திருக்குறளில் காணப்படும்அருஞ்சொல்

திருக்குறளில் காணப்படும்
அருஞ்சொல்- சொற்றொடர்
அகரமுதலியும் இணையான
குறள்களும். - தொடர்- 03.

பேரன்புடையீர், வணக்கம்.
    திருக்குறளில் உள்ள அருஞ்சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கான பொருள்களையும் அவை             இடம்பெற்றுள்ள குறள்களையும்
ஒவ்வொன்றாகக் கண்டு வருகின்றோம்.
அவ்வகையில் இன்று நாம் காண்பது..
  ' அஃது '  என்னும் சொல்லாகும். (# 226)
       
       இச்சொல்லின் பொருளைக் காண்பற்கு
முன்பாக, இச்சொல் இடம்பெற்றுள்ள
மேற்குறித்த குறள் எண் 226-ஐப் பார்ப்போம்.
"அற்றா ரழிபசி தீர்த்த  லஃதொருவன்
  பெற்றான் பொருள்வைப்  புழி."   (#226)
புணர்ச்சி பிரித்த நிலை:-
*************************
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு  உழி.
விளக்கம்:
**********
       துன்பந்தந்து வருத்துகின்ற வழியற்ற வறியவரின் கொடும் பசியைப் போக்குக!
அச்செயலே, செல்வத்தைத் திரட்டி வைத்திருப்பவர் தம் சொச்தைக் காத்து வைத்துக்கொள்ளும் வைப்பகம் ஆகும்.
      அதாவது, வறியவரின் பசியினைத்
தீர்ப்பதற்காகச் செலவிட்ட பொருள் பின்பு (மறுமையில்) தனக்கே வந்து உதவும் தன்மையதால், அருள் நோக்கிச்
செய்யாவிடினும் தனக்குப் பயன்படும்
அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்று
பாவாணர் அவர்கள் குறிப்பிடுவார்.
   இனி, இங்கு நாம் எடுத்துக்கொண்ட
'அஃது' என்னும் சொல்லுக்கான பொருளைப் பார்ப்போம்.
      பொதுவாக, அஃது என்றால், 'அது' எனப்
பொருள்படும்.ஆனால், திருக்குறளில் அஃது என்னும்
இச்சொல்லைப் பல்வேறு இடங்களில்
பல்வேறு பொருள்களில் திருவள்ளுவர் ஆண்டுள்ளார் என்பதை அறிவதே இச்சொல்லின் வேறுபட்ட பயன்பாடுகள்
பற்றிய அறிவினையும் பெறுதல் ஆகும்.
      அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாயின், அச்சொல்லை அடுத்துவரும் வருமொழியின் சொல்லைக்
கவனித்தல் வேண்டும். வருமொழியில்
உயிரெழுத்துகளாகிய பன்னிரண்டு எழுத்துகளுள் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தொடங்கினால்,  'அஃது' என்னும் சொல்லை நிலைமொழியில் அமைப்பது கட்டாயம் ஆகும். அஃது என்பதே நாளடைவில் 'அது'
என்றாகிவிட்டது. எப்படியெனில், 'அஃதாவது' என்பது 'அதாவது' என்பதுபோல!
         ✖.                                  ✖.                                    ✔
அது அன்று                 - அதுவன்று                 -  அஃதன்று
அது ஆவது                 - அதாவது                    -  அஃதாவது
அது இல்லார்             - அதுவில்லார்             - அஃதில்லார்
அது ஈதல்                    - அதுவீதல்                   - அஃதீதல்
அது உண்மையான் - அதுவுண்மையான்  - அஃதுண்மையான்
அது ஊழ்வினை       - அதுவூழ்வினை-      - அஃதூழ்வினை
அது என்பது                - அதுவென்பது             -அஃதென்பது
அது ஏற்றல்                - அதுவேற்றல்             - அஃதேற்றல்
அது ஐயமே                - அதுவையமே            - அஃதையமே
அது ஒன்று                 - அதுவொன்று             - அஃதொன்று
அது ஓடாது                - அதுவோடாது            - அஃதோடாது

அது ஔவையார் கூற்று- - அஃதவ்வையார் கூற்று.
     
இவ்வாறாகவே அஃது என்னுஞ்சொல்லை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
திருக்குறளில் இம்முறை வழுவாது ஆளப்பட்டுள்ளதையும் அறிவுறுத்த
விழைகின்றேன்.
சரி, இனி இச்சொல் மேற்குறித்த குறளில் எதனைச் சுட்டி நிற்கின்றது என்பதையும்
அறிந்து கொள்வதே இங்கு நம் நோக்கம் ஆகுமாம்!   நாம் முன்னர் கண்டவாறு,
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவும் ; அதுவே செல்வமுடையவர் தம் செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கருவூலம் ஆகும்- என்ற கருத்தினைப் பார்க்கும்போது,

இங்கு அஃது என்னும் சொல் வெறும் செய்யுள்  அழகுக்காக என்றில்லாமல், ஏதோவொரு குறிப்பை உணர்த்தி நிற்பதைக் காணலாம்.
      ஆம் . இங்கு அஃது என்பது "அற்றார்
அழிபசி தீர்த்தல்"- அஃதாவது, வறியோரின் கடும் பசியைப் போக்குதல் , என்னும் அறவினையைத்தான் அச்சொல் குறித்து நிற்பதை நன்கு தெளியலாம்.
       ஆகவே, திருக்குறளில் எல்லா
இடங்களிலும் இச்சொல் ஒரே குறளில், தாம்  முன்னர் சொன்ன கருத்தினைத் தொகுத்து அழுத்தம் கொடுப்பதற்காகவே வள்ளுவர்   பயன்படுத்தியுள்ளார்
என்பதும் தெரிய வருகின்றது.
       இவ்வாறு அஃது என்னும் மூன்றெழுத்துச் சொல்லுக்கு இவ்வளவு  ஆழமான பொருள்கள் உள்ளன என்பதை
அறிவது வியப்பாக உள்ளதல்லவா?
மேற்கண்ட குறள் ஈகை என்னும் 23-ஆவது
அதிகாரத்தில் குறள் எண்: 266-ஆக இடம்
பெற்றுள்ளது.
நன்றி. இன்னும் தொடர்வோம்..
