சொற்றொடர்களில் வல்லெழுத்துக்களான "க், ச், த், ப்," மிகுந்து வருதலையே சுருக்கமாக வலிமிகுதல் எனப்படுகிறது. வலிமிகுதலால் சொற்றொடர்களில் பொருள் வேறுபாடு உண்டாகும். "தந்த பலகை" என்னும் தொடருக்கும் "தந்தப் பலகை" என்னும் தொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
தந்த பலகை என்பது கொடுத்த பலகை என்றும், தந்தப் பலகை என்பது தந்தத்தால் ஆன பலகை என்று பொருள்படும்.
🌹🌹
வலிமிகும் இடங்களுக்குரிய விதிகள். 1 - 14
1) அ, இ, எ, இந்த, எந்த, அங்கு, இங்கு, ஆங்கு, இங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு, அப்படி, இப்படி, எப்படி,
ஆகிய சொற்களுக்குப் பின் வலிமிகும்.
எ.காட்டு
அ+காட்சி = அக்காட்சி
இ+படம் = இப்படம்
எ+சங்கம் =எச்சங்கம்
அந்த+பையன்=அந்தப் பையன்
பாதி+துணி= பாதித்துணி
2) வந்தொடரக் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
எ.காட்டு
பட்டு + புடவை=
பட்டுப்புடவை
விற்று + தந்தார் = விற்றுத் தந்தார்
3) நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வலிமிகும்
எ.காட்டு
கனா + கண்டான் = கனாக் கண்டான்
பலா + பழம் = பலாப்பழம்
4) முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
எ.காட்டு
முழு + பாடல் = முழுப்பாடல்
நடு + தெரு = நடுத்தெரு
5) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்
எ.காட்டு
பேசா - பையன்= பேசாப் பையன்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை
6) அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகும்.
எ.காட்டு
செய்ய + சொல் = செய்யச்சொல்
ஆட + கண்டான் = ஆடக் கண்டான்
ஆடி + பாடினான் = ஆடிப் பாடினான்
7) ஆய், போய் என முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்
எ.காட்டு
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்
வருவதாய் + கூறினான்=
வருவதாய்க் கூறினான்
8) இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) க்குப் பின் வலிமிகும்.
எ.காட்டு
மானை + பார் = மானைப் பார்
நாயை + துரத்து = நாயைத் துரத்து
9) நான்காம் வேற்றுமை உருபு (கு) க்குப் பின் வலிமிகும்.
எ.காட்டு
பள்ளிக்கு + சென்றான் = பள்ளிக்குச் சென்றான்
அவனுக்கு + கொடு = அவனுக்குக் கொடு
10) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும். (நிலைமொழியில் ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய, ஆகியவை மறைந்து நிற்கும்)
எ.காட்டு
நாய் + குட்டி = நாய்க்குட்டி
யானை + தந்தம் = யானைத் தந்தம்
வண்டி + சக்கரம் = வண்டிச் சக்கரம்
11) உவமைத் தொகையில் வலிமிகும். ( உவமை உருபுகளான போல, போன்ற, ஒப்ப, நிகர முதலியவை நிலைமொழியில் மறைந்து நிற்கும்)
எ.காட்டு
மலை + தோள் = மலைத்தோள்
மலர் + கை = மலர்க்கை
12) பண்புத் தொகையில் வலிமிகும்.
எ.காட்டு
வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்
சதுரம் + பலகை = சதுரப்பலகை
13) நிலைமொழி சிறப்பு பெயராகவும், வருமொழி பொதுப் பெயராகவும் வரும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலிமிகும்.
எ.காட்டு
தை + திங்கள் = தைத்திங்கள்
பலா + பழம் = பலாப்பழம்
14) ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும்.
எ.காட்டு
தீ + சட்டி = தீச்சட்டி
கை + குட்டை = கைக்குட்டை
பூ + கூடை = பூக்கூடை
இவை வலிமிகும் இடங்களைக் கண்டு கொள்ள எளிய வழிகள்...
மூன்றாவதற்கும் பதினான்குக்கும் விலக்குகள் உள்ளன... மற்றவற்றை முடிபாகக் கொள்ளலாம்... நன்றி...