பன்னாடையிற் படிந்தவை 3/11/15 -30/11/15

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை : 30/11/15

1. தேனின்னி பண்பல்லவா - தேனின் பண்பல்லவா
2. சோதனை - சிக்கல்/தடை (மகேசம்மா உதவுக)
3. அனுபவிக்க - துய்க்க
4. நான் ஒரு வணிகர் - நான் ஒரு வணிகன்
5. விளைகிறேன் - விழைகிறேன்
6. அறிஞரகளின் - அறிஞர்களின்
7. ஆளவிலை - ஆளவில்லை
8. இவத்தை - இவற்றை
9. அயர் சொல் - அயற்சொல்
10. யோசியுங்கள் - சிந்தியுங்கள்
11. ஆதங்கம் - ஏக்கம் (அம்மா - உதவுக)
12. ஆர்வளர்கள் - ஆர்வலர்கள்
13. இந்த பிழையை - இந்தப் பிழையை (அந்த/இந்த என்ற சுட்டுகளின் முன்னும் எந்த என்ற வினாவையும் அடுத்து வரும் வல்லினம் வரும்)
14. இப்படி பழகிவிட்டோம் - இப்படிப் பழகிவிட்டோம்
15. அதிகம் - நிறைய
16. தவறகுமாம்மா - தவறாகுமா அம்மா
17. வயழியாக - வழியாக
18. மலேசியாவை சேர்ந்தவள் - மலேசியாவைச் சேர்ந்தவள்
19. தாமதமாக - காலம்தாழ்த்தியே (மகேசம்மா உதவுக)
20. இசைப்பாட்டு தானே - இசைப்பாட்டுத் தானே
21. குலூர் - சூலூர்
22. கல்வியறிவாற்றலை கற்பிப்பவர் - கல்வியறிவாற்றலைக் கற்பிப்பவர்
23. இரவரின் பதில் - இருவரின் விடை
24. வித்தியாசம் - வேறுபாடு

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை - 27/11/15

1.  பிள்ளைகளை பிரியாது - பிள்ளைகளைப் பிரியாது - (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
2.  வெளளத்தை - வெள்ளத்தை
3.  பிரமிப்பாகவும் - வியப்பாகவும்/மலைப்பாகவும்
4.  விடுப்பு கொடுக்கப் - விடுப்புக் கொடுக்கப் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
5.  சுயமதிப்பீடு - தன்மதிப்பீடு
6.  அதுகளுக்கு - அவைகளுக்கு
7.  நேற்றுதான் - நேற்றுத்தான் (வன்றொடர்க் குற்றியலுகரத்தை யடுத்து வரும் வல்லின மிகும்}
8.  வாக்கெடுப்பு - கருத்தெடுப்பு
9.  சுவாச - மூச்சு
10.  அனுபவிக்க - துய்க்க
11.  நான்கினக்கும் - நான்கினுக்கும்
12.  விளைகின்றேன் - விழைகின்றேன்
13.  அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணாப் பல்கலைக்கழகம் (இயல்பாக விளிவேற்றுமையில் முடிந்த பெயரை அடுத்து வரும் வல்லினம் மிகும்}
14.  கலைக்களஞ்சியத்தை செழுமை - கலைக்களஞ்சியத்தைச் செழுமை (இரண்டாம் வே. உருபை அடுத்து வரும் வல்லின மிகும்)
15.  கவிதை - பா
16.  இலங்கலை - இளங்கலை

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15

1.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2.  விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3.  கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4.  எனக்குல் - எனக்குள்
5.  மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6.  பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7.  உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8.  இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9.  பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10.  இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11.  எழுத கூடாது - எழுதக் கூடாது
12.  சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13.  எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14.  சகோதரி - அக்கை/ தங்கை
15.  கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16.  சாமியார் - முனிவர்/துறவி
17.  மகான் - பெருமகன்
18.  விமர்சனம் - கருத்துரைப்பு
19.  பயணம் - செலவு
20.  நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21.  நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22.  இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23.  வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24.  மலை இடது - மலை யிடத்து
25.  ஒப்பிடே - ஒப்பீடே
26.  மாயையக்கு - மாயைக்கு
27.  கல்யாணமான - மணமான
28.  நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29.  கைமாறு - கைம்மாறு
30.  வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31.  பயம் - அச்சம்
32.  சிரிய- சிறிய
33.  கிராமமாக - சிற்றூராக
34.  பதில் வணக்கம் - விடை வணக்கம்
35.  வ்லலினம் - வல்லினம்
36.  பெருகிஓர் - பெருகியோர்
37.  நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38.  தெரியவில்லைங் - தெரியவில்லை
39.  நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40.  எபபடிப் - எப்படிப்
41.  முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42.  அதிகம் - கூடுதல்
43.  வின்வ - வினவ
44.  பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45.  வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46.  அத்துணை கான - அத்துணைக்கான
47.  வாசிக்க - படிக்க
48.  நாகரிம் - நாகரிகம்
49.  வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 18/11/15

1.  தீபாவளி கொண்டாட்டத்திற்கு - தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு
2.  விரிவுப் படுத்தி - விரிவு படுத்தி
3.  கலந்துக் கொள்ள - கலந்து கொள்ள
4.  எனக்குல் - எனக்குள்
5.  மகிழ்ச்சிம்மா - மகிழ்ச்சியம்மா
6.  பெற்றோற்களுக்கு - பெற்றோர்களுக்கு
7.  உரிமைக் கொண்டாடுவார்கள் - உரிமை கொண்டாடுவார்கள்
8.  இதற்கு புணர்ச்சி - இதற்குப் புணர்ச்சி
9.  பலுக்கி பார்த்து - பலுக்கிப் பார்த்து
10.  இந்த பண்ணி எப்படி வந்தது - இந்தப் பண்ணி எப்படி வந்தது
11.  எழுத கூடாது - எழுதக் கூடாது
12.  சொறகளுக்கும் - சொற்களுக்கும்
13.  எல்லா படங்களும் - எல்லாப் படங்களும்
14.  சகோதரி - அக்கை/ தங்கை
15.  கோடீஸ்வரர் - கோடியளவு செல்வர் (அம்மா.. அருளியாரின் உதவி தேவை..)
16.  சாமியார் - முனிவர்/துறவி
17.  மகான் - பெருமகன்
18.  விமர்சனம் - கருத்துரைப்பு
19.  பயணம் - செலவு
20.  நல்லதை செய்து - நல்லதைச் செய்து
21.  நடைமுறை பேச்சு - நடைமுறைப் பேச்சு
22.  இங்கு பதியும் - இங்குப் பதிக்கப்படும்
23.  வர தவறினாலும் - வரத் தவறினாலும்
24.  மலை இடது - மலை யிடத்து
25.  ஒப்பிடே - ஒப்பீடே
26.  மாயையக்கு - மாயைக்கு
27.  கல்யாணமான - மணமான
28.  நிலவை சுட்டும் - நிலவைச் சுட்டும்
29.  கைமாறு - கைம்மாறு
30.  வாக்கியங்களில் - சொற்றொடர்களில்
31.  பயம் - அச்சம்
32.  சிரிய- சிறிய
33.  கிராமமாக - சிற்றூராக
34.  பதில் வணக்கம் - விடை வணக்கம்
35.  வ்லலினம் - வல்லினம்
36.  பெருகிஓர் - பெருகியோர்
37.  நூற்றிக்கணக்கான - நூற்றுக்கணக்கான
38.  தெரியவில்லைங் - தெரியவில்லை
39.  நிர்வாகம் - நிருவாகம்/ ஆளுநர்குழு
40.  எபபடிப் - எப்படிப்
41.  முடியாமல் தொங்கும் - முடிக்கப்படாமல் தொங்கும்
42.  அதிகம் - கூடுதல்
43.  வின்வ - வினவ
44.  பொறுத்தளிர்க - பொறுத்தருள்க
45.  வீட்டுபேசி - வீட்டுப் பேசி
46.  அத்துணை கான - அத்துணைக்கான
47.  வாசிக்க - படிக்க
48.  நாகரிம் - நாகரிகம்
49.  வந்த்தெப்படி - வந்ததெப்படி

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 11/11/15

1.  முறையோயென்று - முறையோவென்று
2.  பகிர்ந்துக் கொண்டே - பகிர்ந்து கொண்டே (மென்றொடர்க் குற்றியலுகர வீற்றின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது, பகிர்ந்து கொண்டே என்பது வினையெச்சத் தொடர்- அல்வழிப் புணர்ச்சி, எனவே மிகாது)
3.  சிறப்பியல்பை பயன்படுத்தாமல் - சிறப்பியல்பைப் பயன்படுத்தாமல் (இயல்பை என்ற இரண்டாம் வேற்றுமை யுருபுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்)
4.  காலை பணிவு - காலைப் பணிவு
5.  ராமாயணம் - இராமாயணம்
6.  தட்டச்சு செய்து - தட்டச்சுச் செய்து
7.  மங்குள் - மங்குல்
8.  நிறைவ - நிறைவாக
9.  தபாவளியை பற்றி பல - தீபாவளியைப் பற்றிப் பல
10.  பண்டிகை - விழா
11.  பிரத்த - பிரித்த

பன்னாடையில் இக்கிழமை படிந்தவை: 3/11/15

1. இதை துதி பாட்டாய் - இதை வழுத்துப் பாட்டாய்
2. இவையினைக் - இவற்றைக்
3. வேலைப் பழு - வேலைப் பளு
4. அதை தனியொரு - அதைத் தனியொரு
5. வரவில்லயா - வரவில்லையா
6. காட்டுகின்றீகளா- காட்டுகின்றார்களா
7. இலகுவாக - எளிதாக (அருளியாரிடம் பாருங்கள் அம்மா)
மேலும் படிக்க »

பன்னாடையிற் படிந்தவை என்றால் என்ன ?

உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள். பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும்நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கள் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் 
நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.
 
"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம்பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண்கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு
ருமை,பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும்அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வ
ர் பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.
மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோம . அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும்கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.
ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக்கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்.

பன்னாடை= சல்லடை:

எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே..... நம் குழுவிலும் வருகின்றன... ஆயினும் அதனை நேரடியாகச் சொல்வது சிலவேளை கசப்பில் முடியலாம்... திருத்தப்படாத பிழைகளைச் சொல்லாமல் விடவும் முடியாது... ஏனென்றால் இதுவே சரி என்று எண்ணிவிடக்கூடும்.

எனவே, ஒரு நாள் முழுக்க, குழுவில் போடப்படும் செய்திகளில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் ஆரிய/பிறமொழிச் சொற்களை அடுத்த நாள் முதல் வேலையாகப் பட்டியலிட்டுக் கொள்வோம்... எழுதியவர் இன்னார் என்று குறிப்பிடாது பிழையும் திருத்தமும் மட்டும் போடப்படும்.. இப்பொறுப்பை யாரேனும் ஏற்க முன்வருக...  யாரும் முன்வரவில்லையாயின் நானே ஏற்றுக் கொள்கிறேன்...  என்ன.. சரிதானே நண்பர்களே... நன்றி..."

-அரங்கன் 
மேலும் படிக்க »

மரபு வழுக்கள் / மரபுத் தொடர்


மரபு வழுக்கள் / மரபுத் தொடர் இரண்டும் ஒரே பொருளா...?

வழு என்றால் குற்றம்....

மரபு வழு என்றால் மரபை ஒழுகாது எழுதுவது பேசுவது

மரபுத் தொடர் என்றால் மரபு இதுதான் என்று உணர்த்தும் தொடர்

எ-டு:

மரபு வழு - வாழைச்செடி
மரபுத்தொடர் - வாழைக்கன்று


இனி சில மரபு வழுக்களையும் அதற்கான திருத்தங்களையும் பார்ப்போம்......

 மரத்தை வெட்டு
தக்காளியை நறுக்கு

 தக்காளியை வெட்டு என்பது வழு... தவறு...

 விறகுகளைக் கட்டு
பூக்களைத் தொடு

பூக்களைக் கட்டு என்பது வழு... அதாவது தவறு... கட்டுவது என்பது கடினமான பொருட்களையே...

பூவைத் தொடுக்க வேண்டும் என்ற தமிழின் நுட்பம் காண்க....

 〰〰〰

 கீற்று/பத்து    தேங்காய் பத்து கொஞ்சம் குடு.... பூசணிக்காயை கீற்று கீற்றாய் நறுக்கி வை


விறகை எரி
குப்பையைக் கொளுத்து
விளக்கை ஏற்று

விளக்கைக் கொளுத்து என்றால் அது வழு....



நுங்கினைச் சீவு
இளநீரைச் சீவு
தலையை வாரு...

தலையைச் சீவு என்பது வழு... நுங்கு வெட்டிக் குடு என்பதும் வழு....

ஒரே காம்பில் திரண்டிருக்கும் பூவை கொத்து என்றும் பழத்தை குலை என்றும் அழைத்தல் மரபு...

ஓன்று - பல:

பூ - கொத்து
பழம் - குலை
மரம் - தோப்பு
வெவ்வேறு மரங்கள் - சோலை
ஆடு - மந்தை
மனிதன் - கூட்டம்
யானை - பந்தி
மலை - தொடர்
கல் - குவியல், கற்குவியல்
நாற்று - முடி
மயிறு - கற்றை
கடை - சந்தை

 〰〰〰〰

கற்களை ஓர் இடத்தில் திரட்டும்போது பரப்பிப்போட மாட்டார்கள குவித்தே போடுவார்கள், எனவே கற் குவியல். யானைகள் ஒன்று சேரும்போது வரிசை வரிசையாகவே சேரும். எனவே யானைப் பந்தி. விறகைத் திரட்டி உறுதியான கயிற்றால் (கொடியால்) இறுக்கிக் கட்டுகிறோம் எனவே விறகுக் கட்டு. நாற்றை அப்படி இறுக்கிக் கட்டினால் சிதைந்து போகும். எனவே மெதுவாக அவைகளில் சில நாற்றுகளைக் கொண்டே மென்மையாக முடிந்து வைக்கிறார்கள். ஆகவே அது நாற்று முடி.

 〰〰〰〰〰

செயல்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வடிவம் பருவம் என்னும் அடிப்படையிலும் சொல்லாட்சி அமைய வேண்டும்.

ஓர் இலையின் பல்வேறு பருவங்களைத்
தளிர்
இலை
பழுப்பு
சருகு

என்னும் வேறு வேறு சொற்களால் குறிக்கிறோம். இந்தச் சொற்களைச் சொன்னவுடனேயே நமக்கு அதன் தோற்றமும் விளங்கிவிடுகிறது.

 அரும்பு
முகை
மொட்டு
மலர்
அலர்
வீ
செம்மல்

என்னும் சொற்கள் நமக்குப் புதுமையாகத் தோன்றும். ஆனால் நமது முன்னோர்கள் மலரின் பல்வேறு பருவங்களை இந்தத் தனித்தனிச் சொற்களாலேயே குறித்து வந்தார்கள். மலரும் பருவத்தில் உள்ள பூவையே மலர் என்றார்கள். நன்றாக விரிந்தது அலர். அலர்ந்து வாடிய தோற்றத்தில் இருப்பது வீ. வாடிச் சுருண்டு கீழே விழுந்தபின் அது செம்மல் என்றே சொல்லப்பட்டது.


ஆட்டுப் பாகன் ? ஆட்டிடையன்///
யானை இடையன்? யானைப் பாகன்///
குதிரைக்கன்று? குதிரைக்குட்டி////
ஆக்குட்டி (பசுவின் குட்டி) - ஆக்கன்று (பசுவின் கன்று) (பசு ஆரியம் - ஆ - தமிழ்; ஆவின் பால் - பசுவின் பால்)
தென்னங்கன்று ? தென்னம்பிள்ளை///
வேப்பம்பிள்ளை? வேப்பங்கன்று///
பனம்பிஞ்சு ? பனங்குரும்பை///
புளியங்குரும்பை? புளியம்பிஞ்சு
மா ஓலை - மாவிலை
பனை இலை? பனையோலை///
குருவிக்குட்டி? குருவிக்குஞ்சு///
நாய்க்குஞ்சு? நாய்க்குட்டி///
மான் குட்டி? மான் கன்று///
யானைச்சாணம்? யானை இலத்தி
எருமை இலத்தி? எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம்? ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம்? கழுதை விட்டை


ஆண்பால் பெண்பால்

அச்சன் அச்சி
அண்ணன் அண்ணி
அப்பன் அம்மை
அமைச்சன் அமைச்சி
அம்மான் அத்தை
அரசன் அரசி (ராஜா, ராணி ஆரியம் என்க)
ஆசிரியன் ஆசிரியை
ஆயன் ஆய்ச்சி
இடையன் இடைச்சி
உழவன் உழத்தி
ஊமையன் ஊமைச்சி
எம்பி எங்கை
எயினன் எயிற்றி
ஒருவன் ஒருத்தி
ஓதுவான் ஓதுவாள்

 ஆண்பால் பெண்பால்

கடுவன் மந்தி (குரங்கின் ஆணும் பெண்ணும்)
கடா    - கிடாரி, மறி (ஆடு)
கணக்கன் - கணக்கச்சி
கணவன் - மனைவி
கரியன் கரியள்
கலை - பிணை (மானின் ஆணும் பெண்ணும்)
காளை - ஆ (மாட்டின் ஆணும் பெண்ணும், பசு என்பது ஆரியம)
கிழவன் - கிழவி
குறவன் - குறத்தி
குரவன் - குரவள் (தலைவன்)
கூனன் - கூனி
கூகை - போந்து
கொழுந்தன் - கொழுந்தி (மைத்துனன்/ மச்சான்/ மைத்துனி/ மச்சினி/ மச்சி என்பதெல்லாம் ஆரியம்; மச்சான் என்பதை அளியன்/கொழுந்தன் என்றே வழங்குதல் வேண்டும்)

சிறுவன் - சிறுமி
சிவன் - சத்தி
சிறியன் - சிறியள்
சிறுக்கன் - சிறுக்கி
சிற்றப்பன் - சிற்றன்னை
சீமான் - சீமாட்டி (இவை இரண்டும் ஸ்ரீமான் என்ற ஆரியத்தின் அடி பிறந்தவையே)

சேவல் - பெட்டை (கோழியின் ஆணும் பெண்ணும்)
தச்சன் - தச்சச்சி
தம்பி - தங்கை
திருமால் - திருமகள்
திருவாளன் - திருவாட்டி (திருமதி என்பதன் மதி ஆரியமே, மதி என்பது நிலவு, அறிவு என்ற பொருளிலேயே தமிழில் வழங்கும், பெண் எனும் பொருளில் வழங்குதல் ஆரியத்தில் மட்டுமே)

மருத்துவன் - மருத்துவச்சி
மாமன் - மாமி
வீரன் - வீரி
மேலும் படிக்க »

னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்


இதுவரை ரகர, றகர, லகர, ளகர, ழகர வேறுபாட்டு சொற்களைக் கண்டொம்.

இனி காணவிருப்பது  னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்.


னகர, ணகர சொற்களின் வேறுபாடுகள்

அரன் - சிவன்
அரண் - கோட்டை

அன்னம் - சோறு/ அன்னபறவை
அண்ணம் - வாயின் மேற்பகுதி

ஆனி - ஆனி மாதம்
ஆணி - இரும்பு ஆணி

என்ன - என்ன வேண்டும்
எண்ண - சிந்திக்க / நினைக்க

ஏனை - மற்ற
ஏணை - தொட்டில்

கனம் - பாரம்
கணம் - கூட்டம் / தேவகணம்

கனை - ஒலி / கனைத்தல்
கணை - அம்பு

கன்னி - திருமணமாகாதப் பெண்
கண்ணி - மாலை / பிராணிகளைப் பிடிக்கும் பொறி

தனி - தனிமையான
தணி- குறைதல்

தன்மை - இயல்பு
தண்மை - குளிர்ச்சி

தினை - ஒரு வகை தானியம்
திணை - குலம் / இடம்

தின் - சாப்பிடு
திண் - வலிமை / பலம்

நான் - யான்
நாண் - வெட்கம் / வில்லின் கயிறு

பனி - குளிர்ச்சி
பணி - வேலை
பானம் - குடிக்கும் பானம் / குளிர் பானம்

பேன் - தலையில் வாழும் பேன்
பேண் - காப்பாற்று

மன் - அரசன்
மண் - பூமி/ நிலம்


மனம் - உள்ளம்
மணம் - வாசனை / கல்யாணம்

மனை - வீடு
மணை - அமரும் பலகை

மான் - ஒரு மிருகம்
மாண் - பெருமை

வன்மை - வலிமை
வண்மை - கொடை / ஈகை


சில நகர னகர ணகர வேறுபாட்டுச் சொற்கள்:

இதன் - இதனுடைய ; இதண் - பரண்
உன்னி - நினைத்து; உண்ணி - நாயுண்ணி
என்னாள் - எனது நாள் ; எந்நாள் - எந்த நாள்

கான் - காடு ; காண் - பார்
கன்னி - குமரி ; கண்ணி - தலையில் அணியும் மாலை, தொடரியின் கண்ணி
(கன்னி, குமரி இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே... குமரி என்பதைத் தேவையின்றி குமாரி , குமாரன் என நீட்டி ஆரியமாக வழங்குதல் கூடாது)

இதண் - பரண்,,, காவலுக்காக மூங்கில்களால் கட்டப்படும் உயரமான இடம், வீட்டுப் பரண்

 கோன் - அரசன் ; கோண் - வளைவு (கோணம்)
சனம் - ஜனம் (மக்கள்)
சானம் - பெருங்காயம் ; சாணம் - சாணி

 துனி - துன்பம்; துணி - ஆடை,
துனை - வேகம்; துணை - உதவி (எத்துணை என்ற வழக்கு காண்க)

 நன்னுதல் - நல்ல நுதல் (அழகிய நெற்றி); நண்ணுதல் - பொருந்துதல்

நன்னுதல் வானமென் றாகிட வேயிரு
நாணவில் கோடென தோன்றிடவே
பொண்வண்ணச் செங்கதிர் போலமின் னுஞ்சிறு
பொட்டொன்று சாந்தெடுத்(து) இட்டிடுவாள்.

சிட்டுக்கும்மி:

அம்மா தன் பெண்குழந்தைக்கு சாந்துப்பொட்டு வைக்கிறாள். அவ்வாறு சிவந்த பொட்டு வைத்தவுடன் அப்பெண்ணின் அழகிய நெற்றி வானமாகவும், வில் போன்ற இரு புருவங்கள் மலைகளாகவும், வைத்த அப்பொட்டு அம்மலையிடை எழுகின்ற ஞாயிறாகவும் தோன்றினவாம்.


கடந்த கிழமையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பின் வருமாறு:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)
3. னகர ணகர வேறுபாடு:
4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)
5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)
6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)
7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)


இவைகளில் இதுவரை நாம் கற்றறிந்தவை:

1. ரகர றகர வேறுபாடு
2. லகர ழகர ளகர வேறுபாடு.
3. னகர ணகர வேறுபாடு.


மேலும் படிக்க »

லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்களை இனி கண்டறிவோம்.


அலகு - பறவையின் நீண்ட மூக்கு; அழகு - அவள் அழகு, தமிழ் அழகு...

 தவலை - தண்ணீர் எடுப்பது
தவளை - தண்ணீரில் இருப்பது

வாளை - மீன் பெயர்
வாழை - மரத்தின் பெயர்


அலை - கடலலை; அழை - கூப்பிடு

அலைத்தல் - அடித்தல் ; அழைத்தல் - கூப்பிடுதல்

அல்லி - ஒரு பூ; அள்ளி - கையால் அள்ளி

லகர ளகர மெய்களுக்குப் பின் வேறு எந்த மெய்யெழுத்தும் வாரா...

ழகர மெய்க்குப்பின் மெய்யெழுத்து வரும்

எ-டு; வாழ்த்து, வாழ்க்கை

அளி - கொடு ; அழி - இல்லாமல் செய்...

ஆலம் - ஒரு மரம்; ஆழம் - ஆழமான குளம்

இளி - ஒரு பண்: இழி - இழிவு

இலை - வாழை இலை; இளை - மெலி, இளைப்பு ; இழை - நூலிழை

ஒலி - கேட்கும் ஒலி; ஒளி - காணும் ஒளி; ஒழி - விடு, அழி, துப்புரவாக்கு....


குளம்பு - ஆடு, மாடுகளின் காலில் பகுதி ;

குழம்பு - சோற்றோடு சேர்த்து உண்ணும் உணவு.

(பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உணர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பி என்பதை குளம்பி என்று தமிழாக்க்கம் செய்தாராம்.

 கழை - மூங்கில் குழாய்... கழைக்கூத்தாடி

களை - ஓய்ந்து போதல், பயிர்களுக்கு இடையே வளரும் பயனற்ற செடி...

கலை - தமிழர் கண்ட 64 கலைகள்; என்னசேதிக் குழு (whatsapp) வழியாக தமிழைக் கற்பது இந்த  64க்குள்  வராது ...

உலை - கொதிகலன் boiler (உலை வச்சிட்டேன்... சோறு இப்ப ஆயிரும் என்ற பேச்சு வழக்கு)

உளை - விலங்குகளின் பிடறி மயிர்

உழை - உழைப்பு செய்தல்


லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்.

ஒல்லி - மெலிந்த , ஒள்ளிய - ஒளி பொருந்திய

உளை - விலங்குகளின் பிடறி மயிர்...


குறுந்தொகை - 121:

"விரியுளைப் பொலிந்த வீங்குசெலல் கலிமா
   
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயல்"

விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி வண் பரி மா தயங்க - அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க....


மளைப்பு? மலைப்பு/// மலையை அண்ணாந்து கண்டால் வரும் உணர்வு*....

 விழைதல் - விருமபுதல்

துல்லிய மெல்லிய
துள்ளிய  குதித்த/ ஆடிய

ஈர்ந்தண் - ஒரு பொருள் இருசொல்... ஈரம் - குளிர்ச்சி, தண்மை - குளிர்ச்சி (தண்ணீர் என்பது குளிர்ந்த நீரே...)

இன்றைக்கு, பலர்,  இந்த ஒருபொருள் இருசொல்லை ஆங்கிலம் புகுத்தி சொல்கின்றனர்

butஆனா, gateகதவு, ditchகாவா......


பால் - பசுவின் பால்
பாள் - தாழப்பாள்
பாழ் - வீணாகுதல்

பாலை - நீர் வளமற்ற நிலம்.
பாளை - தென்னை மரத்தின் பூ மடல்

தாலி - மங்கலக்கயிறு
தாளி - சமையலுக்கு தாளித்தல்.
தாழி - பெரிய பானை


லகர ளகர சொற்களைப் பார்க்கும் இவ்வேளையில் லகர ளகர மெய்களை ஈற்றெழுத்தாகக் கொண்ட சொற்களின் புணர்ச்சியையும் சற்று நினைவு கூர்வோம்....

லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சி:

நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரியும்.

அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + கோயில் = கற்கோயில்
முள் + செடி = முட்செடி

(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி – முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழிப் புணர்ச்சியில், (வேற்றுமை உரபு புணர்ச்சி அல்லாதவை அல்வழி என்று முன்னர் கண்டோம்) வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல் இயல்பாயும் வரும்.

சான்று:

கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது
முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது

(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)

இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்


லகர,ளகர மெய்யீற்றுப் புணர்ச்சி:

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.

சான்று:

கல் + மனம் = கன்மனம்

வாள் + மாண்டது = வாண்மாண்டது
(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது – வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)

தோல் + முரசு = தோன்முரசு
முள் + மலர் = முண்மலர்
(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை ; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம் வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.

சான்று:

கொல் + யானை
= கொல்யானை

கள் + வழிந்தது = கள்வழிந்தது

(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)

வில் + வளைத்தான்
= வில் வளைத்தான்  வேற்றுமை

தோள் + வலிமை = தோள் வலிமை

(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை; தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)


லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி

தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின் நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர, டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.

சான்று:

கல் + தீது = கற்றீது, கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது

இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர, தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.

லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி – சிறப்பு விதி
சில சிறப்புச் சொற்களுக்கு மட்டுமுள்ள சில சிறப்பு விதிகளைக் காண்க

வேல் + தீது = வேறீது
வாள் + தீது = வாடீது

கால் + கை = கால்கை (காலும் கையும்)
பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)
வேல் + படை = வேற்படை (வேல் ஆகிய படை)
வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )
நெல் + சிறிது = நெற்சிறிது
செல் + கரிது = செற்கரிது
கொல் + கடிது = கொற்கடிது
சொல் + புதிது = சொற்புதிது

இவை பொது விதிகளை மீறி வரும் சொற்களின் புணர்ச்சி என்க



லகர ழகர ளகர  வேறுபாடுகள்:

உளவு - வேவு
உழவு - பயிர்த்தொழில்
உழ - பண்படுத்த
உள - உள்ளன
உழி - இடம்; பக்கம்

 உலுக்கு - குலுக்கு, அசை;
உளுக்கு - சுளுக்கு
உல் - தேங்காய் உரிக்கும் கருவி
உள் - உட்புறம்
உல்கு - சுங்கம்
உள்கு - நினை
உல்லம் - ஒரு மீன்
உள்ளம் - மனம்



 எலும்பு - எலும்பு
எழும்பு - உயர்
எல் - பகல், ஞாயிறு
எள் - ஓர் செடி, நிந்தை

 எள்ளி என்பதை யோர்க



கலம் - பாத்திரம், அளவு
களம் - மிடறு, போர்க்களம்; நெற்களம்; இடம்
கலவு - கூட்டு (கலத்தல்)
களவு - திருட்டு
கலி - ஒலி, வறுமை
களி - மகிழ்ச்சி, ஓர் உணவு
கழி - நீக்கு



கல்வி - படிப்பு
கள்வி - திருடி
காலம் - பருவம்
காளம் - கருமை, நஞ்சு (காளமுகில் ; காளம் ஒரு அரிய தமிழ்ச்சொல்)



கிலி - அச்சம் (இது தெலுங்குச் சொல்)
கிளி - கிளிப்பிள்ளை
கிழி - கிழிப்பாய்



குலை - கொத்து
குழை - தளிர் இலை,, இளகச்செய், சேர்த்துக் குழை


கூலம் - கடைவீதி
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி - பேய், பெருங்கழுகு


கேழ் - ஒப்பு, ஒளி, நிறம்
கேள் - கேட்பாய், உறவு (யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
கேலி - பகடி (கேலி, பரிகாசம் என்பன சமற்கிருத ஆரியச் சொற்கள், பகடி கிண்டல் என்பவை தமிழ்)


 கொலு - நிமிர்ச்சி, குமுகம்
கொழு - ஏரின் முனை, காறு
கொளு - பாட்டின் கருத்தினை விளக்குஞ் சொற்றொடர் (இந்த கொளு என்பதே க்ளூ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியிருக்கக் கூடும்!)

 கொலை - கொல்லுதல்
கொளை - இசைப்பாட்டு
கொல் - கொல்லன், கொல்லு
கொள் - வாங்கு, கொள்ளு எனும் தவசம் (தானியம் என்பது தமிழில் தவசம்)

 கொல்லி - ஒரு மலை
கொள்ளி - நெறுப்புறு விறகு
கொல்லை - தோட்டம்
கொள்ளை - கொலை, விலை


 கோலம் - அழகு, தமிழ்ப்பெண்டிர் வாசலிலிடும் கோலம்
கோளம் - உருண்டை
கோழி - கோழி
கோளி - அத்தி
கோல் - அம்பு, ஊன்றுகோல், எழுதுகோல்
கோள் - புறங்கூறல், கோள் சொல்லுதல்



சுல்லி - அடுப்பு
சுள்ளி - சிறு விறகு



சூலி - பிள்ளைத் தாச்சி (கர்ப்பிணி என்பது ஆரியம்), சூல் கொண்ட முகில்
சூழி - உச்சி
சூளி - ஆண்மயிர்

சூலை - ஒரு நோய்
சூளை - செங்கற் சூளை
சூல் - கருவுறுதல்
சூழ் - சுற்றிச் சூழ்தல்
சூள் - சூளுரை, ஆணை, அருஞ்சூள் (அன்னைத் தமிழ்மேல் அருஞ்சூள் உரைத்தெழுந்தோம்)... (சபதம் என்பது ஆரியம்)



செதில் - மரச்செதில்
செதிள் - மீன் செதிள்

செல்லு - கழிவு
செள்ளு  - ஒரு பூச்சி , தெள்ளுப்பூச்சி


சோலி - கருமம் (இதுவும் தெலுங்குச்சொல்)
சோளி (பிச்சைக்காரர் பை) ....ஜோல்னா பை என்பது தொங்கு பை இது உருதுச் சொல், ஜோல்னா என்றால் ஊஞ்சலாடுதல்


தாலி - தாலிக்கயிறு
தாளி - பனை
தாழி - குடம், சாடி, (முதுமக்கள் தாழி)


நலி - வருந்துதல், நலிவடைதல்
நளி - நெருக்கம், குளிர்
நல்லார் - நல்லவர்
நள்ளார் - பகைவர்
மேலும் படிக்க »

குறளோவியங்கள் : குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

26|11|2015

வியாழன்    போற்றுதும்
வியாழன்    போற்றுதும்,
விரிந்த   வுலகையும்
விண்ணையும்   போற்றுதும்!
அன்புடை   மையி
னருமை      போற்றுதும்,
அன்புடன்    பொருந்திய
வாருயிர்     போற்றுதும்!
அன்புடை    யாரி
னுடம்பும்      போற்றுதும்,
அன்பினால்  பெற்றிடு
மார்வமும்    போற்றுதும்!
அறமே       பொருந்திய
வன்பினைப்   போற்றுதும்,
மறத்திற்    குமன்பே
முறையெனப்    போற்றுதும்!
அன்பில்    லாரை
யழிக்கு    மறமென
நன்றா     யுரைத்த
மறைமொழி   போற்றுதும்!
இன்பந்   தந்திடு
மன்பைப்    போற்றுவோம்,
அன்புட   னிணைந்த
உயிர்நிலை     போற்றியே!
வியாழனைப்   போற்றுவோம்
வியாழனைப்   போற்றுவோம்,
விடியும்     வேளை
வந்ததாய்ப்    போற்றியே!!

மேலும் படிக்க »

இலக்கணப்படி செய்யுள் எழுதுவது எப்படி ?

காரி    போற்றுதும்!
         காரி     போற்றுதும்!
மாரி     போற்றுதும்!
         மாரி     போற்றுதும்!


மழையா      லுலக
          மாட்சி   பெறுவதால்
மழையே     யமிழ்தென
           மேவிப்    போற்றுதும்!


துய்ப்பார்க்குத்      துய்க்கும்
            துய்பொரு    ளாக்கித்
துய்ப்பார்க்குத்        தானே
             துய்பொரு    ளுமாகி,
விரிநீ        ருலகத்து
              வாழு    முயிர்க்கெலாம்
வாழ்வு       தந்திடும்
               வான்மழை    போற்றுதும்!


உழவு        செய்வோர்க்
               குதவிகள்   புரிந்தே
வுலகோர்க்      கெல்லா
               முண்ணு   முணுவுக
ளீந்தவர்       பசிநீக்கு
                முயர்மழை    போற்றுதும்.


மாரி்      போற்றுதும்!
           மாரி    போற்றுதும்!
காரி     போற்றுதும்!
           காரி     போற்றுதும்!


*******************************************


காரி    போற்றுதும்!
மாரி     போற்றுதும்!

 (அஃறிணை உயிரீறுகளின் முன் வல்லினம் வந்தன... இவை இரண்டாம் வே.தொகைகள்.. எனவே வலி மிகாது வந்தன... )

மழையா லுலக

(உடன்மேல் உயிர் ஏறியது.. மழையால் உலகம்)

மாட்சி   பெறுவதால்
(அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது... )

மழையே  யமிழ்தென
 (உடம்படுமெய் புணர்ச்சி... யகரம் ஏறியது.. )
         
மேவிப்    போற்றுதும்!
( அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இஃது நாலாம் வேஂதொகை.. எனவே வலி மிகுந்தது- மேவித்துப் போற்றுதும் என விரிக்க..)

துய்ப்பார்க்குத்      துய்க்கும்
(வன்றொடர்க் குற்றியலுகர முன் வல்லின மிகும்)
           
துய்பொரு    ளாக்கித்
 (துய்பொருள் வினைத்தொகை - துய்த்த/துய்க்கின்ற/துய்க்கும் என விரிக்க... அல்வழி... யகரவீற்றினை யடுத்து வரும் வல்லினம் அல்வழியில் மிகாது... எனவே மிகாது வந்தது)


துய்ப்பார்க்குத்        தானே
( ஆக்கித் துய்ப்பவார் - இகரவீற்று வினையெச்சமடுத்த வல்லினம் மிகும்; துப்பார்க்குத் -வன்றொடர்க் குற்றியலுகர முன் வல்லின மிகும்)

 துய்பொரு    ளுமாகி, (துய்பொருள் - இதுவுமது; பொருளும் ஆகி - உடல்மேன் உயிர் ஒன்றியது)

விரிநீ        ருலகத்து
( நீர் உலகத்து -உடல்மேன் உயிர் ஒன்றியது)
             
வாழு    முயிர்க்கெலாம் ( வாழும் உயிர்- உடல்மேன் உயிர் ஒன்றியது; உயிர்க்கு எலாம் - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது)

வாழ்வு       தந்திடும்
 (இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது...
             
வான்மழை    போற்றுதும்! (இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது... )

உழவு        செய்வோர்க் (உயிர்த்தொடர்க் குற்றுகரத்தை யடுத்து வரும் வல்லினம் இருவழியும் மிகாது.. எனவே உழவு செய் என மிகாது வந்தது)

குதவிகள்   புரிந்தே (செய்வோர்க்கு உதவி - செய்வோர்க்குதவி - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது)

வுலகோர்க்      கெல்லா (புரிந்தே உலகோர் - ஏகாரமுன் உயிர் வரின் யகர/வகர வுடம்படு மெய் ஏதேனும் வரும்... இங்கு வகரமெடுத்தது ஆசிரியர் தேர்வு ; உலகோர்க்கு எல்லாம் - உலகோர்க்கெல்லாம் - - குற்றுகரமடுத்து உயிர் வந்ததால் அக்குற்றுகங் கெட்டது )

முண்ணு   முணுவுக (எல்லாம் உண்ணு / உண்ணும் உணவு- உடன்மேல் உயிரொன்றின;)

ளீந்தவர்       பசிநீக்கு (உணவுகள் ஈந்தவர் / நீக்கும் உயர்- உடன்மேல் உயிர் ஒன்றின)

முயர்மழை    போற்றுதும். (மழை போற்றுதும் - அஃறிணை உயிரீற்றின் முன் வல்லினம் வந்தது... இரண்டாம் வே.தொகை.. எனவே வலி மிகாது வந்தது...

மாரி்      போற்றுதும்!
           மாரி    போற்றுதும்!
காரி     போற்றுதும்!
           காரி     போற்றுதும்!
(மேலே சொல்லப்பட்டது)
மேலும் படிக்க »

வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள்


சொற்றொடர்களில் வல்லெழுத்துக்களான "க், ச், த், ப்," மிகுந்து வருதலையே சுருக்கமாக வலிமிகுதல் எனப்படுகிறது. வலிமிகுதலால் சொற்றொடர்களில் பொருள் வேறுபாடு உண்டாகும். "தந்த பலகை" என்னும் தொடருக்கும் "தந்தப் பலகை" என்னும் தொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
தந்த பலகை என்பது கொடுத்த பலகை என்றும், தந்தப் பலகை என்பது தந்தத்தால் ஆன பலகை என்று பொருள்படும்.

🌹🌹

 வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள். 1 - 14
1) அ, இ, எ, இந்த, எந்த, அங்கு, இங்கு, ஆங்கு, இங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு, அப்படி, இப்படி, எப்படி,
ஆகிய சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
அ+காட்சி = அக்காட்சி
இ+படம் = இப்படம்
எ+சங்கம் =எச்சங்கம்
அந்த+பையன்=அந்தப் பையன்
பாதி+துணி= பாதித்துணி

 2) வந்தொடரக் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
பட்டு + புடவை=
பட்டுப்புடவை
விற்று + தந்தார்  = விற்றுத் தந்தார்

3) நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வலிமிகும்

 எ.காட்டு

கனா + கண்டான் = கனாக் கண்டான்
பலா + பழம் = பலாப்பழம்
4) முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
முழு + பாடல் = முழுப்பாடல்
நடு + தெரு = நடுத்தெரு

5) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்

எ.காட்டு
பேசா - பையன்= பேசாப் பையன்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை

 6) அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகும்.

எ.காட்டு
செய்ய + சொல் = செய்யச்சொல்

ஆட + கண்டான் = ஆடக் கண்டான்
ஆடி + பாடினான் = ஆடிப் பாடினான்

 7) ஆய், போய் என முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்
எ.காட்டு
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
வருவதாய் + கூறினான்=
வருவதாய்க் கூறினான்


8) இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) க்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
மானை + பார் = மானைப் பார்
நாயை + துரத்து = நாயைத் துரத்து

9) நான்காம் வேற்றுமை உருபு (கு) க்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச் சென்றான்
அவனுக்கு + கொடு = அவனுக்குக் கொடு

 10) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும். (நிலைமொழியில் ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய, ஆகியவை மறைந்து நிற்கும்)

எ.காட்டு
நாய் + குட்டி = நாய்க்குட்டி
யானை + தந்தம் = யானைத் தந்தம்
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்

11) உவமைத் தொகையில் வலிமிகும். ( உவமை உருபுகளான போல, போன்ற, ஒப்ப, நிகர முதலியவை நிலைமொழியில் மறைந்து நிற்கும்)

எ.காட்டு
மலை + தோள் = மலைத்தோள்
மலர் + கை = மலர்க்கை

 12) பண்புத் தொகையில் வலிமிகும்.
எ.காட்டு
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
சதுரம் + பலகை = சதுரப்பலகை

 13) நிலைமொழி சிறப்பு பெயராகவும், வருமொழி பொதுப் பெயராகவும் வரும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலிமிகும்.

எ.காட்டு
தை + திங்கள் = தைத்திங்கள்
பலா + பழம் = பலாப்பழம்

14) ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும்.

எ.காட்டு
தீ + சட்டி = தீச்சட்டி
கை + குட்டை = கைக்குட்டை
பூ + கூடை = பூக்கூடை



இவை வலிமிகும் இடங்களைக் கண்டு கொள்ள எளிய வழிகள்...
மூன்றாவதற்கும் பதினான்குக்கும் விலக்குகள் உள்ளன... மற்றவற்றை முடிபாகக் கொள்ளலாம்... நன்றி...
மேலும் படிக்க »

ரகர றகர வேறுபாட்டுக் குறிப்புகள்: பிழை கடிதல்


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...

எழுத்துப் பிழைகளும் திருத்தங்களும் என்ற தலைப்பில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு பதிவுகள் வரவேற்கப்படுகின்றன...

பெரும்பாலும் எழுத்துப் பிழைகளும் சொற்பிழைகளும் கீழ்காணும் பிரிவுகளில் அடக்கி விடலாம். அவையாவன

1. ரகர றகர வேறுபாடு (எ.டு - கருப்பா? கறுப்பா?; பயிற்ச்சியா பயிற்சியா? பயிர்ச்சியா?; வரையரையா? வறையரையா? வரையறையா? என்பன போன்ற குழப்பங்களால் வரும் பிழைகள்.

2. லகர ழகர ளகர வேறுபாடு: (எ.டு: கலை, களை, கழை...)

3. நகர னகர ணகர வேறுபாடு: (என்னாள் என்பதா எந்நாள் என்பதா?)

4. மரபு வழுக்கள் (எ-டு: தென்னங்கன்றா? தென்னஞ்செடியா? தென்னம்பிள்ளையா?)

5. புணர்ச்சி (எ-டு: கயிறு கட்டிலா? கயிற்றுக்கட்டிலா? கயிறுக்கட்டிலா?)

6. ஒருமை பன்மைப் பெயர்கள் (கிளிக்களா, கிளிகளா, கிளிகள் பறந்தது சரியா, கிளிகள் பறந்தன சரியா?)

7. சமற்கிருதச் சொற்களால் வரும் குழப்பங்கள் (எ-டு: கர்ப்பம் கர்பம், கருப்பம் எது சரி?...)

இவ்வேழு பிரிவுகளில் பெரும்பான்மை பிழைகளை வகைப்படுத்திக் கொள்வோம். பின்னர் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம் என்பதே வரும் கிழமைக்கான திட்டம் என்க...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்
றகரம் - வல்லினம்)

🌸 குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 🌸  குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

 🌸 குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:
(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 🌸  குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

ரகர றகர வேறுபாடு குறிப்புகள்:

(ரகரம் - இடையினம்
றகரம் - வல்லினம்)

🌸 குறிப்பு 1.

றகர மெய் தன் உயிர்மெய்யோடு (றகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வரும்; ரகர மெய் தன் உயிர்மெய்யோடு (ரகர உயிர்மெய்யோடு) சேர்ந்து வாரா.

எ-டு: குற்றம், விற்றான், புற்று, நெற்றி....

 🌸  குறிப்பு 2.:

றகரம், னகர மெய்க்குப் பின் வரும்; ரகரம் னகர மெய்க்குப் பின் வாரா.

எ-டு: குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்

றகரத்திற்கு னகரம் இனம் ஆகும். அதனால்தான் நெடுங்கணக்கில் றகரமும் னகரமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, றகரமும் னகரமும் அக்காள் தங்கை என்று நினைவிற் கொள்க... இனவெழுத்துக்களைப் பற்றி எழுத்ததிகாரத்தில் நாம் கண்டதை ஓர்க..

 🌸 குறிப்பு 3.

றகரமும் சரி ரகரமும் சரி சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

எ-டு:
(பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*)

ரங்கன்?  அரங்கன்/// அரங்கம்*

ராமன்? இராமன்///

ரோமம்? உரோமம்///

 🌸  குறிப்பு 4.

றகர மெய் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாக வாரா. ரகர மெய் வரும்.

எ-டு: நீர், வேர், பார்,...

🌸 குறிப்பு 5.

னகர மெய்யை ஈற்றிலுடைய சொற்களும் லகர மெய்யை ஈற்றிலுடைய சொற்களும் நிலைமொழியாய் நிற்க, வல்லெழுத்து வருமொழியாய் வரின் றகரம் தோன்றும். ரகரம் தோன்றா.

எ-டு: பொன் + கொல்லன் = பொற்கொல்லன்
 கல் + சட்டி = கற்சட்டி
 பல் + பொடி = பற்பொடி

🌸 குறிப்பு 6:

றகர மெய்க்குப் பின் (ற் எனும் மெய்யெழுத்துக்குப் பின்), க, ச, ப, ற என்னும் நான்கு உயிர்மெய்கள் மட்டுமே வரும். மற்றவை வாரா.

எ-டு: நிற்க, முயற்சி, வெற்பு, உற்றார்

ரகர மெய்க்குப் பின் (ர் எனும் மெய்யெழுத்துக்குப் பின்) க, ங, ச, ஞ, த, ந, ப, ம,ய,வ எனும் இப்பத்து உயிர்மெய்களும் வரும். மற்றவை வாரா...(ட, ண, ர, ல, ழ, ள, ற, ன எனும் உயிர்மெய்கள் வாரா)

எ-டு: வேர்கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர்நீண்டது, வேர்பெரிது, வேர்மாண்டது, வேர்வலிது, வேர்யாது.

ரகர றகர வேறுபாட்டுக் குறிப்புகள்:

🌺 குறிப்பு 7:

 ரகர மெய், தனி உயிர்க் குற்றெழுத்தின் பின்னாவது, தனி உயிர்மெய்க் குற்றெழுத்தின் பின்னாவது நில்லாது. றகரம் அவ்வாறு நிற்கும்

தனி உயிர்க் குற்றெழுத்து - அ, இ, உ, எ, ஒ
தனி உயிர்மெய் குற்றெழுத்து - க, கி, கு, கெ, கொ, ச, சி, சு.....முதலியன

எ-டு: உற்றார், சுற்றார்

அர்ச்சனை, கர்ப்பம், தர்ப்பை என்பன இவ்விதிப்படி தவறு என்பது காண்க. இவை தமிழல்ல என்பதை தமிழே காட்டிவிட்டதென்க...

அர்ச்சனை? அருச்சனை///
கர்ப்பம்? கருப்பம்///
தர்ப்பை? தருப்பை///

 🌺 குறிப்பு 8:

றகர மெய்ய்க்குப் பின் மெய்யெழுத்து வராது. வராது. வராது. உயிர்மெய் மட்டுமே வரும்.

பயிற்ச்சி? பயிற்சி///
வரவேற்ப்பு? வரவேற்பு///
வரவேற்பிற்க்கு? வரவேற்பிற்கு///
அதற்க்கு? அதற்கு///

ரகர மெய்க்குப்பின் மெய்யும் வரும், உயிர்மெய்யும் வரும்

எ-டு: ஆர்க்கும், அயர்ச்சி, தேர்வு

🌺  குறிப்பு 9:

றகரம் தமிழ் மொழிக்கே சிறப்பானது. ரகரம் பல மொழிகளில் உண்டு
எ-டு: பிராமணர் (வடமொழி)
 அலமாரி (போர்த்துக்கேசியம்)
 கரம் = சூடு (இந்துசுதானி)
 பிரின்சிபால் = தலைவர் (ஆங்கிலம்)
எனவே ரகரம் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுத வேண்டி வந்தால் றகரம் இடாது ரகரமே இட வேண்டும்.

🌺 குறிப்பு 10:

றகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் அழுத்தமான ஓசையை உடையனவாய் இரு
க்கும். ரகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் வன்மையோசையும் மென்மையோசையும் அல்லாத நடுத்தர ஓசையினை உடையதாக இருக்கும்

எ-டு:
அரு - அருமை; அறு - துண்டி
அரை - பாதி; அறை - அடி
இரத்தல் - யாசித்தல்; இறத்தல் - சாதல்
இரங்கு - மனமிரங்கு; இறங்கு - கீழே இறங்கு


ரகர றகர வேறுபாடு:


அரம் - ஓர் ஆயுதம்; அறம் - நன்மைகளின் மொத்தவுருவாகத் தமிழர் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறை (இல்லறம், துறவறம்)
அரமனை - அரசன் வீடு; அறமனை - அறச்சாலை
அரி - திருமால்; அறி - அறிந்துகொள்
அரிவை - பெண்; அறிவை - அறிவாய்
அரு - அருமையான; அறு - துண்டி
அருகு - நெறுக்கம்; அறுகு - அறுகம்புல்
அருவி - மலையருவி; அறுவி - அறச்செய்
அரை - பாதி; அறை - வீட்டின் அறை, கன்னத்தில் அறை
அலரி - ஒருவகைப் பூ; அலறி - கதறி

ஆர - நிறைய; ஆற - தணிய
ஆரல் - ஒருவகை மீன் ; ஆறல் - தணிதல்

 இர - யாசி; இற - சாகு, கட
இரகு - ரகு என்ற பெயர்; இறகு - பறவையின் சிறகு
இரங்கு - மனமிரங்கு; இறங்கு - கீழிறங்கு
இரத்தல் - பிச்சையெடுத்தல்; இறத்தல் - சாதல், கடத்தல் (கட என்றால் தாண்டிச் செல் என்பது பொருள்)
இரவு - இராத்திரி,
இறவு - சாதல்
இரு - உட்கார்;
இறு - வடிகட்டு, ஒடி (இரண்டும் வினைச்சொற்கள்)
இரு - இரண்டு
இருக்கு - ஆரிய வேதம்; இறுக்கு - அழுந்தக் கட்டு
இருப்பு - நிலைமை (கையிருப்பு);
இறுப்பு - குடியிறை, தங்குதல், கடன் செலுத்துதல்.
இரும்பு - இரும்பு; இறும்பு - சிறுமலை, வியப்பு (இறும்பூது)
இரை - உணவு;
இறை - கடவுள், அரசன், வரி
ஈர் - இழு (ஈர்ப்பு);
ஈறு - முடிவு, கடைசி எழுத்து;
 ###
உரல்- உரல்; உறல் - அடைதல்
உரவு - வலிமை; உறவு - சொந்தம்
உரி - பட்டை; உறி - பண்டங்கள் வைக்கும் தூக்கு (உறியடித்தல்)
உரிய - உரிமையான; உறிய - உறிஞ்ச
உரு - உருவம்; உறு - பொருந்து, ஓர் உரிச்சொல்
உருக்கு - இளகச்செய்; உறுக்கு - கோபி
உருமு - இடி; உறுமு - உறுமுதல், அரிமா எழுப்பும் ஒலி (அரிமா - சிங்கம்)
   உரை - சொல், தேய் (உரைகல்), பாட்டுரை; உறை - பை, மூடிவைக்கும் பொருள்.

ஊர - நகர, பரவ;
ஊற - சுரக்க (ஊற்று)
எரி - தீ; எறி - வீசு
ஏரி - பெரிய குளம்;
ஏறி - மேல் ஏறி

கரி - அடுப்புக்கரி, கரிய- கருப்பு நிறத்ததான, கருமை, கரிக்கட்டை , கரிதல் - தீய்ததல், கரிச்சாங்குருவி, கரி நாள், கரிபூசு, கரிசல், கரும்பு, கரிய, கரியமான், கருகல், கருக்கம் - கார்மேகம், கருங்குரங்கு, கருநாகம், கருமணி - கணணின் கருப்பு விழி, கருமயிர், கருமுகில் என கருமையைக் குறிக்கும் எண்ணற்ற சொற்கள் இடையின ரகரத்தையே ஆண்டு வருதல் காண்க...

ஆயினும், கறுப்பு என்று சொல்வது பெருவழக்கு ஆகிவிட்டமையால் கறுப்பு என்பதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம். எனவே கறுப்பு என்பதும் சரி என்றே கொள்க....

வேறு அனைத்து கருமை சார்ந்த பயன்பாட்டுக்கும் றகரம் இடாது ரகரமே இடவேண்டும் என்றோர்க....

🌸🌸🌸🌸🌸🌸

சபையில் சான்றோருக்கு ஒரு தாழ்மையான கேள்வி.

கேள்வி இதுதான்....

கருமை சார்ந்த அனைத்து பயன்பாடுகளுக்கும் ரகரமே வரும்போது கறுப்பு என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் றகரம் வந்தது சிலரது பிழையாலேயே என்பது தெளிவு... இதனை நாம் ஏற்றுக்கொள்வதா? எதிர்ப்பதா? என்பதே கேள்வி....

 கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்...

என்று தொல்காப்பியமும் கறுப்பு என்பது கறுவுதல் கோபப்படுதல் என்றே காட்டுகிறது...

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். - 312

என்ற குறளிலும் கறுத்து என்பது கறுவு கொண்டு என்ற பொருளிலேயே வந்துள்ளது...

தமிழில் 'கறுமை' என்ற சொல் 'கரிய' என்ற பொருளில்  இல்லாமையால், 'கருமை' என்றே வழங்குதலால், விடை கிடைக்கும் வரை, கரிய நிறத்தை கருமை என்றும் கருப்பு என்றுமே நாம் வழங்குவோம்.....

ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள் சிலவற்றை நேற்று கண்டோம்.
இவற்றுள் சில சொற்களுக்கு ரகர றகரத்தை மாற்றிப் போட்டு எழுதினால், பொருள் தலைகீழாகக் கூட மாறக்கூடும் என்பதால் இவ்வேறுபாட்டுச் சொற்களைப் படித்தும், மனதில் அசை போட்டும், பிரித்து உணர்ந்தும், ஒரு சொற்றொடராக்கிப் பார்த்தும், ஒலித்தும் பழகிக்கொள்வது மிகவும் தேவை.

 எழுத்துப் பிழைகள் வருவது இயல்பே. அவ்வெழுத்துப் பிழைகள் இரு வகைப்படும்.

ஒன்று, நாம் எழுதும் போதே இது சரியா தவறா என்ற குழப்பத்தைத் தோற்றுவிக்கும் பிழைகள்... இதைச் சரி செய்வது எளிது.. ஏனென்றால் கேள்வி நமக்குத் தோன்றிவிட்டது. விடையை சிறு முயற்சி மூலம் கண்டு கொள்ளலாம்.

மற்றொன்று, நாம் எழுதும்போது இது தவறா என்று தோன்றாது நாம் சரியே என்று நினைத்து எழுதும் பிழைகள். இதைச் சரி செய்வது கடினம். ஏனென்றால் நமக்கு இங்குதான் கேள்வியே தெரியாதே, பிறகு எப்படி விடை கண்பது..
இதற்காகவே இந்த ரகர றகர வேறுபாட்டுச் சொற்களை இங்கு வரிசைப் படுத்தி பொருளோடு இடப்படுகின்றன என்றோர்க.
 எடுத்துக்காட்டுக்கு ஒரு சொற்றொடர்...


"பசியார உணவளித்த உங்களை மனதாற வாழ்த்துகின்றேன"
மேலே உள்ள உணர்வு பொங்கும் சொற்றொடரில் உள்ள ஒரு பிழை, அச்சொற்றொடரின் பொருளைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றது பாருங்கள்.

நேற்றைய பாடத்தில் கண்டபடி

ஆர- நிறைய; ஆற - தணிய

பசி என்பது வயிற்றின் வெப்பம். அது உணவுண்டால் தணிகிறது. எனவே பசியாற என்பதும் பசியாற்று என்பதும் பசி என்னும் வெப்பத்தை தணித்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பசியார என்றால் நீங்கள் சரியாக சோறு போடவில்லை, என் பசியை நிறையச் செய்து விட்டீர்கள் என்றல்லவா பொருள் தலைகீழாகிறது...

அதேபோல, ஒருவரை வாழ்த்தும்போது மனம் வெப்பமாகவா இருக்கும்? மனம் வெப்பமாக இருந்தால் ஒருவரை வாழ்த்த முடியுமா? முடியாது. திட்டத் தான் முடியும். வாழ்த்தும்போது மனம் நிறைந்து போகிறதன்றோ? நிறைவடைகிறதன்றோ? இந்த நிறைவுப் பொருளைத் தரும் ஆர என்ற சொல்லைத் தான் நாம் மனதார, வாயார, உளமார வாழ்த்துகிறேன் என்று சொல்கிறோம்.

எனவே

பிழை? திருத்தம்/// பற்றுக்கோடு*
பசியார? பசியாற/// பசி ஒரு வெப்பம்*
மனதாற? மனதார/// மனம் நிறைந்து வாழ்த்துதல்*

இனி, மனதாரப் பாடுவது என்பது

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்பதைப் போல என்றும்

மனதாறப் பாடுவது என்பது

.......
செந்தமிழும் மாய்ந்ததுகாண் செந்தமிழர் செத்துவிட்டார்
எந்தவகை அன்னவர்தான் ஈடேறிப் போவாரோ?

தன்முயல்வும் இன்றி தனிச்சிறப்பும் ஒன்றின்றி
என்வகையும் தேராதார் எப்படித்தான் வாழ்வாரோ?

உள்ளுணர்வும் சாம்பி உயர்கருத்தும் மாய்ந்தொழிந்து
வெள்ளறிவே கொண்டிருப்பார் வீழ்ந்திறந்து போவாரோ?

கண்ணுருட்டிப் பார்ப்பார்தம் கால்வருடி நின்றிருப்பார்
எண்வகையாச் செம்பொருளை எப்படித்தான் காண்பாரோ?

கோலெடுப்பார் தம்முன் குரங்காய் நடமிடுவார்
நூலெடுத்துக் கற்றறிந்து நோற்றுயர்தல் எப்பொழுதோ?

வண்டியின்மேல் போவார்க்கே வாய்ப்பொத்திக் கைகூப்பி
மண்டியிட்டு வாழ்வார் மனந்திருத்தல் எப்பொழுதோ?

வீசுகின்ற சோற்றுக்கே வீங்கித் தவங்கிடப்பார்
மாசகன்ற நல்லறிவால் மாண்புபெறல் காண்குவமா?

நட்டுவைத்த கல்முன்னே நறும்படையல் வைத்தொடுங்கி
குட்டுவைத்துக் கொண்டெழுவார் கூன்கொள்கை மாய்ந்திடுமோ?

மக்களுக்குள் கோடி குலம்படைத்து மாண்பழிக்குஞ்
சிக்கல் அவிழ்ந்து சிறப்புவந்து வாய்த்திடுமா?

வாய்மொழியுந் திக்கி வருமொழிக்கும் பண்பிழப்பார்
தாய்மொழியைப் பேணி தரமுயர்தல் நேர்ந்திடுமா?

கண்ணிமைக்கும் நேரத்தில் கருத்திழக்கும் தீத்திறத்தார்
மண்ணமைக்கும் நல்லமைப்பில் மாண்புபெறல் காண்குவமா?
.......

பெருஞ்சித்திரனார்

போல என்றும் காண்க...


: எனவே உளமார, மனதார, வாயார வாழ்த்துவோம்..😊

 மனதாரவும் மனதாறவும் பாடுவோம்..


நமது கற்றல் தொடர்கிறது.

ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள்:

ஒரு - ஒன்றாகிய;
ஒறு - தண்டி
ஒருத்தல் - ஆண்யானை; ஒறுத்தல் - கோபித்தல்

கர - ஒளி;
கற - பால் கற
கரி - அடுப்புக்கரி, யானை; கறி - காய்கறி, கடி
கருத்து - எண்ணம்; கறுத்து - கோபித்து
கருவல் - கருப்பானது; கறுவல் - சினத்தல்
கருவி - ஆயுதம்; கறுவி - சினப்படு
கரை - ஓரம், கடற்கரை; கறை - குற்றம், மாசு
கரையான் - கடற்கரையில் உள்ளவன்; கறையான் - ஒரு வகை உயிர்மெய்
கவர் - பிடுங்கு ; கவறு - சூதாடுங்கருவி

 காரல் - ஒரு மீன்; காறல் - காறி உமிழ்தல்
கார் - முகில்; காறு - கொழு
கீரி - ஒரு உயிர்மெய்; கீறி - கிழித்து

கூர - நிறைய (தயை கூர்ந்து, அன்பு கூர்ந்து...); கூற - சொல்ல
கூரிய - கூர்மையான; கூறிய - சொல்லிய
கூரை - வீட்டின் கூரை; கூறை - ஒரு வகை சேலை
கோரல் - விரும்புதல், வேண்டுதல் (கோரிக்கை); கோறல் - கொலை செய்தல்
(கோறுகிறேன் என்றால் கொலை செய்கிறேன் என்று பொருள்)


: இனி,
சாரு - சார்ந்திரு, கிளி; சாறு - இரசம்
சிரை - தலையைச் சிரை; சிறை - காவல்
சீரிய - பெருமை பொருந்திய; சீறிய - வெகுண்டெழுந்த, கோபித்த
சுரா - கள்; சுறா- ஒருவகை மீன்
சுருக்கு - சுருங்கச் செய் (உண்டி சுருக்கு); சுறுக்கு - விரைவு (இந்த வழி போனா சுறுக்க போயிரலாம் என்ற ஊர் வழக்கு ஓர்க)

 சிரம் என்பது வடமொழி சிரசு என்பதே... தமிழில் தலை, சென்னி..(சிரச்சேதம் - தலைத்துண்டிக்கும் தண்டம்)

சுவர் - மதில்: சுவறு - வற்று (சுவறிடும் மூப்பைச் சுமந்து...)

 சுவற்றில்? சுவரில்///

சுரா - கள்;
சுறா- ஒருவகை மீன்

சுவர் - மதில்: சுவறு - வற்று (சுவறிடும் மூப்பைச் சுமந்து...)
சுவற்றில்? சுவரில்///
சூரல் - பிரம்பு; சூறல் - குடைதல், தோண்டுதல்
சூறைக்காற்று, சூறைத்தேங்காய், சூறைக்காற்று, சூறையாடினர், சூறாவளி அனைத்தும் றகரம் வரும் சொற்களே...

 செரித்தல் - உண்ட உணவு செரித்தல், செமித்தல் என்பது மருவு; செறித்தல் - செறிவு அடைதல், நெருக்குதல்
செரு - போர் (செருக்கு - படைச்செருக்கு) ;  செறு - வயல்,(செறுநர் - பகைவர்)

செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரியது இல். #759

சேரல் - கிட்டல், ஒன்று சேர்த்தல், புணர்தல்; சேறல் - செல்லுதல்.
சொரி - பொழி; சொறி - ஒரு தோல் நோய்

 கரிதல் - கருகுதல், தீய்தல்,
கரித்தல்- உறுத்துதல் (கண்ணில் மை கரிக்கிறது என்றாளாம்), எரித்தல் (கரிச்சுக் கொட்டாதே);
 கறித்தல் - கடித்துத் தின்னுதல் (கற கறன்னு இல்ல, நமத்துப் போச்சு)

தரி - அணிந்து கொள்; தறி - வெட்டு, தூண்..  கட்டுத்தறி (கட்டிவைக்க உதவும் தூண்... கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் பாடும்)

தரு - (சமற்கிருதம் - மரம்); தறு - இறுக விடு - தறுகண்- அஞ்சாமை, கொடுமை, தறுதலை - அடங்காதவன்...

 தவரு? தவறு///
திரம் - நிலை ; திறம் - வல்லமை
திரை - அலை; திறை - கப்பம்

 துரவு - கிணறு, கேணி; துறவு - துறத்தல், துறவியர் அறம்
துரத்தல் - செலுத்துதல் , துரத்துதல் - ஓட்டிச் செலுத்துதல், எய்தல், போக்குதல், வீசுதல், வெருட்டுதல், அப்புறப்படுத்துதல்; துறத்தல் - நீக்குதல்.

துரு - இரும்பில் பிடிக்கும் துரு;
துறு - நெருங்கு
துருவல் - தேடுதல் ; துறுவல் - நெருங்கல்

துரை -ஆங்கிலம் -சீமைத்துரை; துறை - படித்துறை, வழி, நீதித்துறை
தூர் - வண்டல், நிரப்பு; தூறு - பழிச்சொல்; தூற்று - பழிசொல்லு, திட்டு
தெரிதல் -விளக்கமாதல், அறிதல்; தெரித்தல் - சொல்லுதல்:
 தெறித்தல் - துள்ளுதல்,
தேர - ஆராய; தேற- குணமடைய
தேர் - ஒரு வண்டி; தேறு - தெளிவு, தெளிவடை


நருக்கு - நசுக்கு; நறுக்கு - துண்டி (நறுக்குனு பேசாதே)
நரை - வெண்மயிர்; நறை - மணம்
நிருத்தம்? நிறுத்தம்///
நிரை - வரிசை (நிரல் நிரை) ; நிறை- நிறைவு
நீர் - தண்ணீர், வெந்நீர்...; நீறு - சாம்பல், திருநீறு
நெரி - நொறுங்கு, தகர் ; நெறி - வழி, கொள்கை


பரந்த - பரவிய; பறந்த - பறவை பறந்த..
பரவை - கடல்; பறவை - பறக்கும் உயிர்மெய்
பரி - தாங்கு, குதிரை; பறி - பிடுங்கு
பரை - உமை; பறை - இசைக்கருவி
பாரை - கடப்பாரை; பாறை - கற்பாறை

 பிரதேசம் - சமற்கிருதம்- இடம்: பிறதேசம்- அந்நிய நாடு

பிரை - மோர்ப்பிரை (இதுவே புரை ஊத்து என்று மருவி நிற்கின்றது);  பிறை- இளநிலா.

புரணி - ஊன் (இறைச்சி உணவு, மாமிசம் - சமற்கிருதம்); புறணி - புறங்கூறல்
புரம் - பட்டணம்;
புறம் - தமிழர் வாழ்வின் ஒரு பகுதியாகிய திணை ஒழுக்கம், பக்கம் (அப்புறம், இப்புறம், உட்புறம், வெளிப்புறம்)

பெரு - பெரிய; பெறு - அடை
பேர் - பெயர்; பேறு - பெறுதற்கரியதைப் பெறுதல்
பொரி - நெற்பொரி; பொறி - எந்திரம்
பொரித்தல் - பொரியச் செய்தல்; பொறித்தல் - சித்திரம் எழுதுதல்
பொரு - போர் செய்; பொறு - பொறுத்துக்கொள் (வெயிட் பண்ணு என்ற இக்காலத்தின் பண்ணி மொழியை பொறு என்று சொல்லி விலக்கலாம்)

 பொருப்பு - மலை; பொறுப்பு - கடமை

மரம் - ஒரு நிலத்திணை (ஆலமரம், அரசமரம்...): மறம் - கோபம், வீரம்
மரி - சாகு;
மறி - ஆட்டுக்குட்டி
மரு - மணம்; மறு - குற்றம்
மருகி - மருமகள் ;
மறுகி - மயங்கி

 மாரி - மழை, முகில்; மாறி - மாறுதலடைந்து
முரி - ஒடி; முறி - தளிர்
முருக்கல் - உருக்கல்; முறுக்கல் - திருகுதல்
முருக்கு - ஒருவகை மரம்; முறுக்கு - தின்பண்டம்
 மெய்யுரை - உண்மைச்சொல்;
மெய்யுறை - உடம்பைக் காக்கும் காப்பணி

வருத்தல் - துன்பப்படுத்துதல்; வறுத்தல் - காய்களை வறுத்தல்

வரை - எல்லை, மலை (அதுவரை,இதுவரை, வரையறை);
வறை - துவட்டற்கறி

 விரகு? விறகு///
விரலி - நீண்ட விரலையுடையவள்;
விறலி - கருத்து வெளிப்பட நடிப்பவள்
விரல் - கைவிரல்: விறல் - வலிமை
விரைத்தல் - விதைத்தல்; விறைத்தல் - மரத்துப் போதல்
 வீரி - பெண்தெய்வம்: வீறி - ஓங்கி

வெரு - அஞ்சு; வெறு - வெறுப்பு அடை
வேர்- நிலத்திணையின் சினை; வேறு - பிறிது


ரகர, றகர சொற்களின் வேறுபாடுகள்

இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - செத்துப் போகுதல்

உரி - கழற்று/ தோலை உரி
உறி - தூக்குச் சட்டி

ஒரு - ஒன்று
ஒறு - தண்டனைக் கொடு
மேலும் படிக்க »

மிதிவண்டி - தமிழ்ச் சொற்கள்

ஒரு மிதிவண்டியில் இத்தனை உதிரி பாகங்களா ? அத்தனைக்கும் தமிழில் சொற்கள் உண்டு . அறிந்து கொள்வோம் !

மிதிவண்டி - தமிழ்ச் சொற்கள்
----------------------------------------------

Tube - மென் சக்கரம் (முடிவில் பார்க்கவும்)
Tyre - வன் சக்கரம் (முடிவில் பார்க்கவும்)
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை ; Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

- முனைவர் அண்ணாகண்ணன்

◆ பி.கு

Tyre - வட்டகை / உருளிப்பட்டை
Tube - காற்றுக் குழாய் / தூம்பு என்பதே மிகச்சரியானது.

நன்றி: திரு.இராசகுமார் சண்முகம்
மேலும் படிக்க »

சொல்லிலக்கணம்

இன்று முதல் சொல்லின் இலக்கணம்...

 சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.

 எல்லா சொல்லும் பொருள்குறித் தனவே - தொல்காப்பியம்.
 அக்கருத்தின் நிகழ்பொருள் திணை எனப்படும். அத்திணை உயர்திணை, அஃறிணை என இரு வகைப்படும்.

 உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே - தொல்காப்பியம்

 மக்கள் உயர்திணை... மற்றவை அஃறிணை...

அவ்வளவே...

இனி இதிலென்ன சிறப்பு எனக் கேட்போர் உண்டெனின், கட்டை விரலை ஆண்பால் என்றும் சிறுவிரலைப் பெண்பால் எனறும் மனைவியைக் குறிக்கும் மூன்று சொற்களில் ஒன்று ஆண்பால் ஒன்று பெண்பால் ஒன்று அலிப்பால் என்றும் வழங்கும் மொழிகள் இங்கு உண்டு என்பதை ஓர்க... இதனையே

"கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சிலஇலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ''

என்று இலக்கிண வரம்பிலா மொழிகளை பரஞ்சோதி முனிவர் குறித்தார் என்க..

இனி இச்சொற்கள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்

என்ற மூன்று அடிப்படைப் பிரிவினவாம்...

உரிச்சொல் என்ற ஒன்றும் உளதாம் என்க...

உரிச்சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங்க வைக்கும் சொல்.
எ.காட்டு: உறுமீன், சால உண்டான்.


பெயர்ச்சொல்
ஆறு வகைப்படும்.

பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்


 வினைச்சொல்:

தொழில் அல்லது செயலைக் குறிக்கும் சொல்.
எ.கா: நீந்துகிறது.


 இடைச்சொல்:

வாக்கியங்களைக் கருத்தால் இணைக்கப் பயன்படும் சொற்கள்.

எ.கா: உம், ஆனால், ஆகையால், ஏனெனில்


 வட சொல்:

கிரந்த எழுத்துக்களைக் கொண்ட சொல்.
எ.கா: விஷம், ஹனுமான்.

 திசைச் சொல்:

பிறமொழிகளில் உள்ள சொற்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்துதல்.

எ கா: பாக்கி(அரபு), கச்சேரி (இந்தி), பென்சில் (ஆங்கிலம்), அலமாரி(போர்த்துகல்).


இனி திசைச்சொல்லும் வடசொல்லும் தமிழல்ல என்பதனாலும், தமிழின் இலக்கணத்திற்கு அவை ஒவ்வாதவை என்பதாலும், அவை விலக்கப்பட வேண்டியவை என்பதாலுமே தனியாகக் காட்டப்பட்டன என்க...

 எடுத்துக்காட்டுக்கு பந்து என்ற குற்றியலுகரம் ஒலிப்பது போல் இந்து என்ற வடசொல் ஒலிக்காது முற்றியலுகரமாக ஒலிப்பதைக் காண்க... இதனால் குற்றியலுகரப் புணர்ச்சி இலக்கணத்திற்கு இந்து ஒவ்வாது நிற்பதைக் காண்க...
பந்து + இல்லை = பந்தில்லை என்று வர,

இந்து + இல்லை = இந்தில்லை என்று வராமல் இந்துவில்லை என்று மாறி இலக்கணத்தைக் குழப்புதல் காண்க...

இதனால்தான் பிற மொழிச் சொற்களை வழங்குதல் கூடாது என்று அறிஞர் பலர் காக்கைகளாய் கரைந்து நின்றனர் என்று உணர்வோம்....


இனி,

உயர்திணையானது ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.

அவன், வந்தான் - உயர்திணையாண்பால்

அவள், வந்தாள் - உயர்திணைப் பெண்பால்

அவர், வந்தார் - உயர்திணைப் பலர்பால்

பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண் பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.
—-

அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.

அது, வந்தது - அஃறிணையொன்றன்பால்
அவை, வந்தன - அஃறிணைப் பலவின்பால்.

இனி, வினைச்சொல்லாவது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாம்

 வினைச்சொல் ஆறு வகைப்படும்... அவை

1. தெரிநிலை வினைமுற்று - நடந்தாள், உண்கும், பெற்றான்...

2. குறிப்பு வினைமுற்று - பொன்னன், கரியன்.

3. தெரிநிலை பெயரெச்சம் - நடந்த, உண்ட, புகட்டும்....

4. குறிப்புப் பெயரெச்சம் - நல்ல, பெரிய....

5. தெரிநிலை வினையெச்சம் - ஆற்றி, உண்டு, பெறாது ....

6. குறிப்பு வினையெச்சம் - மெல்ல, சரியாய், இன்றி, கனிவாய்...

இனி, இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய மெல்ல

எதிர்மறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.


நடவான் நடவாத நடவாது
இலன் இல்லாத இன்றி

வியங்கோள் வினைமுற்று

க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.

வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.

ககரவிகுதி - வாழ்க
இயவிகுதி - வாழிய
அகரவிகுதி - வர
அல்விகுதி - ஒம்பல்

வாழிய என்பது, ஆ வாழி, தமிழ் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

வா  வருக,
ஓர்தல்  ஓர்க
ஒம்பல்  ஒம்புக,
எனல்  என்க

சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே
நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.

எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க  என்று அல் எனும் இடைநிலை பெற்று வரும்.

கட்டுரை எழுதும்போது ஒரு செய்தியைச் சொல்லி முடித்துவிட்டு வேறொரு செய்திக்குப் போகும்போது "நிற்க." என்ற வியங்கோள் வினைமுற்று போடுதல் கட்டுரையை மேலும் சிறப்பிக்கும்...

வினைப்பகுப்பு:

தன்வினை / பிறவினை

தன்வினையாவது தன் எழுவாயில் உள்ள  செய்வானின் தொழிலை உணர்த்தி நிற்கும்  வினையாம் இத்தன்வினை  செய்வானின் வினையெனப்படும்.

தச்சன் கோயிலைக் கட்டினான், சாத்தனை யடைந்தான்...
 பிறவினையாவது தன் எழுவாய் செய்வான் அல்லாத பிறரின் தொழிலை உணர்த்தி நிற்கும் வினையாம்.

பாலத்தைக் கட்டுவித்தான்.

அரசன் தச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்...
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பல அறிஞர்களுக்கு தமிழைப் பயிற்றுவித்தார்...

இங்கு கட்டுவித்தான், பயிற்றுவித்தார் எனபன பிறவினைகளாம்....

தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் சில வினைச்சொற்கள்:

முதனிலை தன்வினை பிறவினை
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்


இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.

முதனிலை தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான் அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான் கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான் வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான் கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்

 வினையியல் முற்றிற்று...

இடையியல்:

இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
 இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.

எடுத்துக்காட்டு

ஐயோ இறந்தான்

ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.

கொன்றான் கூகூ

என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.

மற்றொன்று

மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.

குழையன்

அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது
〰〰〰〰〰

 இடைச்சொல் வகைகள்:

1) வேற்றுமை உருபுகள்

2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்

3) சாரியைகள்

4) உவம உருபுகள்

5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்

6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்

7) செய்யுளில் அசைநிலையாக வருபவை

8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை

 வேற்றுமை உருபுகள்

முதலில், இடைச்சொல் வரிசையில் முதலாவதாகச் சொல்லப்படும் வேற்றுமை உருபுகள் பற்றிக் காணலாம். வேற்றுமை என்பது வேறுபாடு. பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்ப பொருள் வேறுபடும், அது வேற்றுமை எனப்படும். வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து வருவதில்லை.

எடுத்துக்காட்டு

1) கண்ணன் கண்டான்
2) கண்ணனை (க்) கண்டான்

முதல் சொற்றொடரில் கண்ணன் பார்க்கிறான், இரண்டாவதில் கண்ணனை வேறொருவன் பார்க்கிறான்.

முதல் சொற்றொடரில் கண்ணன் எழுவாய்; இரண்டாவதில் கண்ணன் செயப்படுபொருள்.

இந்த வேற்றுமையை உண்டாக்கியது ஐ என்னும் உருபு.

இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை வேற்றுமை உருபு என்று அழைக்கிறோம்.

இங்கு எடுத்துக்காட்டிய ஐ இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இது செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறப்படுகிறது.

எஞ்சியுள்ள வேற்றுமை உருபுகள் எவ்வாறு இடைச்சொல்லாக நின்று பொருளை வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பதைக் காண்போம்.
〰〰〰〰〰〰〰

வேற்றுமை உருபுகள்:
1)
முதல் வேற்றுமை
(எழுவாய் வேற்றுமை)
-------
2)
இரண்டாம் வேற்றுமை

3)
மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
4)
நான்காம் வேற்றுமை - கு
5)
ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
6)
ஆறாம் வேற்றுமை - அது, உடைய
7)
ஏழாம் வேற்றுமை - கண்
8)
எட்டாம் வேற்றுமை - (விளி வேற்றுமை)
-------
எடுத்துக்காட்டு

2) கண்ணனைக் கண்டான் - ஐ - உருபு
3) வாளால் வெட்டினான் - ஆல் - உருபு
4) கூலிக்கு வேலை செய்தான் - கு - உருபு
5) மலையின் வீழ் அருவி - இன் - உருபு
6) கம்பரது பாத்திறம் - அது - உருபு
7) அவையின் கண் இருந்தான் - கண் - உருபு
இவ்வாறு வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து (இறுதியில்) நின்று பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும்...
〰〰〰〰〰〰〰

உவம உருபுகள்:

இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை உணர்த்துவதற்காக உவமைக்கும் பொருளுக்கும் இடையில் வரும் இடைச்சொல்லை உவம உருபு என்று கூறுகிறோம்.

உவமை

ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறும்போது அது உவமை ஆகிறது.

எடுத்துக்காட்டு

மொழியின் இனிமையைச் சுட்ட விரும்பிய ஒருவன் ஒப்புமை நோக்கில் தேன் போன்ற மொழி என்று கூறும்போது மொழிக்குத் தேன் உவமை ஆகிறது.

இத்தொடரில் தேன் - உவமை; மொழி - பொருள்; ‘போன்ற’ என்பது உவம உருபு.


உவம உருபுகள்

போல,
புரைய,
ஒப்ப,
உறழ,
மான,
கடுப்ப,
இயைய,
ஏய்ப்ப,
நேர்,
நிகர்,
அன்ன,
இன்ன என்னும் பன்னிரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகள் ஆகும் என்று கூறுகிறது.

இன் என்பதும் ஒரு உவமவுருபு... இவை போல இனனும் பல உண்டு என்க...

இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே உணர்த்தி நிற்பதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு

தளிர் புரை மேனி (தளிர் போலும் மென்மையான உடல்)

செவ்வான் அன்ன மேனி (செவ்வானத்தைப் போன்ற சிவந்த உடல்)

வில்லின் புருவம் (வில்லைப் போன்ற புருவம்)
〰〰〰〰〰

இனி பொருளை உணர்த்து சில சிறப்பான இடைச்சொற்களைக் காண்போம்... இவை ஓரெழுத்து ஈரெழுத்துச் சொல்லானாலும் பாரிய பொருள் வேறுபாட்டை உணர்த்தும்.... பாட்டெழுதையிலும், உரைநடையிலும், பேச்சிலும் இவை மிகவும் பயன்படும்... இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்....

〰〰〰〰〰

ஏ எனும் இடைச்சொல்:

ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.

தேற்றம்:
உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.

வினா
நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா

எண்:
நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.

பிரிநிலை:
அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.

எதிர்மறை:
நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.

இசைநிறை:
’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.

ஈற்றசை:
’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.

〰〰〰〰〰〰〰〰
 நத்தை யம்மா நத்தை யம்மா எங்கே போகிறாய்?
அத்தை குளிக்க தண்ணீர் குடம் கொண்டு போகிறேன்
எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான் வேண்டுமானால் பார்த்துக் கொண்டிரு...

அழ.வள்ளியப்பா

 நத்தையம்மா பாடலில் பத்தே நாள்தான் என்பதில் உள்ள ஏ எனும் இடைச்சொல் உணர்த்தும் நுட்பமான பொருளைக் காண்க...



ஓ எனும் இடைச்சொல்:

ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.

(எடுத்துக்காட்டு)

1. ஒழியிசை:

படிக்கவோ வந்தாய்.

இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை.

2. வினா:

அவளின் மகனோ. இங்கே  மகனோ என
வினாப் பொருளைத் தருதலால் வினா.

3. சிறப்பு:
சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும்.

உயர்வு சிறப்பு:

ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு;

இழிவு சிறப்பு:

ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு

4, எதிர்மறை:
அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை

5. தெரிநிலை
ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை.

6, கழிவு:
தமிழர் தம்மைத் தமிழர் என்று என்றைக்குத்தான் உணர்வாரோ...
என்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்

7.பிரிநிலை:
இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவனைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை

8. அசை நிலை:
காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் ஓசைக்காக நிற்றலால் அசை நிலை.


மேலே நாம் ஏகார ஓகார இடைச்சொற்களைக் கண்டோம்...

ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் வேறுபாட்டுப் பொருளைத் தரும்.

வேறுபாட்டாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.



ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் - வீட்டிலாயினுங் பள்ளியிலாயினும் இருப்பேன்
தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடு

 அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.


இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.


காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்

 முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.


காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்

முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும் வழங்கும்.

 வாளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.

வாளா விருந்தான், சும்மா வந்தான்


உம் என்ற இடைச்சொல் பேச்சில் பெருவழக்காய் நிற்பதைக் காண்க... அது கையறு நிலையை உணர்த்தி நிற்கும்

"ஆமா... அப்படியே நீங்க
குடுத்துட்டாலும்......"

.அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.

அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்
எக்கொற்றன், கொற்றனா, யாவன்.

கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

எ-டு.

ஐயம்:

முகங்கொல் மதியம்கொல். இற்கே நிலவோ முகமோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.

அசைநிலை:
கற்றதனா லாய பயனென்கொல்.
இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை

அசை என்பது ஓசைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் தராத இடைச்சொல்லாம்..

அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கேள்; என்னும் பொருளிலும், அசையாகவும் வரும்.

ஒன்று சொல்வேன் கேள் - அம்ம வாழி ’’தோழி“

அசை - ’’ அது மற்றம்ம’’

 தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.


இடப்பன்மை - ஊர்தோறும் தமிழாலயம் கட்டுக...

தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்

தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.

என, என்று

எ-டு:

பிறந்தானென

அழுக்காறென

நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து...

வெள்ளென வெளேறென...

பொள்ளென வாங்கே புறம் வேரார்.

பொம்மென சட்டென...

புலி பாய்ந்ததென பாய்ந்தான்.

என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க..

மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.


நிலலென்றா நீரென்றா தீயென்றா
நிலலென்னா நீரெனாத் தீயெனா
நிலனொடு நீரொடு தீயொடு


 இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.

காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்


 குறிப்பின் வரும் இடைச்சொற்கள்

அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.

துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.

பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.

இடையியல் முற்றிற்று..

கீழ்காணும் பாடலில் வரும் இடைச்சொற்களையும் அவை யொவ்வொன்றும் உணர்த்தும் பொருளையும் காண்க...

இன்றே முடிவுசெய்க எந்தமிழ் நாட்டிலினி
பன்றி யிடும்ஊளை பாடை மொழிப்பீடை
என்றும் ஒலிக்காது,  எங்கும் ஒலிக்காது
என்னவா னாலும் இதுமுடிவே என்றறைக.
தென்னா டுடைய சிவன்மீதே, வானுயர்ந்த
மன்னனாம் எங்கண்மால் செங்கண்ணன் மால்மீதே
குன்றுதொறும் நிற்கும் குமரமுரு கன்மீதே
நன்னருஞ் சூளென்றே நாட்டுவீர் எம்பாவாய்.
ஏ, இனி, உம், ஆம், தொறும் என்பன இப்பாட்டில் உள்ள இடைச்சொற்கள்....

ஏகாரம் மட்டும் ஆறு இடங்களில் வந்துள்ளது....

இடைச்சொற்கள் பாட்டிலும் பேச்சிலும் உரையிலும் பெரும் பயன் தருவன என்று காட்டுவதற்கே இது சொல்லப்பட்டதென்க....

உரிச்சொல்:

இது பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங்க வைக்கும் சொல்.

இது செய்யுளுக்கு மட்டுமே உரித்தான சொல்... பேச்சில் வாரா.

உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.

எடுத்துக்காட்டு:
நனி பேதை
-
நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்தது.
நனி = மிகுதி, பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்
-
சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
சால = மிகவும்

மல்லல் ஞாலம்
-
மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்.

கடி மலர்
கடி நகர்

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர், காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்:

சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘மிகுதி’ என்னும் ஒருகுணத்தை (பொருளை) உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் அடையாக வந்து மிகுதி என்னும் பொருள் தருகின்றன.

🌺🌺🌺🌺

சால என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“சாலவும் நன்று” - மிகவும் நல்லது

🌸🌸🌸

 உறு என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“உறு பொருள் கொடுத்தும்” (மிகுதியான பொருளைக் கொடுத்தும்)

🌺🌺🌺

தவ என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“ஈயாது வீயும் உயிர் தவப் பலவே”

(பிறர்க்குக் கொடுக்காமல் மறைந்து போகும் மக்கள் பலர் ஆவர்).

மிகுதி என்னும் குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்:

நனி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்”

(கல்லாதவர்களும் மிக நல்லவர்களே, கற்றவர்கள் முன்னிலையில் தம் அறியாமை தோன்றப் பேசாது இருந்தால்)
🌸
கூர் என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“களி கூர் மனம்” (மகிழ்ச்சி மிகுந்த மனம்)

இன்றைய எழுத்து வழக்கிலும் ‘அன்பு கூர்ந்து’, ‘அருள் கூர்ந்து’ என வருவதைக் காணலாம்.
🌸
கழி என்னும் உரிச்சொல்

எடுத்துக்காட்டு:

“கழி பேருவகை” (மிகப் பெரும் மகிழ்ச்சி)

செய்யுளில் ஐந்துக்கு அதிகமான சீர்களைத் கொண்ட நீண்ட அடியைக் ‘கழி நெடிலடி’ என்று குறிப்பிடுவதை அறிந்திருப்பீர்கள்.

கடி என்னும் உரிச்சொல்:

கடி எனும் உரிச்சொலானது  காவல், கூர்மை, விரை (வாசனை), விளக்கம் (ஒளி வீசும் இயல்பு), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு ஆகிய பதின்மூன்று பொருள்களை உணர்த்தும்.

காவல்

கடிநகர் அடைந்து = காவல் உடைய ஊரை அடைந்து.

இதில் கடி என்னும் சொல் காவல் என்ற பொருளைத் தருகிறது.
🌸
கூர்மை

கடி நுனைப் பகழி = கூர்மையான நுனியைக் கொண்ட அம்பு.

இத்தொடரில் கடி என்பது கூர்மை என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
விரை (மணம்):

கடி மாலை சூடி = மணம் நிறைந்த மலர் மாலை சூடி

இங்குக் கடி என்னும் சொல் மணம் என்ற பொருளைத் தருகிறது.
🌸
விளக்கம்

விளக்கம் என்பது இங்கு ஒளி எனும் பொருள் தருவது.

‘கண்ணாடி அன்ன கடி மார்பன்’

ஒளி பொருந்திய மார்பு கொண்டவன். கடிமார்பன் என்பதில் கடி, விளக்கம் என்ற பொருளில் வருகிறது.
🌸
அச்சம்

‘கடி யாமம் காக்கும் கைவிளக்கு’

அச்சம் தரும் யாமத்திற்குத் துணையாக உள்ள கைவிளக்கு என்பது பொருள். இங்குக் கடி, அச்சம் எனும் பொருளில் வருகிறது. (யாமம் = நள்ளிரவு)
🌸
சிறப்பு

‘கடி அரண்’

வலிமையான கோட்டை என்பது பொருள். இங்குக் கடி என்பது சிறப்பு (வலிமை) எனும் பொருளில் வருகிறது.
🌸
விரைவு

விரைவு = வேகம்.

‘எம் அம்பு கடி விடுதும்’

இத்தொடரின் பொருள், எம்முடைய அம்புகள் விரைவாகக் செலுத்தப்படும் என்பதாம். இங்குக் கடி என்னும் சொல் விரைவு என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
மிகுதி

‘கடுங்கால் ஒற்றலின்’

மிகுதியான (கடுமையான) காற்று வீசுவதால் என்பது பொருள். இங்குக் கடி (கடும்) என்பது மிகுதி எனும் பொருளில் வந்தது.
🌸
புதுமை

‘கடி மணச் சாலை’

புதுமை மணம் நிறைந்த இடம். இதில் கடி என்பது புதுமை என்னும் பொருளில் வந்துள்ளது.
🌸
ஆர்த்தல்

ஆர்த்தல் என்றால் ஒலித்தல் என்பது பொருள்.

‘கடி முரசு’ = ஒலிக்கும் முரசு.

இங்குக் கடி என்னும் சொல் ஆர்த்தல் / ஒலித்தல் என்ற பொருளைத் தருகிறது.
🌸
வரைவு

வரைவு என்றால் விலக்குதல் அல்லது நீக்குதல் என்று பொருள்.

‘கடிமது நுகர்வு’

கடிமது நுகர்வு - விலக்கத் தக்க மதுவை அருந்துதல். இத்தொடரில் கடி, விலக்கு என்ற பொருளில் வந்துள்ளது.
🌸
மன்றல்

மன்றல் என்றால் திருமணம் என்று பொருள்.

‘கடிவினை முடுகு இனி’

திருமணத்தை விரைந்து நிகழ்த்து என்பது பொருள். இங்குத் திருமணம் என்ற பொருளில் வந்தது.
🌸
கரிப்பு

கரிப்பு, காரச் சுவையைக் குறிக்கும். கடி என்பதற்குக் காரம் என்ற பொருளும் உண்டு.

‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’

கடிமிளகு = காரமான மிளகு. காரமான மிளகைத் தின்ற அறிவற்ற மந்தி என்பது இதன் பொருள். இங்குக் கடி, கார்ப்பு எனும் பொருளில் வந்தது.

இவ்வாறு, கடி என்னும் உரிச்சொல் பதின்மூன்று பொருள்களைத் தந்து பலகுணம் தழுவிய உரிச்சொல்லாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் கண்டோம்...😊
மேலும் படிக்க »

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???

தமிழர் இந்துக்கள் அல்ல என்று முதன்முதலில் சொன்னது யார் தெரியுமா ???
முதன்முதலில் சொன்னது தமிழ்தான்.
தமிழிலக்கணந்தான் (தமிழ் இலக்கணம் தான்)
எப்படி ?
பந்து என்று  - என்பது எப்படிப் புணரும் ?..
பந்தென்று என்றல்லவா புணரும்..
பந்து என்பது மென்றொடர்க் குற்றியலுகரம்.
சந்து ஒன்று = சந்தொன்று
போந்து ஒன்று = பொந்தொன்று
ஆக பந்து சந்து சிந்து விந்து என்று அனைத்தும் மென்றொடர்க் குற்றியலுகரங்களே.
ஆனால் இந்து என்பது முற்றியலுகரமாகவே ஒலிக்கிறது.
இந்து ஒருவர் = இந்துவொருவர்
இந்து அங்கு = இந்துவங்கு
என்று உயிர் போலவே புணரும்.
ஏனெனில் இந்து என்பது தமிழன்று என்பதால்..
இதனால் தமிழர் இந்துக்கள் அல்ல என்று தமிழே காட்டுகின்றதென்க....
நமக்குத்தான் விளங்கவில்லை.
நம் இலக்கணம் தமிழ்  மொழியை மட்டும் காக்க என்று எண்ணிக் கொண்டுள்ளோம்... அது நம் இனத்தைக் காக்கவல்லது.
இனியாவது இதற்காவது... குற்றியலுகரத்தைத் தமிழர் போற்றவோராக...
-கவினப்பன்
மேலும் படிக்க »

குறள் பொருள் கண்டறிக : அகவிழியன்


#௧

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1096)

சொற்பொருள் :
உறாஅதவர்போல்-அயலார் போல;
சொலினும்-சொன்னாலும்.
செறாஅர்- காதலி / காதலன்
சொல்-மொழி;
ஒல்லை-விரைவில் ;
உணரப்படும்-அறியப்படும்.

குறிப்பு :
செறாஅர்=வெகுளாதவர்;
வெகுள்= வெறுப்பு =To hate/dislike;
வெகுளாமை= வெறுப்பின்மை= absence of hate;
வெகுளாதவர்= The person with absence of hate (Lover);

அஃது,
வெகுளாதவர்= காதலி / காதலன்

காதலர் பழகிப் புரிதல் ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படும் உணர்வு பற்றிய குறள்.

பொருள் : கண்டறிக
*********************************************************
குறல் பொருள் கண்டறிக :

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:44)

சொற்பொருள் :

பழி-தீவினை;
 அஞ்சி-நடுங்கி;
பாத்து-பிரித்துக் கொடுத்து; ஊண்-உண்ணுதல்; உடைத்தாயின்-உடையதானால்,

வாழ்க்கை-வாழ்தல்;
வழி-வழி;
எஞ்சல்-குறைவு; எஞ்ஞான்றும்-எப்போதும்; இல்-இல்லை.

குறிப்பு :

வழிஎஞ்சல் = Extinction of Lineage

என்றும் பொருள்படும்.

விளக்கம் : குழுவினர் கண்டறிந்து இங்கு பதியவும்.
மேலும் படிக்க »

திருக்குறளில் இருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள முடியும்.


1. வாழ்க்கை நெறிகள்
2. சிந்திக்கும் முறை பற்றிய பயிற்சி
3. தொகுத்து வகுத்துப் பகுத்துப் பார்க்கும் அறிவு
4. சொல்வளம் பெறுதல் பயிற்சி (ஞான்று/வைகல்/நாள்...)
5. புணர்ச்சி நெறிகள் அனைத்திற்கும் குறளில் காட்டுகள் உள்ளன.
6. அளபெடை குற்றுகர குற்றிகர எழுத்துகளை அறிதல்
7. பொருள்கோள் முறை
8. அணிபடச்சொல்லும் முறை (பொருளணியும் சொல்லணியும் - பொருளணிக்கு எத்தனையோ காட்டுகள் உண்டு... உடுக்கை இழந்தவன் கை என்பது ஒன்றே உவமை அமைக்கும் முறையைக் கற்றுத்தரும்; மற்றை அணிகளெல்லாம் குறளில் உள்ளன - சொல்லணிக்கு ஏராளமான பாடல்கள் உள்ளன...)
9. உவக்காண் எங்காதலர் சென்றார் இவக்காண் என்மேனி பசப்பூர் வது என்பதில் உள்ள குறிப்பு அறியும் பயிற்சி, நுண்பொருள் உணரும் அழகியற் பயிற்சி.
10. யாப்புப் பயிற்சி, செப்பலோசையை முழுதும் கற்கலாம்
11. தொடை நயம் (பேதமை யென்ப தியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் என்பதே சான்று)
12. மறைந்த தமிழ் மொழி வழக்குகளைக் கற்றுக்கொள்வது (உவக்காண்)

இன்னும விரிக்க விரிக்க மிகுந்து கொண்டே போகும்...

அதனால் திருக்குறள் கற்பதினால் பல பயன் உள்ளன.. உங்கள் வீட்டில் குறள் உள்ளதா?

நன்றி...

அரங்கன்

மேலும் படிக்க »

தமிழில் வேர் சொற்கள் எப்படி உருவாயின ?

சுட்டடி வேர் பெரும்...மூலமாக...அமைந்துள்ளது. ஒப்பொலிச் சொல்லாக்கம் வழியும் சொல் உருவாகும். ஊராகச் சுட்டின் வாயிலாக பெரும் பகுதி சொற்கள் உருவாகியுள்ளன.

எ.கா.
அ, இ, உ சுட்டொலி.

க், ச், த், ப், ஞ், ந், ம், முதலிய மொழிமுதல் மெய்கள் ஊகாரச் சுட்டுடன் சேர்கையில் வித்து உருவாகும்.

உ> உல்> க்+உல்= குல்
குல்= கூடல், வளைதல், குத்தல் கருத்து வேர்.

குல்>குலம்.
குலம்= கூடி வாழும் மக்கட் கூட்டம்.

அல், இல், உல் இவையே மூல வேர்கள். இவற்றைப் பிளந்தால் ஊகாரமே மரபணு வேராக நிற்கும்.

ஆ, ஈ, ஊ அண்மை, முன்மை, சேய்மை சுட்டு வேர்கள். இவை மூல உணர்ச்சியொலிகளாகும்.

ஆ > சேய்மை
ஈ> அண்மை
ஊ> முன்மை

ஆ = சீற்றம்
ஈ= இழிவு, மகிழ்வு

ஊ= துன்பம்

பன்னிரண்டு உயிர்கள் உருவாக்கம்.

ஆ~ ஈ~ஊ} மூல உயிர்கள் 3.

ஆ>அ
ஈ>இ
ஊ>உ
 குறிலாய்த் திரிய 6 ஆகின.

ஈ> ஏ எனத் திரியும்.
ஊ> ஓ நெடிலெனத் திரியும்.

ஏ> எ எனவும்
ஓ > ஒ எனவும்
 குறிலாகி மொத்தம் பத்து உயிர்கள் உருவாகின.

பின்னர்,
அ+இ= ஐ

அ+உ= ஔ எனப் புணரொலிகள் தோன்றி பன்னிரண்டு உயிர்களும் உருவாகின.

// /
அரங்கன் ஐயா  : குழந்தைகள் முதலில் நெடில் உயிர்களையே சொல்லமுடிவது போல அல்லவா ஐயா...

திரு வளவன் ஐயா  : ஆம்...ஆம்..தமிழ்...இயற்கை மொழி.

அரங்கன் ஐயா :என் இரு மகள்களுக்கும் ககரம் பலுக்க வர மூன்றாண்டுகளாயிற்று... இன்னமும் கூடச் சிறியவளுக்கு வரவில்லை (நாலாண்டு முடியப்போகிறது) இவ்வாறே தமிழின் தோற்றத்திலும் முதலில் எளிய எழுத்துகளும் பிறகே அனைத்தும் உருவாயின என்பதேதாமே ஐயா..

திரு வளவன் ஐயா : மிகச் சரி. கூர்தலறம்...அவ்வாறே.///

மம் மம்> மம்மம் குழவி வளர்ப்பொலி

மா> மா ஆஅ> அம்மா
தாயின் மார்பில் பால் குடிப்பன எழுப்பிய மூல ஒலி.
இது மென்மை.
வன்மையாயின்...அப்பா என்றாகும்.

ங்கா என்பதும் குழவி வளர்ப்பொலி தானே ஐயா... அருமை....

இங்ஙா....குழவி வளர்ப்பொலியே. குழந்தை அழும் பொழுது எழும் ஒலி. பசிப்பதால் அழுவதாகக் தாய் கருதுவாள். எனவே குழந்தையின் பாலுக்கு இங்ஙா எனும் குழவி வளர்ப்பொலிச் சொல் உருவாகிற்று.

இதனால்தான் தமிழல்லாத மொழிவழி மொழிவரலாறு காண முயல்வது காட்டுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு செல்வது என்பார் பாவாணர் .

Culture என்ற சொல்லுக்கு ஆங்கில அறிஞர்கள் மூலத்தைக் காணவேண்டும் என்றால் தமிழைப் படிக்காது முடியாது...

அதனாற்றான்

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ் என்றனர்... வேறு மொழிகளுக்கு இது போன்று பாடவும் முடியாது.. கூறவும் முடியாது...

ஐயப்பாடு : புதிய வேர் சொற்களை நாம் உருவாக்க கூடாதா?

புதிய வேர்கள் உருவாகா. மொழிஞாயிறு ஞா.தேவ நேயப் பாவாணரின் முதற்றாய் மொழி...காண்க.
மேலும் படிக்க »