அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அன்னாரின் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைச் செய்து முடிப்பதே....
. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை
(1) சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு, மொழியியற் கலைநாகரிகத் தன்னாட்சி (Linguistic and Cultural Autonomy) அமைத்தல்.
(2) தனித்தமிழ்ப் பற்றும் தமிழிலக்கிய வறிவும் உள்ள ஆசிரியரையே கல்வியமைச்சராக அமர்த்துதல்.
(3) தனித்தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உள்ளவராய் ஓய்வு பெற்றுள்ள, கல்வித்துறை யியக்குநர், பெருங்கல்லூரி முதல்வர், தலைமைப் பேராசிரியர் ஆகியோரையே, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துணைக் கண்காணகராக (Vice-Chancellors) அமர்த்துதல்.
(4) இருவகை வழக்குத் தமிழ்ச்சொற்களையும் அறிந்தவரும் வண்ணனை மொழியியலையன்றி வரன்முறை மொழி நூலையே கடைப்பிடிப்பவரும், வடமொழியிந்தித் தாக்குதலினின்று தமிழைக் காப்பவரும், உண்மையையுரைக்கும் திண்மையுள்ள வருமான தமிழ்ப் பேராசிரியரையே, சென்னை அண்ணாமலை மதுரையாகிய முப்பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறைத் தலைவராக அமர்த்துதல்.
(5) தமிழுக்கு மாறாக வேலைசெய்யும் தமிழாசிரியர், தலைமை யாசிரியர், முதல்வர், துணைக் கண்காணகர் ஆகியோரைப் பதவியினின்று நீக்குதல்.
(6) இந்தியால் தமிழ் கெடுவது திண்ணமாதலால், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டத்தையே கல்வி, ஆள்வினை (Administration), வழக்குத்தீர்ப்பு ஆகிய முத்துறையி லும் எல்லா மட்டத்திலும் கையாளுதல்.
(7) தமிழ்ப்பற்றற்ற பிராமணத் தமிழ்ப்பண்டிதர் கொண்டான்மாரைத் துணைக்கொண்டு தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி என்னும் கலவைமொழி அகரமுதலியை உடனே திருத்துதல்.
(8) தமிழ்நாட்டு உண்மை வரலாற்றை எழுதுவித்துப் பாடமாக்கலும், தமிழ்ப்பகைவரால் எழுதப்பட்ட பொய் வரலாற்றைப் புறக்கணித்தலும்.
(9) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை முழுநிறை வாக உருவாக்குதல்.
(10) செம்மையான ஆங்கிலத் தமிழகரமுதலி யொன்று தொகுப்பித்தலும், கலையறிவியல் கம்மியக் குறியீடு களைத் தூய தமிழில் மொழிபெயர்த்தலும்.
(11) பேராயக்கட்சியாளர் தொகுத்த கலைக்களஞ்சிய நடையை யும், அதிலுள்ள தமிழைப்பற்றிய தவறான கருத்துகளையும் திருத்துதல்.
(12) அச்சிற்கு வராத தமிழ்ச்சொற்களையும் தமிழ் ஏட்டுப் பொத்தகங்களையும் தக்க அறிஞரைக்கொண்டு தொகுப்பித்தல்.
(13) கல்வெட்டுத் தொகுப்பும் வெளியீடும் தக்க தமிழறிஞரைக் கொண்டு செய்வித்தல்.
(14) பாடப்பொத்தகங்களைத் தூய தமிழில் எழுதுவித்தலும், தூய தமிழ் நூல்களை வெளியிடும் கழகங்களை ஊக்கு தலும்.
(15) தூய தமிழிற் பேசும் மாணவர்க்கும் தூய தமிழிற் சிறந்த நூலியற்றும் அறிஞர்க்கும் பரிசளித்தல்.
(16) ஆட்பெயர், இடப்பெயர், பொருட்பெயர், பட்டப்பெயர், சிறப்புப்பெயர் ஆகிய எல்லாப் பெயரையும் தூய தமிழாக்கல்.
(17) இலக்கணம், இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பழந்தமிழ் அறிவியல்களையும் கலைகளையும் முன்போல் தூய்மைப்படுத்துதல்.
(18) அரசினர் அறிவிப்புகளும் விளம்பரங்களும் எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையுமின்றி வெளிவரச் செய்தல்.
(19) தமிழையும் பதினெண் திரவிட மொழிகளையும் ஒருங்கே கற்பிக்கும் ஒரு கல்லூரி நிறுவுதல்.
(20) தமிழ்ப்பற்றுள்ளவரையே, சட்டசவை பாராளுமன்ற வேட்பாளராகத் தெரிந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கவும் செய்தல்.
(21) வண்ணனை அடிப்படையிலன்றி வரலாற்றடிப் படையி லேயே மொழி நூலை வளர்த்தல்.
(22) கோயில்வழிபாடும், இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெறச் செய்தல்.
(23) தமிழுக்காக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வாழ்க்கை நடைப்பொருள் அளித்தல்.
(24) தமிழ்ப்பற்றாற் பதவியிழந்தோரைப் பின்னோக்கிய வலிமை யொடு (Retrospective effect) மீண்டும் பதவியில் இருத்துதல்.
(25) வருவாயற்ற பெருந்தமிழ்ப் புலவர்க்கு உதவிச் சம்பளம் அளித்தல்.
(26) தமிழுணர்ச்சியைப் பரப்பிப் பொதுமக்கட்குத் தமிழறிவு புகட்டும் தனித்தமிழ் இதழ்கட்குப் பொருளுதவி செய்தல்.
(27) மேனாட்டாரைத் துணைக்கொண்டு, தென்மாவாரியில் ஆழ மூழ்கிப் பழம்பொரு ளெடுத்தாராய ஏற்பாடு செய்தல்.
(28) அலுக்கிற்கும் அளபெடைக்கும் போதிய இடைவெளி விட்டு, இம்மியும் பிசகாது தியாகராசையத் கீர்த்தனைகள் போன்றே இன்பமாய்ப் பாடக்கூடிய உயரிய மெட்டுப் பாடல்களை அறிவும் ஒழுக்கமும் தழுவிய பொதுப் பொருள்கள்பற்றி, இயற்றித்தரும் இசைவாணர்க்கும் பாவலர்க்கும் சிறந்த பரிசளித்தல்.
(29) ஊர்காவலர் படைத்துறையினர் உடற்பயிற்சியும் மெய்க் காட்டும் (parade), தமிழ் ஏவற் சொற்களைக் கொண்டு நடப்பித்தல்.
(30) கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இறுதியில் உலக வாழ்த்துப் பாட்டுத் தமிழிற் பாடல்.
(31) மறைமலையடிகள், (P.T.) சீநிவாசையங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவர்க்கும் சென்னையில் படிமை நிறுவுதலும், அம் மூவர் முழுவுருவப் படங்களையும் முதன்மையான அரசியல் அலுவலகங்களிலும் பொதுக் கூடங்களிலும் மாட்டி வைத்தலும்.
(32) செய்யுட்கே சிறப்பாக வுரிய இலக்கணக் கூறுகளை நீக்கி விட்டு, உரைநடை யிலக்கணத்தைமட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிப் பொதுத்தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைத்தல்.
(33) இகரத்தின் நெடிலைக் குறித்தற்கு, இடைக்காலத்தில் ஆரியராற் புகுத்தப்பட்ட. வாயிற்கால்போன்ற கிரந்த வரிவடிவை நீக்கிவிட்டு, இறுதியிற் சுழிகொண்ட பழைய இகர வடிவையே கையாளுதல்.
(34) இங்கிலாந்தில் 1875ஆம் ஆண்டிற் செய்தவாறு, தமிழ் நாட்டில் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைச் சட்ட வாயிலாய்ப் புகுத்துதல்.
(35) அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறைத் தொடக்கவிழாத் தலைவர் பர். சட்டர்சியின் அச்சிட்ட (தமிழுக்கு மாறான) தலைமையுரையை, அக் கழகத்தி னின்று அகற்றுதல்.
(36) பர் சட்டர்சியும் பர்.கத்திரேயும் இந்திய ஞாலநூலியல் வரலாறு-முதன்மடலத்தில் (Gazetteer of India - Vol. I) தமிழைப் பற்றி வரைந்துள்ள தவறான கருத்துகளைத் திருத்துதல்.
தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை
(1) உண்மையான தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் வெளி யிட்டு உலக முழுதும் பரப்புதல்.
(2) வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச்சொற்கள், நூல்கள், கலைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றை ஆராயுமாறு, தக்க ஆராய்ச்சி யாளரைக் கானா, எகிபது, பிரனீசு, மலைநாடு, மெகசிக்கோ (Mexico), காம்போதியா, சையாம், மலேயா, சாலித்தீவு முதலிய நாடுகட்கு அனுப்புதல்.
(3) வெளிநாடுகளுடன் போன்றே, இந்திய நடுவணரசோடும் பிற இந்திய மாநிலங்களோடும், எழுத்துப் போக்குவரத்து ஆங்கிலத்திலேயே நடத்துதல்.
(4) ஒவ்வொரு பெருநாட்டிலும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் பதவி ஏற்படச்செய்தல்.
(5) தமிழ்மொழி நாகரிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு விடைமுகவர் குழுவை (Delegation), உலகஞ் சுற்றிவரச் செய்தல்.
(6) தமிழர் பெருந்தொகையினராயுள்ள இலங்கைபோன்ற வெளிநாடுகளில், இந்தியத் தூதாண்மைக் குழுவில், தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுள்ள தூய தமிழர் ஒருவரும் இருக்கச் செய்தல்.
(7) ஆக்கசுப்போர்டு (Oxford) ஆங்கில அகரமுதலியிலும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திலும(Encyclopaedia Britanic) தமிழைப் பற்றிய தவறான குறிப்புகளையும் கூற்றுகளையும் உடனே திருத்தச்செய்தல்.
இவற்றோடு செய்ய வேண்டியன பல இருந்தாலும், மொழியளவில்,....
திராவிட மொழிக்குடும்பம் என்ற சொலவடையை மாற்றித் 'தமிழிய மொழிக் குடும்பம்' என்று உலகறிய நிருவி மாற்றிடச் செய்யவேண்டும் என்பதையும் இணைத்துக் கொள்ளலாம்....