சொல்லிலக்கணம்

இன்று முதல் சொல்லின் இலக்கணம்...

 சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.

 எல்லா சொல்லும் பொருள்குறித் தனவே - தொல்காப்பியம்.
 அக்கருத்தின் நிகழ்பொருள் திணை எனப்படும். அத்திணை உயர்திணை, அஃறிணை என இரு வகைப்படும்.

 உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே - தொல்காப்பியம்

 மக்கள் உயர்திணை... மற்றவை அஃறிணை...

அவ்வளவே...

இனி இதிலென்ன சிறப்பு எனக் கேட்போர் உண்டெனின், கட்டை விரலை ஆண்பால் என்றும் சிறுவிரலைப் பெண்பால் எனறும் மனைவியைக் குறிக்கும் மூன்று சொற்களில் ஒன்று ஆண்பால் ஒன்று பெண்பால் ஒன்று அலிப்பால் என்றும் வழங்கும் மொழிகள் இங்கு உண்டு என்பதை ஓர்க... இதனையே

"கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சிலஇலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ''

என்று இலக்கிண வரம்பிலா மொழிகளை பரஞ்சோதி முனிவர் குறித்தார் என்க..

இனி இச்சொற்கள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்

என்ற மூன்று அடிப்படைப் பிரிவினவாம்...

உரிச்சொல் என்ற ஒன்றும் உளதாம் என்க...

உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங்க வைக்கும் சொல்.
எ.காட்டு: உறுமீன், சால உண்டான்.


பெயர்ச்சொல்
ஆறு வகைப்படும்.

பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்


 வினைச்சொல்:

தொழில் அல்லது செயலைக் குறிக்கும் சொல்.
எ.கா: நீந்துகிறது.


 இடைச்சொல்:

வாக்கியங்களைக் கருத்தால் இணைக்கப் பயன்படும் சொற்கள்.

எ.கா: உம், ஆனால், ஆகையால், ஏனெனில்


 வட சொல்:

கிரந்த எழுத்துக்களைக் கொண்ட சொல்.
எ.கா: விஷம், ஹனுமான்.

 திசைச் சொல்:

பிறமொழிகளில் உள்ள சொற்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்துதல்.

எ கா: பாக்கி(அரபு), கச்சேரி (இந்தி), பென்சில் (ஆங்கிலம்), அலமாரி(போர்த்துகல்).


இனி திசைச்சொல்லும் வடசொல்லும் தமிழல்ல என்பதனாலும், தமிழின் இலக்கணத்திற்கு அவை ஒவ்வாதவை என்பதாலும், அவை விலக்கப்பட வேண்டியவை என்பதாலுமே தனியாகக் காட்டப்பட்டன என்க...

 எடுத்துக்காட்டுக்கு பந்து என்ற குற்றியலுகரம் ஒலிப்பது போல் இந்து என்ற வடசொல் ஒலிக்காது முற்றியலுகரமாக ஒலிப்பதைக் காண்க... இதனால் குற்றியலுகரப் புணர்ச்சி இலக்கணத்திற்கு இந்து ஒவ்வாது நிற்பதைக் காண்க...
பந்து + இல்லை = பந்தில்லை என்று வர,

இந்து + இல்லை = இந்தில்லை என்று வராமல் இந்துவில்லை என்று மாறி இலக்கணத்தைக் குழப்புதல் காண்க...

இதனால்தான் பிற மொழிச் சொற்களை வழங்குதல் கூடாது என்று அறிஞர் பலர் காக்கைகளாய் கரைந்து நின்றனர் என்று உணர்வோம்....


இனி,

உயர்திணையானது ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.

அவன், வந்தான் - உயர்திணையாண்பால்

அவள், வந்தாள் - உயர்திணைப் பெண்பால்

அவர், வந்தார் - உயர்திணைப் பலர்பால்

பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண் பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.
—-

அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.

அது, வந்தது - அஃறிணையொன்றன்பால்
அவை, வந்தன - அஃறிணைப் பலவின்பால்.

இனி, வினைச்சொல்லாவது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாம்

 வினைச்சொல் ஆறு வகைப்படும்... அவை

1. தெரிநிலை வினைமுற்று - நடந்தாள், உண்கும், பெற்றான்...

2. குறிப்பு வினைமுற்று - பொன்னன், கரியன்.

3. தெரிநிலை பெயரெச்சம் - நடந்த, உண்ட, புகட்டும்....

4. குறிப்புப் பெயரெச்சம் - நல்ல, பெரிய....

5. தெரிநிலை வினையெச்சம் - ஆற்றி, உண்டு, பெறாது ....

6. குறிப்பு வினையெச்சம் - மெல்ல, சரியாய், இன்றி, கனிவாய்...

இனி, இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய மெல்ல

எதிர்மறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.


நடவான் நடவாத நடவாது
இலன் இல்லாத இன்றி

வியங்கோள் வினைமுற்று

க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.

வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.

ககரவிகுதி - வாழ்க
இயவிகுதி - வாழிய
அகரவிகுதி - வர
அல்விகுதி - ஒம்பல்

வாழிய என்பது, ஆ வாழி, தமிழ் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

வா  வருக,
ஓர்தல்  ஓர்க
ஒம்பல்  ஒம்புக,
எனல்  என்க

சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே
நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.

எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க  என்று அல் எனும் இடைநிலை பெற்று வரும்.

கட்டுரை எழுதும்போது ஒரு செய்தியைச் சொல்லி முடித்துவிட்டு வேறொரு செய்திக்குப் போகும்போது "நிற்க." என்ற வியங்கோள் வினைமுற்று போடுதல் கட்டுரையை மேலும் சிறப்பிக்கும்...

வினைப்பகுப்பு:

தன்வினை / பிறவினை

தன்வினையாவது தன் எழுவாயில் உள்ள  செய்வானின் தொழிலை உணர்த்தி நிற்கும்  வினையாம் இத்தன்வினை  செய்வானின் வினையெனப்படும்.

தச்சன் கோயிலைக் கட்டினான், சாத்தனை யடைந்தான்...
 பிறவினையாவது தன் எழுவாய் செய்வான் அல்லாத பிறரின் தொழிலை உணர்த்தி நிற்கும் வினையாம்.

பாலத்தைக் கட்டுவித்தான்.

அரசன் தச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்...
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பல அறிஞர்களுக்கு தமிழைப் பயிற்றுவித்தார்...

இங்கு கட்டுவித்தான், பயிற்றுவித்தார் எனபன பிறவினைகளாம்....

தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் சில வினைச்சொற்கள்:

முதனிலை தன்வினை பிறவினை
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்


இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.

முதனிலை தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான் அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான் கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான் வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான் கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்

 வினையியல் முற்றிற்று...

இடையியல்:

இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
 இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.

எடுத்துக்காட்டு

ஐயோ இறந்தான்

ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.

கொன்றான் கூகூ

என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.

மற்றொன்று

மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.

குழையன்

அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது
〰〰〰〰〰

 இடைச்சொல் வகைகள்:

1) வேற்றுமை உருபுகள்

2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்

3) சாரியைகள்

4) உவம உருபுகள்

5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்

6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்

7) செய்யுளில் அசைநிலையாக வருபவை

8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை

 வேற்றுமை உருபுகள்

முதலில், இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம். வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்ப பொருள் வேறுபடும், அது வேற்றுமை எனப்படும். வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து வருவதில்லை.

எடுத்துக்காட்டு

1) கண்ணன் கண்டான்
2) கண்ணனை (க்) கண்டான்

முதல் சொற்றொடரில் கண்ணன் பார்க்கிறான், இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான்.

முதல் சொற்றொடரில் கண்ணன் எழுவாய்; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள்.

இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு.

இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம்.

இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது.

எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம்.
〰〰〰〰〰〰〰

வேற்றுமை உருபுகள்:
1)
முதல் வேற்றுமை
(எழுவாய் வேற்றுமை)
-------
2)
இரண்டாம் வேற்றுமை

3)
மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
4)
நான்காம் வேற்றுமை - கு
5)
ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
6)
ஆறாம் வேற்றுமை - அது, உடைய
7)
ஏழாம் வேற்றுமை - கண்
8)
எட்டாம் வேற்றுமை - (விளி வேற்றுமை)
-------
எடுத்துக்காட்டு

2) கண்ணனைக் கண்டான் - ஐ - உருபு
3) வாளால் வெட்டினான் - ஆல் - உருபு
4) கூலிக்கு வேலை செய்தான் - கு - உருபு
5) மலையின் வீழ் அருவி - இன் - உருபு
6) கம்பரது பாத்திறம் - அது - உருபு
7) அவையின் கண் இருந்தான் - கண் - உருபு
இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து (இறுதியில்) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும்...
〰〰〰〰〰〰〰

உவம உருபுகள்:

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம்.

உவமை

ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறும்போது அது உவமை ஆகிறது.

எடுத்துக்காட்டு

மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது.

இத்தொடரில் தேன் - உவமை; மொழி - பொருள்; ‘போன்ற’ என்பது உவம உருபு.


உவம உருபுகள்

போல,
புரைய,
ஒப்ப,
உறழ,
மான,
கடுப்ப,
இயைய,
ஏய்ப்ப,
நேர்,
நிகர்,
அன்ன,
இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது.

இன் என்பதும் ஒரு உவமவுருபு... இவை போல இனனும் பல உண்டு என்க...

இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு

தளிர் புரை மேனி (தளிர் போலும் மென்மையான உடல்)

செவ்வான் அன்ன மேனி (செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல்)

வில்லின் புருவம் (வில்லைப் போன்ற புருவம்)
〰〰〰〰〰

இனி பொருளை உணர்த்து சில சிறப்பான இடைச்சொற்களைக் காண்போம்... இவை ஓரெழுத்து ஈரெழுத்துச் சொல்லானாலும் பாரிய பொருள் வேறுபாட்டை உணர்த்தும்.... பாட்டெழுதையிலும், உரைநடையிலும், பேச்சிலும் இவை மிகவும் பயன்படும்... இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்....

〰〰〰〰〰

ஏ எனும் இடைச்சொல்:

ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.

தேற்றம்:
உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.

வினா
நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா

எண்:
நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.

பிரிநிலை:
அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.

எதிர்மறை:
நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.

இசைநிறை:
’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.

ஈற்றசை:
’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.

〰〰〰〰〰〰〰〰
 நத்தை யம்மா நத்தை யம்மா எங்கே போகிறாய்?
அத்தை குளிக்க தண்ணீர் குடம் கொண்டு போகிறேன்
எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான் வேண்டுமானால் பார்த்துக் கொண்டிரு...

அழ.வள்ளியப்பா

 நத்தையம்மா பாடலில் பத்தே நாள்தான் என்பதில் உள்ள ஏ எனும் இடைச்சொல் உணர்த்தும் நுட்பமான பொருளைக் காண்க...



ஓ எனும் இடைச்சொல்:

ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.

(எடுத்துக்காட்டு)

1. ஒழியிசை:

படிக்கவோ வந்தாய்.

இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை.

2. வினா:

அவளின் மகனோ. இங்கே  மகனோ என
வினாப் பொருளைத் தருதலால் வினா.

3. சிறப்பு:
சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும்.

உயர்வு சிறப்பு:

ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு;

இழிவு சிறப்பு:

ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு

4, எதிர்மறை:
அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை

5. தெரிநிலை
ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை.

6, கழிவு:
தமிழர் தம்மைத் தமிழர் என்று என்றைக்குத்தான் உணர்வாரோ...
என்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்

7.பிரிநிலை:
இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவனைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை

8. அசை நிலை:
காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் ஓசைக்காக நிற்றலால் அசை நிலை.


மேலே நாம் ஏகார ஓகார இடைச்சொற்களைக் கண்டோம்...

ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் வேறுபாட்டுப் பொருளைத் தரும்.

வேறுபாட்டாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.



ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் - வீட்டிலாயினுங் பள்ளியிலாயினும் இருப்பேன்
தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடு

 அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.


இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.


காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்

 முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.


காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்

முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும் வழங்கும்.

 வாளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.

வாளா விருந்தான், சும்மா வந்தான்


உம் என்ற இடைச்சொல் பேச்சில் பெருவழக்காய் நிற்பதைக் காண்க... அது கையறு நிலையை உணர்த்தி நிற்கும்

"ஆமா... அப்படியே நீங்க
குடுத்துட்டாலும்......"

.அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.

அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்
எக்கொற்றன், கொற்றனா, யாவன்.

கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

எ-டு.

ஐயம்:

முகங்கொல் மதியம்கொல். இற்கே நிலவோ முகமோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.

அசைநிலை:
கற்றதனா லாய பயனென்கொல்.
இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை

அசை என்பது ஓசைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் தராத இடைச்சொல்லாம்..

அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கேள்; என்னும் பொருளிலும், அசையாகவும் வரும்.

ஒன்று சொல்வேன் கேள் - அம்ம வாழி ’’தோழி“

அசை - ’’ அது மற்றம்ம’’

 தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.


இடப்பன்மை - ஊர்தோறும் தமிழாலயம் கட்டுக...

தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்

தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.

என, என்று

எ-டு:

பிறந்தானென

அழுக்காறென

நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து...

வெள்ளென வெளேறென...

பொள்ளென வாங்கே புறம் வேரார்.

பொம்மென சட்டென...

புலி பாய்ந்ததென பாய்ந்தான்.

என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க..

மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.


நிலலென்றா நீரென்றா தீயென்றா
நிலலென்னா நீரெனாத் தீயெனா
நிலனொடு நீரொடு தீயொடு


 இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.

காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்


 குறிப்பின் வரும் இடைச்சொற்கள்

அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.

துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.

பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.

இடையியல் முற்றிற்று..

கீழ்காணும் பாடலில் வரும் இடைச்சொற்களையும் அவை யொவ்வொன்றும் உணர்த்தும் பொருளையும் காண்க...

இன்றே முடிவுசெய்க எந்தமிழ் நாட்டிலினி
பன்றி யிடும்ஊளை பாடை மொழிப்பீடை
என்றும் ஒலிக்காது,  எங்கும் ஒலிக்காது
என்னவா னாலும் இதுமுடிவே என்றறைக.
தென்னா டுடைய சிவன்மீதே, வானுயர்ந்த
மன்னனாம் எங்கண்மால் செங்கண்ணன் மால்மீதே
குன்றுதொறும் நிற்கும் குமரமுரு கன்மீதே
நன்னருஞ் சூளென்றே நாட்டுவீர் எம்பாவாய்.
ஏ, இனி, உம், ஆம், தொறும் என்பன இப்பாட்டில் உள்ள இடைச்சொற்கள்....

ஏகாரம் மட்டும் ஆறு இடங்களில் வந்துள்ளது....

இடைச்சொற்கள் பாட்டிலும் பேச்சிலும் உரையிலும் பெரும் பயன் தருவன என்று காட்டுவதற்கே இது சொல்லப்பட்டதென்க....

உரிச்சொல்:

இது பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங்க வைக்கும் சொல்.

இது செய்யுளுக்கு மட்டுமே உரித்தான சொல்... பேச்சில் வாரா.

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.

எடுத்துக்காட்டு:
நனி பேதை
-
நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்தது.
நனி = மிகுதி, பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்
-
சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
சால = மிகவும்

மல்லல் ஞாலம்
-
மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்.

கடி மலர்
கடி நகர்

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர், காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்:

சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘மிகுதி’ என்னும் ஒருகுணத்தை (பொருளை) உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன.

🌺🌺🌺🌺

சால என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“சாலவும் நன்று” - மிகவும் நல்லது

🌸🌸🌸

 உறு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உறு பொருள் கொடுத்தும்” (மிகுதியான பொருளைக் கொடுத்தும்)

🌺🌺🌺

தவ என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“ஈயாது வீயும் உயிர் தவப் பலவே”

(பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர்).

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்:

நனி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்”

(கல்லாதவர்களும் மிக நல்லவர்களே, கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால்)
🌸
கூர் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“களி கூர் மனம்” (மகிழ்ச்சி மிகுந்த மனம்)

இன்றைய எழுத்து வழக்கிலும் ‘அன்பு கூர்ந்து’, ‘அருள் கூர்ந்து’ என வருவதைக் காணலாம்.
🌸
கழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கழி பேருவகை” (மிகப் பெரும் மகிழ்ச்சி)

செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘கழி நெடிலடி’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள்.

கடி என்னும் உரிச்சொல்:

கடி எனும் உரிச்சொலானது  காவல், கூர்மை, விரை (வாசனை), விளக்கம் (ஒளி வீசும் இயல்பு), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும்.

காவல்

கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து.

இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது.
🌸
கூர்மை

கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு.

இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
விரை (மணம்):

கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி

இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது.
🌸
விளக்கம்

விளக்கம் என்பது இங்கு ஒளி எனும் பொருள் தருவது.

‘கண்ணாடி அன்ன கடி மார்பன்’

ஒளி பொருந்திய மார்பு கொண்டவன். கடிமார்பன் என்பதில் கடி, விளக்கம் என்ற பொருளில் வருகிறது.
🌸
அச்சம்

‘கடி யாமம் காக்கும் கைவிளக்கு’

அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள். இங்குக் கடி, அச்சம் எனும் பொருளில் வருகிறது. (யாமம் = நள்ளிரவு)
🌸
சிறப்பு

‘கடி அரண்’

வலிமையான கோட்டை என்பது பொருள். இங்குக் கடி என்பது சிறப்பு (வலிமை) எனும் பொருளில் வருகிறது.
🌸
விரைவு

விரைவு = வேகம்.

‘எம் அம்பு கடி விடுதும்’

இத்தொடரின் பொருள், எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம். இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
மிகுதி

‘கடுங்கால் ஒற்றலின்’

மிகுதியான (கடுமையான) காற்று வீசுவதால் என்பது பொருள். இங்குக் கடி (கடும்) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது.
🌸
புதுமை

‘கடி மணச் சாலை’

புதுமை மணம் நிறைந்த இடம். இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது.
🌸
ஆர்த்தல்

ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள்.

‘கடி முரசு’ = ஒலிக்கும் முரசு.

இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது.
🌸
வரைவு

வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள்.

‘கடிமது நுகர்வு’

கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல். இத்தொடரில் கடி, விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
மன்றல்

மன்றல் என்றால் திருமணம் என்று பொருள்.

‘கடிவினை முடுகு இனி’

திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள். இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது.
🌸
கரிப்பு

கரிப்பு, காரச் சுவையைக் குறிக்கும். கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு.

‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’

கடிமிளகு = காரமான மிளகு. காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள். இங்குக் கடி, கார்ப்பு எனும் பொருளில் வந்தது.

இவ்வாறு, கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் கண்டோம்...😊