திரட்டு: எழுத்திலக்கணம் இதுவரை

எழுத்தியல் - எழுத்திலக்கணம்:
1
எண், பெயர், முறை, பிறப்பு, உரு, அளவு, முதனிலை, ஈற்றுநிலை, இடைநிலை, போலி, சொல்லுருவாக்கம், புணர்ச்சி என்பன எழுத்தின் பன்னிரண்டு பகுதிகள் என்பதும்...
2
எழுத்து என்பது மொழிக்கு அடிப்படையான சொல்லுக்குக் காரணமாய் இருக்கும் ஒன்று என்பதும், அது முதல் சார்பு என இரு வகைப்படும் என்பதும்...
3
முதலெழுத்து உயிரும் மெய்யும் என்பதும், உயிர் பன்னிரண்டு மெய் பதினெட்டு என்பதும்...
4
சார்பெழுத்துக் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் முதலியன என்பதும்...
5
உயிர் பன்னிரண்டு அகர முதல் ஔகார வரை என்பதும், குறில் அ இ உ எ ஒ என்ற ஐந்து என்பதும், நெடில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழு என்பதும், அ இ உ என்ற மூவெழுத்து மொழி முதற்கண் சுட்டுப் பொருள் தந்துவரின் சுட்டு என்பதும், எ யா இரண்டும் மொழிக்கு முதலிலும் ஆ ஓ இரண்டும் மொழிக்கு ஈற்றிலும் ஏ மொழிக்கு முதலிலும் ஈற்றிலும் வினாப் பொருள் தந்துவரின் வினா என்பதும்...
6.
ககரம் முதல் னகரம் வரை மெய் 18 என்பதும், வல்லினம் கசடதபற என்பதும், மெல்லினம் ஙஞணநமன என்பதும், இடையினம் யரலவழள என்பதும்.
7
தோற்றம் அளவு செய்கை பொருள்வடிவு என்பன. இனம் அமைத்தற்குக் காரணம் என்பதும், இனத்தினாலும் சிறப்பினாலும் பொருந்தி அகரம் முதல் னகரம் இறுதியாக வைக்கப்படுவது முறை என்பதும்.
8
உந்தியில் தோன்றும் காற்று, உச்சி கழுத்து மார்பு மூக்கு இவற்றை அடைந்து, உதடு நா பல் மேல்வாய் இவற்றின் முயற்சியால் வெவ்வேறு எழுத்தொலியாய் வரும் எழுத்தின் பொதுப்பிறப்பு என்பதும்
9
உயிருக்கும் இடையினமெய்க்கும் கழுத்தும், வல்லின மெய்க்குத் தலையும், மெல்லின மெய்க்கு மூக்கும் பிறப்பிடம் ஆகும் என்பதும்
10
ஆ ஆ அங்காத்தலாலும், இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு அண்பல்முதல் நாவிளிம்பு உறுதலாலும், உ ஊ ஒ ஓ ஒள இதழ்குவிதலாலும் பிறக்கும் என்பதும்...
11
கங முதல் நா முதல் அண்ணமும், சஞ இடைநா இடைஅண்ணமும், டண நுனிநா நுனி அண்ணமும், தந அண்பல் அடி நாமுடியும், பம மேலுதடும் கீழுதடும் உறப்பிறக்குங் என்பதும், ய க ர ம் எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை மேல்வாயைப் பொருந்திச் செறிதலானும், ர ழ அண்ணத்தை நுனிநா வருடலானும், லகரம் அண்பல்லை நாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும், ளகரம் அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருடலானும், வகரம் மேற்பல்லைக் கீழுதடு பொருந்துதலானும், றன மேல்வாயை நுனிநா அழுத்தித் தடவுதலானும் பிறக்கும் என்பதும்.
12
ஆய்தம் அங்காத்தலானும் நெஞ்சு ஓசையானும் பிறக்கும் என்பதும், சார்பெழுத்துக்கள் தம் முதலெழுத்துக்களின் பிறப்பிடமும் முயற்சியுமே கொண்டும் பிறக்கும் என்பதும்.
13
ஒலித்தலிடையே எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் இவற்றால் சிறிது வேறுபாடு ஏற்படும் என்பதும்
14
யகரம் வருமொழி முதலில் வருதலால் நிலை மொழி இறுதிக் குற்றியலுகரம் கெட வரும் இகரமும், மியா என்ற அசைச் சொல்லின் இகரமும் குற்றியலிகரமாம் என்பதும்
15
குற்றியலுகரம் தனிநெடிற் பின்னும், தொடர் மொழியில் ஆய்தம் உயிர் வலி மெலி இடை என்ற எழுத்துக்களின் பின்னும் வரும் என்பதும்...
16
ஆய்தம் குற்றெழுத்தின் பின்னர் வல்லின உயிர்மெய் யெழுத்தின் முன்னர் வரும் என்பதும்
17
மெய் அகரத்தொடு சேரும்போது புள்ளியை ஒழித்ததன் வடிவே வடிவாகியும், ஏனைய உயிரொடு சேர்வுழி உருவு சற்றுத் திரிந்தும், ஏறிய உயிரின் மாத்திரையையே கொண்டு, மெய்யின் வடிவை மிகப்பெற்று, முன்னர் மெய்யொலியும் பின்னர் உயிர் ஒலியும் பொருந்த உயிர்மெய் தோன்றும் என்பதும்...
18
ஓசை குறையுமிடத்து மொழி மூன்றிடத்தும் உள்ள நெடில் பின்னர் இனமொத்த குற்றெழுத்து வர அதனோடு சேர்தலான் உயிரளபெடை தோன்றும் என்பதும், இனமில்லாத ஐகார ஒளகாரங்களின் பின்னர் முறையே இகர உகரங்கள் அளபெடைக்கண் வரும் என்பதும்.
19
ஙஞண நமன வயலள ஆய்தம் என்ற பத்தும் மொழிக்கண் குற்றெழுத்து குறிலிணையெழுத்து இவற்றையடுத்து மொழியிடையிலும் இறுதிக்கண்ணும் அளபெடுத்தலால் ஒற்றளபெடை தோன்றும் என்பதும்
20
தன்னை உணர்த்துதல், அளபெடுத்தல் என்ற இரண்டும் அல்லாதவழி மொழி மூன்றிடத்தும் ஐகாரமும், மொழி முதற்கண் ஒளகாரமும் குறுகுதலான் முறையே ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் நிகழும் என்பதும்...
21
லள மெய்திரிதலான் வரும் னகர ணகரங்களின் முன் ஒருமொழிக்கண்ணும், வருமொழி முதலில் வகரம் வருதலான் இருமொழிக்கண்ணும் மொழியீற்று மகரம் மகரக்குறுக்கமாம் என்பதும்
22
எழுத்துக்கள் யாவும் பழைய வரிவடிவினை உடையனவே என்பதும், பண்டு மெய்யொடு, எகரமும் ஒகரமும் ஏகார ஓகாரங்களிலிருந்து பிரித்துணரப் புள்ளிபெற்று வந்தன என்பதும்.
23
மாத்திரையின் அளவு கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிப்பொழுதும் என்பதும், நெடில் இரண்டும், குறிலும் ஐஒளக் குறுக்கங்களும் ஒன்றும், ஆய்தம் மெய் குற்றியலிகரம் குற்றியலுகரம் அரையும், மகரக்குறுக்கம் காலும் ஆகிய மாத்திரை பெறும் என்பதும்.
24
இசை, வினி, பண்டமாற்று முதலியவற்றில் உயிரும் மெய்யும் தம் அளவுகடந்து ஒலிக்கும் என்பதும்.
25 
உயிர் பன்னிரண்டும், கதநபம என்பனவற்றொடு சவஞய என்பனவாகிய ஒன்பது மெய்யொடு சேர்ந்த உயிராலாகிய உயிர்மெய்யும் மொழிக்கு முதலாம் என்பதும்...
26
ஐ ஒள அல்லனவற்றோடு சகரமும், உஊ ஒஓ அல்லனவற்றோடு வகரமும், ஆ எ ஒ என்பனவற்றோடு ஞகரமும், ஆகாரத்தொடு யகரமும் சேர்வதனாலேற்படும் உயிர்மெய்களே மொழிக்கு முதலாம் என்பதும்
27
உயிர் பன்னிரண்டும் ஙகரம் ஒழிந்த மெல்லின மெய் ஐந்தும், இடையினமெய் ஆறும், குற்றியலுகரமும் மொழிக்கு ஈறாம் என்பதும்
28
குற்றுயிர் ஐந்தும் அளபெடைக்கண் ஈறாம் என்பதும், எகரம் அளபெடைக்கண் அன்றி ஈறாகாது என்பதும், ஒகரம் நகரத்தொடும் ஒளகாரம் ககர வகரங்களொடும் ஈறாம் என்பதும்.
29
னகர ஈற்று அஃறிணைப்பெயர்கள் சில மகர ஈற்றொடு மயங்கிவரும் என்பதும்
30
கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும் உடனிலை மெய்மயக்கமும், ரழ என்ற இரண்டும் தம்மொடு பிறவேமயங்கும் வேற்றுநிலை மெய் மயக்கமும், ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும் இருவகை மயக்கமும், எண்ணில் அடங்காதனவாகிய உயிர்மெய் மயக்கமும் என்பனவும்...
31
ஙம்முன் கவ்வும், வம்முன் யவ்வும், ஞம்முன் சயவும், நம்முன் தயவும், டறமுன் கசபவும், ணம்முன் க ச ஞ ட ப ம ய வ வ்வும், னம்முன் க ச ஞ ப ம ய வ ற வ் வும், மம்முன் பயவவும், யரழமுன் மொழிமுதல் மெய்யும், லளமுன் கசபவயவும் மயங்கும் என்பதும்
32
யரழமுன் கசதப ஙஞநம ஈரொற்றாதலும், ரகர ழகர ஈற்றுமுன் தனிக்குறில் வாராமையும்
33
லகர னகர மெய்களின் திரிபாகிய னகர ணகரங்களொடு ஈற்றில் ஈரொற்றாய் மகரம் வரும் என்பதும்
34
தம் மரபு கூறுமிடத்து முதல்நிலை இடைநிலை இறுதிநிலை என்ற வரையறை எழுத்திற்கு இன்று என்பதும்
35
அஇ, அய், அஉ, அவ் என்பனவும், ஒன்றன் பின் ஒன்று ஓசை விரவிவரும் இகரமும் யகரமும், ஆகிய எழுத்துப்போலிகள் கடியப்படும் என்பதும்...
36
நெட்டுயிர் காரமும், ஐஒள காரத்தொடு கானும் உயிர்க்குறிலும் உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரம் என்ற மூன்றும் ஆகிய சாரியை பெறும் என்பதும், மெய்யின் இயக்கம் அகரத்தொடு சிவணும் என்பதும்
கண்டோம்.


இவற்றை நினைவிற் கொள்க...


சொல்லுருவாக்கவியல் என்பதில்...

37
எழுத்துத் தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும் பொருள்தரின் சொல்லாம் என்பதும், அது பகாச்சொல், பகுஞ்சொல் என்ற இருவகைப்படும் என்பதும்.
38
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத் தொருமொழி என்பதும், குற்றெழுத்து ஐந்து மொழியாகா, சில ஆகும் என்பதும்.
39
பகாச்சொல் பகுக்கப்படுவதன்றாய்ப் பெயர்ப்பகாச்சொல், வினைப்பகாச்சொல், இடைப்பகாச்சொல், உரிப்பகாச்சொல் என்ற நான்கு வகைப்படும் என்பதும்
40
பகுஞ்சொல் பகுக்கப்படும் இயல்பிற்றாய் பெயர், வினை என்ற இருவகைப்படும் என்பதும், பெயர் அறுவகை என்றும் வினை முற்றும் எச்சமுமாய் தெரிநிலை குறிப்பு என்று வரும் என்றும், எச்சம் பெயரெச்ச வினையெச்சமாய் இருவகைத்தாம் என்றும்...
41
பகுஞ்சொற்களைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி திரிபு என்ற ஆறுபகுப்புள் ஏற்பன கொண்டு பிரித்துக் காண்க என்பதும்
42
நடமுதல் அஃகுஈறாக எடுத்துக்காட்டிய முறையை ஒட்டி இயல்பு உயிரும் ஒற்றும் குற்றியலுகரமும் ஆகிய இருபத்துமூன்று ஈற்றவாகிய முதல் நிலைத் தொழிற்பெயர்களைப் பகுதியாகக்கொண்டு இயற்றும் தெரிநிலைவினைச்சொற்கள் நிகழும் என்பதும்
43
அவ்விருபத்துமூன்று வகைப் பகுதிகளொடு “வி” என்பதோ “பி” என்பதோ ஏற்ற பெற்றி வந்து அமையும் தொழிற்பெயர்களைப் பகுதியாகக் கொண்டு ஏவல் வினைமுதல் தெரிநிலைவினை நிகழும் என்பதும்..
44
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் ஆகிய பெயர்களை முதல்நிலையாகக் கொண்டு குறிப்பு வினைமுற்றுப்பகுஞ்சொல் நிகழும் என்பது.
45
அன் முதலாக உம் ஈறாகக்கிடந்த முப்பத்தொன்பதும், அவைபோல்வன பிறவும் வினை விகுதி என்றும்...
46
கடதற என்ற ஒற்றுக்களும், இன் என்னும் குற்றொற்றும் இறந்தகால இடைநிலை என்பது.
47
ஆ நின்று, கின்று, கிறு என்பன நிகழ்கால இடைநிலை என்பது.
48
பகர ஒற்றும் வகர ஒற்றும் எதிர்கால இடைநிலை என்பதும், காலங்காட்டும் இடைநிலைகளைச் சில வினைமுற்றுப் பகுபதங்கள் ஏலா என்பதும்.
49
குடுதுறு கும் டும் தும் றும் ப மார் மின் என்ற விகுதிகளும் வியங்கோள் விகுதியும் ஏவல் வினை முற்றுக்களும் எதிர்மறை வினைகளும், எதிர்காலமும், செய்யும் என்பது நிகழ்கால எதிர்காலங்களும் இடைநிலையின்றிக் காட்டும் என்பது.
50 
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை என்பதும்..

இவ்வாறான எழுத்திலக்கணத்தைக் கண்டோம் என்க...


இவற்றை நினைவிற் கொள்க...


நாம் எழுத்திலக்கணத்தைக் கற்றவர்கள் என்ற பெருமிதங் கொள்வோம் என்க..
மேலும் படிக்க »

திருக்குறளில் காணப்படும்அருஞ்சொல்

திருக்குறளில் காணப்படும்
அருஞ்சொல்- சொற்றொடர்
அகரமுதலியும் இணையான
குறள்களும். - தொடர்- 03.

பேரன்புடையீர், வணக்கம்.
    திருக்குறளில் உள்ள அருஞ்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கான பொருள்களையும் அவை             இடம்பெற்றுள்ள குறள்களையும்
ஒவ்வொன்றாகக் கண்டு வருகின்றோம்.
அவ்வகையில் இன்று நாம் காண்பது..
  ' அஃது '  என்னும் சொல்லாகும். (# 226)
       
       இச்சொல்லின் பொருளைக் காண்பற்கு
முன்பாக, இச்சொல் இடம்பெற்றுள்ள
மேற்குறித்த குறள் எண் 226-ஐப் பார்ப்போம்.
"அற்றா ரழிபசி தீர்த்த  லஃதொருவன்
  பெற்றான் பொருள்வைப்  புழி."   (#226)
புணர்ச்சி பிரித்த நிலை:-
*************************
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு  உழி.
விளக்கம்:
**********
       துன்பந்தந்து வருத்துகின்ற வழியற்ற வறியவரின் கொடும் பசியைப் போக்குக!
அச்செயலே, செல்வத்தைத் திரட்டி வைத்திருப்பவர் தம் சொச்தைக் காத்து வைத்துக்கொள்ளும் வைப்பகம் ஆகும்.
      அதாவது, வறியவரின் பசியினைத்
தீர்ப்பதற்காகச் செலவிட்ட பொருள் பின்பு (மறுமையில்) தனக்கே வந்து உதவும் தன்மையதால், அருள் நோக்கிச்
செய்யாவிடினும் தனக்குப் பயன்படும்
அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்று
பாவாணர் அவர்கள் குறிப்பிடுவார்.
   இனி, இங்கு நாம் எடுத்துக்கொண்ட
'அஃது' என்னும் சொல்லுக்கான பொருளைப் பார்ப்போம்.
      பொதுவாக, அஃது என்றால், 'அது' எனப்
பொருள்படும்.ஆனால், திருக்குறளில் அஃது என்னும்
இச்சொல்லைப் பல்வேறு இடங்களில்
பல்வேறு பொருள்களில் திருவள்ளுவர் ஆண்டுள்ளார் என்பதை அறிவதே இச்சொல்லின் வேறுபட்ட பயன்பாடுகள்
பற்றிய அறிவினையும் பெறுதல் ஆகும்.
      அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாயின், அச்சொல்லை அடுத்துவரும் வருமொழியின் சொல்லைக்
கவனித்தல் வேண்டும். வருமொழியில்
உயிரெழுத்துகளாகிய பன்னிரண்டு எழுத்துகளுள் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தொடங்கினால்,  'அஃது' என்னும் சொல்லை நிலைமொழியில் அமைப்பது கட்டாயம் ஆகும். அஃது என்பதே நாளடைவில் 'அது'
என்றாகிவிட்டது. எப்படியெனில், 'அஃதாவது' என்பது 'அதாவது' என்பதுபோல!
         ✖.                                  ✖.                                    ✔
அது அன்று                 - அதுவன்று                 -  அஃதன்று
அது ஆவது                 - அதாவது                    -  அஃதாவது
அது இல்லார்             - அதுவில்லார்             - அஃதில்லார்
அது ஈதல்                    - அதுவீதல்                   - அஃதீதல்
அது உண்மையான் - அதுவுண்மையான்  - அஃதுண்மையான்
அது ஊழ்வினை       - அதுவூழ்வினை-      - அஃதூழ்வினை
அது என்பது                - அதுவென்பது             -அஃதென்பது
அது ஏற்றல்                - அதுவேற்றல்             - அஃதேற்றல்
அது ஐயமே                - அதுவையமே            - அஃதையமே
அது ஒன்று                 - அதுவொன்று             - அஃதொன்று
அது ஓடாது                - அதுவோடாது            - அஃதோடாது

அது ஔவையார் கூற்று- - அஃதவ்வையார் கூற்று.
     
இவ்வாறாகவே அஃது என்னுஞ்சொல்லை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
திருக்குறளில் இம்முறை வழுவாது ஆளப்பட்டுள்ளதையும் அறிவுறுத்த
விழைகின்றேன்.
சரி, இனி இச்சொல் மேற்குறித்த குறளில் எதனைச் சுட்டி நிற்கின்றது என்பதையும்
அறிந்து கொள்வதே இங்கு நம் நோக்கம் ஆகுமாம்!   நாம் முன்னர் கண்டவாறு,
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவும் ; அதுவே செல்வமுடையவர் தம் செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கருவூலம் ஆகும்- என்ற கருத்தினைப் பார்க்கும்போது,

இங்கு அஃது என்னும் சொல் வெறும் செய்யுள்  அழகுக்காக என்றில்லாமல், ஏதோவொரு குறிப்பை உணர்த்தி நிற்பதைக் காணலாம்.
      ஆம் . இங்கு அஃது என்பது "அற்றார்
அழிபசி தீர்த்தல்"- அஃதாவது, வறியோரின் கடும் பசியைப் போக்குதல் , என்னும் அறவினையைத்தான் அச்சொல் குறித்து நிற்பதை நன்கு தெளியலாம்.
       ஆகவே, திருக்குறளில் எல்லா
இடங்களிலும் இச்சொல் ஒரே குறளில், தாம்  முன்னர் சொன்ன கருத்தினைத் தொகுத்து அழுத்தம் கொடுப்பதற்காகவே வள்ளுவர்   பயன்படுத்தியுள்ளார்
என்பதும் தெரிய வருகின்றது.
       இவ்வாறு அஃது என்னும் மூன்றெழுத்துச் சொல்லுக்கு இவ்வளவு  ஆழமான பொருள்கள் உள்ளன என்பதை
அறிவது வியப்பாக உள்ளதல்லவா?
மேற்கண்ட குறள் ஈகை என்னும் 23-ஆவது
அதிகாரத்தில் குறள் எண்: 266-ஆக இடம்
பெற்றுள்ளது.
நன்றி. இன்னும் தொடர்வோம்..

      


      
மேலும் படிக்க »

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் எளிதாக பயில
1 க"டுகு
2 உ"ளுந்து
3 ங"னைச்சு
4 ச"மைச்சு
5 ரு"சிச்சு
6 சா"ப்பிட்டேன்
7 எ"ன்று
8 அ"வன்
9 கூ"றினான்
0 ஓ"என்றேன்
மேலும் படிக்க »

அளபெடை என்பது என்ன ? : குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்

செய்யுளில் ஓசை குறையும்போதும்,
சீரும், சீர்களுடன் இணையும் தளைகளும் சிதையும்போதும்,  செய்யுள் இலக்கணத்தில் குற்றம் ஏற்படும். அதனை
நிறைவு செய்வதற்கும், செய்யுளின் ஓசை
இனிமையாக அமையும் பொருட்டும்,
செய்யுளின் சிலவிடங்களில் அளபெடைகள்
அமைத்து இயற்றப்படுகின்றன.


       அதாவது, 
*  ஒரு நெடில் தனக்கு இனமான குறிலை
    உடன்சேர்த்துக் கொள்ளும்.


* குறிலாக இருந்தால், அது நெடிலாக 
   மாறித் தன்னினத்தை அளபெடுத்துக் 
   கொள்ளும்.


* சில வேளைகளில், ஓர் ஒற்றெழுத்தும்
   தானே அளபெடுத்துக் (இரட்டித்துக்)
    கொள்வதும் உண்டு.



    + அளபெடுத்தல் என்பது, செய்யுளிலுள்ள
        நின்றசீர், வருஞ்சீர்க்கு ஏற்பத் தன்
        அமைப்பில் மாற்றம் செய்துகொள்ளும்
        வகையாகும்.


    + இவ் அளபெடை என்பது :-


(1) இசைநிறை அளபெடை -அல்லது
       செய்யுளிசை அளபெடை;


(2) இன்னிசை அளபெடை;


(3) சொல்லிசை அளபெடை


(4) ஒற்றளபெடை


      என நான்கு வகைப்படும்.


இவற்றை விரிவாகக் காண்போம்.




(1) இசைநிறை அளபெடை அல்லது
***************************************
      செய்யுளிசை அளபெடை:-
**********************************


     இது, செய்யுளில் ஓசை குறையும்போதும்,
      சீரும் தளையும் சிதையும் போதும் , 
     அசையை நிறைப்பதற்காக
      அளபெடுக்கும்.


எ- கா:-


" ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை,
ஆஅதும் என்னு மவர். ".    (குறள்# 653)


   இக்குறளில் 'ஓ' என்னும் உயிர்நெடில்
தனக்குரிய இனக்குறில் 'ஒ ' வை
அளபெடுத்துள்ளது. இரண்டாவது அடியில்
'ஆ' என்னும் உயிர்நெடில் தனக்கு இனமான
'அ' குறிலை அளபெடுத்துள்ளது.
      அளபெடுக்காத நிலையில், ' ஓதல்'
என்னும் சீர் 'தேமா' -வில் உள்ளது. வெண்பா இலக்கணப்படி, நின்ற சீர் 'மா' - வில் இருந்தால் வருஞ்சீரில் 'நிரை' (மாமுன்
நிரை) வருதல் வேண்டும். ஆனால்,,வரும்
சீரில் ' வேண்டும் ' என 'நேரில்' அமைக்க
விரும்பிய வள்ளுவர் , நின்ற சீரை , வரும்
சீருக்குத் தளைதட்டாமல் அமைக்கும் பொருட்டு, ஓதல் என்பதனை, 'ஓஒதல்' என
விளச்சீராக்கி ('கூ விளம் ' ஆக்கி), 
'விளமுன் நேர்' வரச்செய்து வெண்பா இலக்கணத்தைச் சரிசெய்துள்ளார் என்பதனை அறியவும். 
          இரண்டாம் அடியில் உள்ள, 'ஆஅதும்'
என்பதும் இவ்வகையில் அமையப் பெற்றதே. இவ்வளபெடைகள் சீரின்
இசையை நிறைவு செய்வதால் இசைநிறை 
அளபெடைகள் ஆயின.


(2) இன்னிசை அளபெடை:-
*****************************


      இன்னிசை அளபெடை என்பது, 
செய்யுளில் ஓசையோ அசையோ குறையாத போதும் அளபெடுப்பது ஆகும்.


எ-கா:-


" கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.".   (#15)


     இந்தக் குறளில், 'கெடுப்பதூஉம்' என்று
அளபெடுக்காமலே ,'விளமுன் நேர்' 
சரியாகவே அமையப்பெற்றுள்ளது.
'எடுப்பதூஉம் ' என்பதிலும் விளமுன் நேர்
அமையப்பெற்று வெண்பா இலக்கணம்
சரியாகவே உள்ளது. இருப்பினும் குறளின்
ஓசையை 'இனிமைப்படுத்துவதற்காகவே'
இவை 'காய்ச்' சீர்களாக மாற்றப்பெற்றுக்
குறளோசை, இன்னிசை பயப்பதாக அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
இதுவே இன்னிசை அளபெடையாகும்.



(3) சொல்லிசை அளபெடை:-
*******************************


       செய்யுளில் ஓசை குறையும்போதும்,
ஒரு பெயர்ச்சொல்லை வினையெச்சச்
சொல்லாக மாற்றுவதற்கு அளபெடுப்பது
சொல்லிசை அளபெடையாகும்.
எ-கா.


" உரனசைஇ உள்ளந் துணையாகச்
  சென்றார்;
  வரனசைஇ நின்று முளேன்.". (#1263)



        மேற்கண்ட குறளில், 'உரனைசை'
என்னும் சீரும், 'வரனசை' என்னும் சீரும்,
கருவிளச் சீர்களாக அமைந்து வெண்பா இலக்கணம் சரியாகத்தான் உள்ளன. ஆயினும், 'நசை' (விருப்பம்)
என்னும் பெயர்ச்சொற்களை,'நசைஇ' 
(விரும்பி) என வினையெச்சச் சொற்களாக
மாற்றுவதற்கென்றே இவ்விரண்டு சீர்களும் அளபெடெடுத்திருக்கின்றன.
இதைத்தான் சொல்லிசை அளபெடை என்கிறோம்.


     அளபெடுக்கும்போது, ஆ -வுக்கு 'அ'-வும்,
ஈ - க்கு 'இ' -யும், ஊ- வுக்கு ,'உ' -வும், 
ஏ- க்கு 'எ' - வும், ஐ- க்கு 'இ' -யும், ஓ- வுக்கு
'ஒ' -வும், ஔ- க்கு 'உ' -வும் அளபெடுக்கும்.


(4). ஒற்றளபெடை:- 
*********************        
       இஃது திருக்குறளில் இல்லாத வகையாகும்).



       செய்யுளில் ஓசை குறையும்பொழுது,
தனிக்குறிலை அல்லது குறிலிணையை
அடுத்துவரும் ஒற்றெழுத்து, அளபெடுத்து
ஒசையை நிறைவு செய்யும்.


எ-கா:-


" எங்ங் கிறைவனுளன் என்பாய்
   மனனேயான்,
   எங்ங் கெனத்திரிவா  ரில்."


     இக்குறள் வெண்பாவில், "எங்ங்கு
இறைவன்" என்பது, "எங்ங் கிறைவன்"
என்று ஆகி, ஓசையை நிறைந்துள்ளது.
இது, தனிக்குறிலை (எ) அடுத்துவந்த
ஒற்று (ங்) ஆனது , "ங்ங்" -என அளபெடுத்தது(அதாவது, ஒற்று இரட்டித்தது).


அடுத்து,


" இலங்ங்கு  வெண்பிறைசூ  டீசனடி
  யார்க்குக்
  கலங்ங்கு  நெஞ்சமிலை  காண்."


      இந்தக் குறள் வெண்பாவில்,
'இலங்ங்கு,  கலங்ங்கு' என்று, குறிலிணைக்கு (இல , கல) அடுத்து வந்
ஒற்றாகிய 'ங்' - , 'ங்ங்' -என அளபெடுத்துள்ளதைக் காண்க.


      மேற்கண்ட சொல்லாகிய 'இலங்கு'
என்பதில் ஒற்று அளபெடுக்காமல் இருந்தால், புளிமா- ஆகும். புளிமாவானால்,
வெண்பா இலக்கணம் தவறாகும். அதனால்
'இலங்ங்கு' என்று ஒற்று அளபெடுத்துக்
கருவிளம் ஆகி, (இலங்/ங்கு - என்றாகி) வெண்பா இலக்கணத்தை
விளமுன் நேர் எனச் சரிசெய்துள்ளது.
'கலங்ங்கு' என்னும் சீரும் இதனையே
ஒக்கும். இங்கு, ஈற்றசையாகிய 'ங்கு'
என்பது இரு குறிலெழுத்துகள் போலக்
கருதுதல் வேண்டுமென்க.


திருக்குறளில் முதல் மூன்று வகையான
அளபெடைகளும் நிறைந்துள்ளன.


இசைநிறை அளபெடைகள் மொத்தம்
ஐம்பத்து நான்கு (54) உள்ளன.


ஓர் எடுத்துக்காட்டு:-


"கற்றதனா லாய பயனென்கொல் 
  வாலறிவ
  னற்றா டொழாஅ  ரெனின்."   (#02)


இவ்வாறான அளபெடைகள் அமையப்பெற்ற குறள்களின் எண்களைக் கீழ்க்காணவும்.


                 *************
02, 12, 14, 38, 46, 55, 238, 257, 347, 653, 702,
809, 824, 840, 848, 876, 921, 933, 1052, 1053,
1059, 1070, 1087, 1088, 1090, 1097, 1098,
1104, 1108, 1115, 1143, 1176, 1194, 1198,
1200, 1204, 1210, 1245, 1292, 1295, 1301,
1305, 1324.


                       **********


(2) இன்னிசை அளபெடைகள் மொத்தம்
      முப்பத்தாறு (36) ஆகும்.


எ-கா.


" கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்
   றாங்கே
  எடுப்பதூஉ  மெல்லா  மழை."  (#15)


இதுபோன்ற அளபெடைகள் அமையப்
பெற்றக் குறள்களின் எண்கள் வருமாறு:-


                     *************


15, 31, 32, 166, 227, 230, 422, 425, 460, 461,
544, 546, 599, 641, 644, 713, 797, 812, 816,
820, 830, 845, 913, 928, 929, 931, 938, 940, 
982, 1005, 1009, 1036, 1079, 1194, 1215, 
1292- (இக்குறளில் ,'செறாஅர்' -மட்டும்).


                     *************


(3) சொல்லிசை அளபெடைகள்:-
திருக்குறளில் காணப்படும் இவ்வகையான
அளபெடைகள் மொத்தம் ஆறு (6) மட்டுமே.


எ- கா:


"இன்சொலா  லீர மளைஇப் 
படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்." (#91)


இவ்வகையான அளபெடைகள் அமையப்
பெற்ற குறள்களின் எண்கள்:-


                  *************


91, 94, 182, 660, 1040, 1263.


                  *************
மேலும் படிக்க »