என்பது தமிழின் செம்மைக்குச் போதிய சான்றாம்.

தமிழில் புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல், மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல், தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய திறமையோடிருத்தலைக் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச் சொல் கன்னடத்தில் மாடுதல் என்னும் வடிவில் பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும்
 கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழ் எழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும், ரகரம் தொகல் (மறைதல்) தெலுங்கிற்கும், பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும் சிறப்பாகும்

எடுத்துக்காட்டு:

மலையாளம்: கஞ்சி - கஞ்ஞி, நீங்கள் - நிங்ங்ள், வந்து -  வந்நு...

தெலுங்கு:பருப்பு -  பப்பு, மருந்து -  மந்து

கன்னடம்: பள்ளி - ஹள்ளி, பாளை -ஹாளெ, பொன்- ஹொன்னு

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்:
ஆயிரம் -ஸகஸ்ர, கலுழன் -கருட(g), கோட்டம்- கோஷ்ட, சாயை -சாயா (ch), தூண்டம் - ஸ்தூணா, மயில் -மயூர முகம்- முக(kh) வட்டம் - வ்ருத்த.

இனனும் விரிவுக்குப், பாவாணரின் ‘செந்தமிழ்ச் சிறப்பு’ என்ற நூலைக் காண்க.


10. மும்மை (இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை)

இயல், இசை,  நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

11. இனிமை

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!

சிலம்பின் இக்கானல்வரிகளே தமிழினினிமைக்குப் போதிய சான்றாம்.


12. தனிமை :

தனித்து இயங்கும் தன்மை.

இது வேறெம்மொழிக்கும் இல்லாத தமிழின் தனிப்பெருஞ் சொத்தாகும்.

தமிழ் மொழியானது வேறு எந்த மொழியின் சொற்களைப் பயன்கொள்ளாமல் தனித்து இயங்கும் தன்மை கொண்ட ஒரே மொழியாகும்.

 ‘மற்ற மொழிகளில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர, அதன் வளம் பெருகும். தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர அதன் வளம் குன்றும்.’

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப்பகைவர்கள் சிலர், ‘தனித்தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி தக்கதாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்?

அட்காக் கமிட்டி, லோக் சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக் கேடானது. வடமொழிச் சொற்களையும் நன்கு பலுக்கும் தமிழனுக்குத் ‘தமிழ் பலுக்க வராது‘ எனக் கூறுவது மானக்கேடாகும்."
தமிழின் சிறப்பு என்ற நூலில் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறியது.


13. நுண்மை :

தமிழின் நுண்மைக்கு, உயிரும் மெய்யும் என்று எழுத்துகளை வகைப்படுத்தியது தொடங்கி கணக்கிலா சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ.

தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியலின் சுருக்கம்:

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப.

என்று மெய்ப்பாடுகள் (மெய் படும் பாடுகள்) எட்டே என்று குறித்ததோடு...

*அவற்றுள் நகை என்பது...

"எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு' என்ப"

என்று நான்கு வழி வருவதே நகை என்றும்...
 
*அழுகை என்பதோ...

"இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே"

*இளிவரல் என்னும் இழிவுறுதல்.  இகழ்வுறுதல் என்பதோ...

மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

*மருட்கை எனப்படும் வியப்புறுதல் என்பதோ...
 
"புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே."
 
*அச்சம் என்பதோ...

அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
 
*பெருமிதம் என்பதோ...

கல்வி, தறுகண், புகழ்மை, கொடை, எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
 
*வெகுளி எனப்படும்  சினத்தல் என்பதோ

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

*உவகை என்பதோ
 
செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.

இவ்வாறான நுட்பமான உளவியல் வரையறைகளை, தன் முதுபழம் நூலான தொல்காப்பியத்துள் வைத்துக் காட்டுவதே, நம் தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

14. திருமை - 'திரு' என்னும் அடை பொருந்தும் தன்மை, தெய்வமாகிய தன்மை.

இன்றைய அளவில், தமிழரைக் காப்பாற்ற, தமிழை விட வேறு தெய்வம் இல்லை என்க.

திருமைக்கு அழகு என்றும் பொருள்.


15. இயன்மை - இயல்பான தன்மை...

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காக படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி... தேவபாடை என்பது போன்றது அல்லாமல் இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால்   உருவானது என்க...
(சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன... தமிழைத் தோற்றுவித்தார் எனப் பாடப்படவில்லை...)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல் அதாவது ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்...


16. வியன்மை - உலகெங்கும் பரவியுள்ள தன்மை ...  சில தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன... எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.

இவையே பாவாணர் தமிழின அரும்பண்புகளாகக் கண்டு சொன்ன பதினாறு குணங்களாகும். நன்றி...


மேலும் படிக்க »

மிதிவண்டி - தமிழ்ச் சொற்கள்

ஒரு மிதிவண்டியில் இத்தனை உதிரி பாகங்களா ? அத்தனைக்கும் தமிழில் சொற்கள் உண்டு . அறிந்து கொள்வோம் !

மிதிவண்டி - தமிழ்ச் சொற்கள்
----------------------------------------------

Tube - மென் சக்கரம் (முடிவில் பார்க்கவும்)
Tyre - வன் சக்கரம் (முடிவில் பார்க்கவும்)
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை ; Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

- முனைவர் அண்ணாகண்ணன்

◆ பி.கு

Tyre - வட்டகை / உருளிப்பட்டை
Tube - காற்றுக் குழாய் / தூம்பு என்பதே மிகச்சரியானது.

நன்றி: திரு.இராசகுமார் சண்முகம்
மேலும் படிக்க »

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???
முதன்முதலில் சொன்னது தமிழ்தான்.
தமிழிலக்கணந்தான் (தமிழ் இலக்கணம் தான்)
எப்படி ?
பந்து என்று  - என்பது எப்படிப் புணரும் ?..
பந்தென்று என்றல்லவா புணரும்..
பந்து என்பது மென்றொடர்க் குற்றியலுகரம்.
சந்து ஒன்று = சந்தொன்று
போந்து ஒன்று = பொந்தொன்று
ஆக பந்து சந்து சிந்து விந்து என்று அனைத்தும் மென்றொடர்க் குற்றியலுகரங்களே.
ஆனால் இந்து என்பது முற்றியலுகரமாகவே ஒலிக்கிறது.
இந்து ஒருவர் = இந்துவொருவர்
இந்து அங்கு = இந்துவங்கு
என்று உயிர் போலவே புணரும்.
ஏனெனில் இந்து என்பது தமிழன்று என்பதால்..
இதனால் தமிழர் இந்துக்கள் அல்ல என்று தமிழே காட்டுகின்றதென்க....
நமக்குத்தான் விளங்கவில்லை.
நம் இலக்கணம் தமிழ்  மொழியை மட்டும் காக்க என்று எண்ணிக் கொண்டுள்ளோம்... அது நம் இனத்தைக் காக்கவல்லது.
இனியாவது இதற்காவது... குற்றியலுகரத்தைத் தமிழர் போற்றவோராக...
-கவினப்பன்
மேலும் படிக்க »

தமிழில் வேர் சொற்கள் எப்படி உருவாயின ?

சுட்டடி வேர் பெரும்...மூலமாக...அமைந்துள்ளது. ஒப்பொலிச் சொல்லாக்கம் வழியும் சொல் உருவாகும். ஊராகச் சுட்டின் வாயிலாக பெரும் பகுதி சொற்கள் உருவாகியுள்ளன.

எ.கா.
அ, இ, உ சுட்டொலி.

க், ச், த், ப், ஞ், ந், ம், முதலிய மொழிமுதல் மெய்கள் ஊகாரச் சுட்டுடன் சேர்கையில் வித்து உருவாகும்.

உ> உல்> க்+உல்= குல்
குல்= கூடல், வளைதல், குத்தல் கருத்து வேர்.

குல்>குலம்.
குலம்= கூடி வாழும் மக்கட் கூட்டம்.

அல், இல், உல் இவையே மூல வேர்கள். இவற்றைப் பிளந்தால் ஊகாரமே மரபணு வேராக நிற்கும்.

ஆ, ஈ, ஊ அண்மை, முன்மை, சேய்மை சுட்டு வேர்கள். இவை மூல உணர்ச்சியொலிகளாகும்.

ஆ > சேய்மை
ஈ> அண்மை
ஊ> முன்மை

ஆ = சீற்றம்
ஈ= இழிவு, மகிழ்வு

ஊ= துன்பம்

பன்னிரண்டு உயிர்கள் உருவாக்கம்.

ஆ~ ஈ~ஊ} மூல உயிர்கள் 3.

ஆ>அ
ஈ>இ
ஊ>உ
 குறிலாய்த் திரிய 6 ஆகின.

ஈ> ஏ எனத் திரியும்.
ஊ> ஓ நெடிலெனத் திரியும்.

ஏ> எ எனவும்
ஓ > ஒ எனவும்
 குறிலாகி மொத்தம் பத்து உயிர்கள் உருவாகின.

பின்னர்,
அ+இ= ஐ

அ+உ= ஔ எனப் புணரொலிகள் தோன்றி பன்னிரண்டு உயிர்களும் உருவாகின.

// /
அரங்கன் ஐயா  : குழந்தைகள் முதலில் நெடில் உயிர்களையே சொல்லமுடிவது போல அல்லவா ஐயா...

திரு வளவன் ஐயா  : ஆம்...ஆம்..தமிழ்...இயற்கை மொழி.

அரங்கன் ஐயா :என் இரு மகள்களுக்கும் ககரம் பலுக்க வர மூன்றாண்டுகளாயிற்று... இன்னமும் கூடச் சிறியவளுக்கு வரவில்லை (நாலாண்டு முடியப்போகிறது) இவ்வாறே தமிழின் தோற்றத்திலும் முதலில் எளிய எழுத்துகளும் பிறகே அனைத்தும் உருவாயின என்பதேதாமே ஐயா..

திரு வளவன் ஐயா : மிகச் சரி. கூர்தலறம்...அவ்வாறே.///

மம் மம்> மம்மம் குழவி வளர்ப்பொலி

மா> மா ஆஅ> அம்மா
தாயின் மார்பில் பால் குடிப்பன எழுப்பிய மூல ஒலி.
இது மென்மை.
வன்மையாயின்...அப்பா என்றாகும்.

ங்கா என்பதும் குழவி வளர்ப்பொலி தானே ஐயா... அருமை....

இங்ஙா....குழவி வளர்ப்பொலியே. குழந்தை அழும் பொழுது எழும் ஒலி. பசிப்பதால் அழுவதாகக் தாய் கருதுவாள். எனவே குழந்தையின் பாலுக்கு இங்ஙா எனும் குழவி வளர்ப்பொலிச் சொல் உருவாகிற்று.

இதனால்தான் தமிழல்லாத மொழிவழி மொழிவரலாறு காண முயல்வது காட்டுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு செல்வது என்பார் பாவாணர் .

Culture என்ற சொல்லுக்கு ஆங்கில அறிஞர்கள் மூலத்தைக் காணவேண்டும் என்றால் தமிழைப் படிக்காது முடியாது...

அதனாற்றான்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ் என்றனர்... வேறு மொழிகளுக்கு இது போன்று பாடவும் முடியாது.. கூறவும் முடியாது...

ஐயப்பாடு : புதிய வேர் சொற்களை நாம் உருவாக்க கூடாதா?

புதிய வேர்கள் உருவாகா. மொழிஞாயிறு ஞா.தேவ நேயப் பாவாணரின் முதற்றாய் மொழி...காண்க.
மேலும் படிக்க »

முகம் ? மூஞ்சி ?

முகம் என்றால் என்னவோ..? மூஞ்சி என்றால் என்னவோ..?
முகம் - மாந்தன்
மூஞ்சி- விலங்கு
மூஞ்சி என்பது மூக்கும் வாயும் மட்டும்
முகம் என்பதோ முகமொத்தமும்...
விலங்குகளுக்கு மூக்குவாய் சற்று முன்னோக்கித் தள்ளப்பட்டிருக்கும்...
கண்ணோடும் செவியோடுஞ் சேர்ந்த மூஞ்சியே முகம் என்பார் பாவாணர் ஐயா...
மேலும் படிக்க »

துன்ப வகைப்பாடு

துன்பம் :

இல்லாது போனதால் உண்டாகுந் துன்பம் = அல்லல்.

தொலைவில் போனதால் உருவாகுந் துன்பம் = தொல்லை.

நெருங்கி இருப்பதால் உண்டாகுந் துன்பம் = நெருக்கடி.

இவற்றில் அந்தந்த சொல்லை தகுந்த இடங்களில் எடுத்து ஆளலாம் ..

- அரங்கன் ஐயா
மேலும் படிக்க »

அறம் பொருள் இன்பம் : வள்ளுவர் மாண்பு

அறம் பொருள் இன்பம் :

தமிழர் தம் வாழ்வில் கொண்டொழுகு பற்றுறுதிகள் மூன்று... அவை அறம், பொருள், இன்பம் என்பவையாம்.

இவற்றின் பொருள் என்ன?

பரந்து விரிந்த, ஆழ்ந்து அகன்ற, பொருள் தரும் இச்சொற்களின் வரையறையை, மணிச்சுருக்கமாக வள்ளுவர் உரைக்கும் மாண்பினைக் காண்க...

அறம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறம் #34

அஃதாவது, மனத்தில் மாசு இல்லாது இருக்கும் நிலையே அறமாகும். அவ்வளவே.

பொருள் :

திறனறிந்து தீதின்றி வந்த பொருள் #754

செய்யும் திறப்பாட்டினை அறிந்து, தீய வழிகளல்லாத நல்வழிகளில் வருவதே பொருள்

இன்பம் :

அறத்தான் வருவதே யின்பம் #39

அறம் வழி நின்று வாழ்தலால் வருவதே இன்பமாகும்.


என்னே வள்ளுவர் மாண்பு!!!

- அரங்கன் ஐயா 
மேலும் படிக்க »

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள்

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு
மேலும் படிக்க »

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் எளிதாக பயில
1 க"டுகு
2 உ"ளுந்து
3 ங"னைச்சு
4 ச"மைச்சு
5 ரு"சிச்சு
6 சா"ப்பிட்டேன்
7 எ"ன்று
8 அ"வன்
9 கூ"றினான்
0 ஓ"என்றேன்
மேலும் படிக்க »

ஏகாரமும் உம்மையையும் : அரங்கன்

ஒரே எழுத்தைக் கொண்ட சொல்லான ஏ எனும் இடைச்சொல்லை நம்மாட்கள் எந்தெந்த வகைகளிலெல்லாம் பயன்கொள்கின்றனர் என்பது பெரிதும் வியப்புக்குரியது அல்லவா .

நான் ஒரு புலவன்
நானே புலவன்
நான் புலவனே
நான் ஒரே புலவன்
நானே ஒரே புலவன்

ஏகாரம் செய்யும் விந்தைகளைக் காண்க.

ஏகாரம் மட்டுமன்று உம் எனும் உம்மையையும் மற்ற இடைச்சொற்களும் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது பாவலர்க்கு மிகத் தேவையானவொன்று.

என்னை உயர்வாகக் கருதினார்
என்னையும் உயர்வாகக் கருதினார்
என்னை உயர்வாகவும் கருதினார்
என்னை உயர்வாகக் கருதவும் செய்தார்
அவரும் என்னை உயர்வாகக் கருதினார்.

இவற்றின் வேறுபாட்டை உணர்க.

பலவேளை பத்து இருபது சொற்கள் சொல்லும் சேதியை ஒரே ஒரு இடைச்சொல் சொல்லிவிடும்...  இடைச்சொற்கள் இருமுனைக் கத்தியைப் போன்றவை என்பதும் கருதவேண்டிய வொன்று...

எடுத்துக்காட்டுக்கு...

எனக்குத் தெரியாது. தாங்களும் முயல்க...

எனக்கே தெரியாது. தாங்களும் முயல்க...

இவ்விரண்டிற்குள் உள்ள வேறுபாடு என்ன...

1. எனக்குத் தெரியாது என்பது உண்மையான ஒப்புதல்.                                                                                                                                                     2. எல்லாம் தேரிந்த எனக்கே தெரியவில்லை என்பது போன்ற ஓர் ஆணவம்.

ஆம்... அது மட்டுமா... முதலில் வரும் தாங்களும் முயல்க என்பதின் உம்மை நான் முயன்றேன் என்பதைச் சொல்கிறது...

இரண்டாவதில் வரும் உம்மையோ... நீ என்ன செய்யப் போகிறாய் என்கிறது...
"எனக்குத் தெரியாது. தாங்கள் முயல்க" என்பதோ இவர் முயற்சியே செய்யவில்லை.. செய்ய விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது...

நன்றி

மேலும் படிக்க »

நூல் ஆசிரியர் காலம் இலக்கண வகை: அரங்கன்

தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐம்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும் என்பதை நாம் அறிவோம்.

தமிழில் இலக்கண நூல்கள் பற்பல பற்பல. அவற்றுள் எண்ணிலடங்காதவை அழிவுற்றன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எஞ்சியதுள் கிடைத்தவை ஐம்பதுக்கும் மேற்பட்டவை. அவற்றுள் சிறப்பான இலக்கண நூல்களின் விவரங்கள் இதோ.

நூல்
ஆசிரியர்
காலம்
இலக்கண வகை

1. தொல்காப்பியம்
தொல்காப்பியர்
கி.மு.4ஆம் நூற்.
எழுத்து, சொல், பொருள் (செய்யுளியலில் யாப்பும் உவமையியலில் அணியும் உள்ளதனால் ஐந்திலக்கணமுமாம்)

2. நன்னூல்
பவணந்தி முனிவர்
13ஆம் நூற்.
எழுத்து, சொல்

3. நேமிநாதம்
குணவீர பண்டிதர்
12ஆம் நூற்.
எழுத்து, சொல்

4. இறையனார் களவியல்
---
7ஆம் நூற்.
அகப்பொருள்

5. நம்பியகப் பொருள்
நாற்கவிராசநம்பி
13ஆம் நூற்.
அகப்பொருள்

6.மாறனகப் பொருள்
குருகைப்பெருமாள் கவிராயர்
16ஆம்நூற்.
அகப்பொருள்

7.புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார்
9ஆம் நூற்.
புறப்பொருள்

8. யாப்பருங்கலம்
அமிர்தசாகரர்
10ஆம் நூற்.
யாப்பு

9. யாப்பருங்கலக் காரிகை
அமிர்தசாகரர்
10ஆம் நூற்.
யாப்பு

19.தண்டியலங்காரம்
தண்டி
12ஆம் நூற்.
அணி

20. மாறன் அலங்காரம்
குருகைப்பெருமாள் கவிராயர்
16ஆம் நூற்.
அணி

21. வீரசோழியம்
புத்தமித்திரர்
11ஆம் நூற்,
ஐந்திலக்கணம்

22. இலக்கண விளக்கம்
வைத்தியநாத தேசிகர்
17ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

23. தொன்னூல் விளக்கம்
வீரமாமுனிவர்
!18ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

24. சுவாமிநாதம்
சுவாமி கவிராயர்
18ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

25. அறுவகை இலக்கணம்
தண்டபாணி சுவாமிகள்
19ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

26. முத்துவீரியம்
முத்துவீர உபாத்தியாயர்
19ஆம் நூற்.
ஐந்திலக்கணம்

27. பன்னிரு பாட்டியல்
---
10ஆம் நூற்.
பாட்டியல்

28. வெண்பாப் பாட்டியல்
குணவீர பண்டிதர்
12ஆம் நூற்.
பாட்டியல்

29. இலக்கண விளக்கப் பாட்டியல்
தியாகராச தேசிகர்
17ஆம் நூற்.
பாட்டியல்

மேலும் படிக்க »

பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர்; என்+தன் = என்றன்; காடு = வனம்?

காடு என்பது சமவெளியிலும் காணப்படும். மரஞ்செடிகொடிகள் வளர்ந்தும் இருக்கும். பட்டுப்போயும் இருக்கலாம். அளவின்றிப் பெருகினாலும் சரி, சிதைந்தாலும் சரி - அது காடாகும். கட்டைகள் மண்ணோடு தீயோடு சிதையுமிடம் என்பதால்தான் இடுகாடு, சுடுகாடு. தானே உருவாகும். முயற்சியாலும் உருவாக்கப்படலாம். 

வனம் என்பது பல்லுயிர்ப் பெருக்கமுள்ள, ஆதியிலிருந்து வளர்ந்து செழித்த பகுதி. வனம் என்பதில் உள்ள வன்மையைக் கவனிக்கவும். கானகம் என்பது மலைப்பாங்கான பகுதியில் இருப்பதைக் குறிப்பது. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தோடு தொடர்புடைய வனப்பகுதி கானகம். 

***************************************************************************************

பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர் - இம்மூன்றும் எங்கெங்கு எப்படியெப்படி வரும் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இவை தொடர்பாக எழும் குழப்பங்களை எளிதில் தீர்க்கலாம்.

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் !

அறிஞர், பொறிஞர், கலைஞர், கவிஞர், வலைஞர்.

இயக்குநர், அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர்.

உறுப்பினர், பொறுப்பினர், படையினர், அணியினர்.

ஞர்-க்கு முன்னொட்டுவது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது.

நர்-க்கு முன்னொட்டுவது அச்செயலுக்குரிய வினைவேர்ச்சொல்லாக இருக்கிறது. கட்டளையிடுகிறது.

னர்-க்கு முன்னொட்டுவது பெயர்ச்சொல்லாக இருந்து இன்+அர் சேர்வதால் பலர்பால் பெயர்ச்சொல்லாகிறது.

நர் சேர்க்குமிடங்களில் ‘உகர’ ஈற்றில் முடியும் வினைவேர்ச்சொல்லாக இருப்பதையும் கவனிக்கவும் (இயக்கு, அனுப்பு, பெறு, ஓட்டு).

************************************************************************************

புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல். 

கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி. 

நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர். 

பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை. 

உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன்.

ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால். 

இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது.

பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை !

ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு !

முகநூல் என்பதை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முயன்றாலும் அது ‘முகனூல்’ என்றே ஒலிக்கும். ஏன் ?

முகம்+நூல், முகம் என்பதில் உள்ள மகர ஈற்று மெய் ‘ம்’ கெட்டு முகநூல் (முகநக நட்பது, முகவரி) என்று புணர்வதுதானே சரி ? முகனூல் எப்படிச் சரியாகும் ? நல்ல கேள்வி.

மகர ஈற்று மெய் - ‘ம்’ என்று முடியும் பெயர்ச்சொற்களில் ம் என்ற எழுத்துக்குப் பதிலாக ன் என்ற மெய்யெழுத்து இடம்பெறும். நலம் என்பதை நலன் எனலாம், திறம் என்பதைத் திறன் எனலாம், வளம் என்பதை வளன் எனலாம், கலம் என்பதைக் கலன் எனலாம். அதுபோலவே முகம் என்பதை முகன் எனலாம்.

சொல்லின் கடைசி எழுத்தாக இருக்கவேண்டியதற்கு மாற்றாக வேறு எழுத்து இடம்பெற்றால் அது கடைப்போலி எனப்படும். முகத்திற்குக் கடைப்போலியான முகன் என்ற சொல்லோடு நூல் சேர்ந்தால் என்னவாகும் ? முகன் + நூல் = முகனூல். (தன்+நலம் = தன்னலம் ஆவதுபோல).

முதலில் ‘வரை’ என்ற சொல்லைப் பற்றிப் பார்ப்போம். வரை என்பதற்கு மலை, வரம்பு, எல்லை ஆகியன நாம் நன்கறிந்த பொருள்கள். 

அவைமட்டுமல்ல. விரல் அளவு, கோடு, எழுத்து ஆகிய பொருட்களும் காணப்படுகின்றன. ஓவியம் வரைந்தேன்’ என்பதில் வரை என்ற சொல் கோடிழுப்பதைக் குறிக்கிறது. கவிதை வரைந்தேன் என்பதில் வரை என்ற சொல் எழுதியதைக் குறிக்கிறது. அடி உதை என்பன வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் ஆவதுபோல் எ சொல் வினையும் ஆகும், பெயரும் ஆகும். விரல் அளவிடத்தால் தீண்டப்படும் கோடு, எழுத்து என்ற விரிவில் ‘வரை’ என்ற சொல் மிகப்பொருத்தமே.

அடுத்து பட்டிகையைப் பார்ப்போம். பட்டிகை என்பதற்கு ‘மார்புக்கச்சை, மேகலை, தெப்பம், தோணி, சீந்திக்கொடி, சித்திரக் கம்பி, தாழை ஆகிய பொருள்களுடன் ‘ஏடு’ என்ற பொருளும் உண்டு. அரச பத்திரங்கள் பட்டிகைகள் எனப்பட்டுள்ளன. நாம் ஏடு என்ற பொருளைத் தேர்ந்துகொள்ளலாம். ஏடு என்றால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கவேண்டியதில்லை. பனையேடு, செப்பேடுகள் உண்டு. எடுபடும் என்பதால் அது ஏடு.

வரைப்பட்டிகை - கோடுகள் எழுத்துகள் எல்லாம் விரல் அளவுக்குள் தோன்றுகின்ற ஏடு’ என்ற பொருள் வருகிறது.
ஆக, டேப்லெட் (Tablet) என்பதற்கு ‘வரைப்பட்டிகை’ என்ற தமிழாக்கமும் 
உண்டு.
**********************************************************************************
என்+தன் = என்றன் 

உன்+தன் = உன்றன்

பலரும் ‘எந்தன், உந்தன்’ என்றே எழுதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் திரைப்பாட்டு எழுதியவர்கள் இசையில் உட்கார வேண்டும் என்று கருதி ‘எந்தன், உந்தன்’ என்றெழுதிவிட்டார்கள். பேச்சு வழக்கில்கூட கொச்சையாக ‘எந்தன் உந்தன்’ என்பதில்லை நாம். வியப்பாக இருக்கிறதா ? பேச்சு வழக்கில் மக்கள் என்றன் உன்றனைப் பயன்படுத்துகிறார்களா ? ஆம். பயன்படுத்துகிறார்கள். கோவைத் தமிழை நினைவுகூட்டிப் பாருங்கள்.

‘என்ற பேச்சக் கேட்பியா மாட்டயா ?’

‘உன்ற அழும்புக்கு அளவேயில்ல போ’

‘என்ற பொழப்பு இப்படியாகிப் போச்சே...’ 

‘உன்ற காட்டுல நல்ல விளைச்சல்தான்...’

இதில் உள்ள என்ற உன்ற - என்றன் உன்றன் தான் ! மக்கள்கூட என்றன் உன்றன் என்னும்போது, எழுதுகிறவர்கள் அறியாமல் தவறாக எழுதுகிறார்கள்.

பேச்சுத் தமிழில் இவ்வாறு ஏராளமான அருஞ்சொற்களும் தூய வழக்குச் சொற்களும் நாமறியாதபடி கலந்திருக்கின்றன.

-மகேசுவரி பெரியசாமி
மேலும் படிக்க »