பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர்; என்+தன் = என்றன்; காடு = வனம்?

காடு என்பது சமவெளியிலும் காணப்படும். மரஞ்செடிகொடிகள் வளர்ந்தும் இருக்கும். பட்டுப்போயும் இருக்கலாம். அளவின்றிப் பெருகினாலும் சரி, சிதைந்தாலும் சரி - அது காடாகும். கட்டைகள் மண்ணோடு தீயோடு சிதையுமிடம் என்பதால்தான் இடுகாடு, சுடுகாடு. தானே உருவாகும். முயற்சியாலும் உருவாக்கப்படலாம். 

வனம் என்பது பல்லுயிர்ப் பெருக்கமுள்ள, ஆதியிலிருந்து வளர்ந்து செழித்த பகுதி. வனம் என்பதில் உள்ள வன்மையைக் கவனிக்கவும். கானகம் என்பது மலைப்பாங்கான பகுதியில் இருப்பதைக் குறிப்பது. மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தோடு தொடர்புடைய வனப்பகுதி கானகம். 

***************************************************************************************

பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர் - இம்மூன்றும் எங்கெங்கு எப்படியெப்படி வரும் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இவை தொடர்பாக எழும் குழப்பங்களை எளிதில் தீர்க்கலாம்.

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் !

அறிஞர், பொறிஞர், கலைஞர், கவிஞர், வலைஞர்.

இயக்குநர், அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர்.

உறுப்பினர், பொறுப்பினர், படையினர், அணியினர்.

ஞர்-க்கு முன்னொட்டுவது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது.

நர்-க்கு முன்னொட்டுவது அச்செயலுக்குரிய வினைவேர்ச்சொல்லாக இருக்கிறது. கட்டளையிடுகிறது.

னர்-க்கு முன்னொட்டுவது பெயர்ச்சொல்லாக இருந்து இன்+அர் சேர்வதால் பலர்பால் பெயர்ச்சொல்லாகிறது.

நர் சேர்க்குமிடங்களில் ‘உகர’ ஈற்றில் முடியும் வினைவேர்ச்சொல்லாக இருப்பதையும் கவனிக்கவும் (இயக்கு, அனுப்பு, பெறு, ஓட்டு).

************************************************************************************

புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல். 

கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி. 

நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர். 

பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை. 

உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன்.

ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால். 

இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது.

பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை !

ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு !

முகநூல் என்பதை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்க முயன்றாலும் அது ‘முகனூல்’ என்றே ஒலிக்கும். ஏன் ?

முகம்+நூல், முகம் என்பதில் உள்ள மகர ஈற்று மெய் ‘ம்’ கெட்டு முகநூல் (முகநக நட்பது, முகவரி) என்று புணர்வதுதானே சரி ? முகனூல் எப்படிச் சரியாகும் ? நல்ல கேள்வி.

மகர ஈற்று மெய் - ‘ம்’ என்று முடியும் பெயர்ச்சொற்களில் ம் என்ற எழுத்துக்குப் பதிலாக ன் என்ற மெய்யெழுத்து இடம்பெறும். நலம் என்பதை நலன் எனலாம், திறம் என்பதைத் திறன் எனலாம், வளம் என்பதை வளன் எனலாம், கலம் என்பதைக் கலன் எனலாம். அதுபோலவே முகம் என்பதை முகன் எனலாம்.

சொல்லின் கடைசி எழுத்தாக இருக்கவேண்டியதற்கு மாற்றாக வேறு எழுத்து இடம்பெற்றால் அது கடைப்போலி எனப்படும். முகத்திற்குக் கடைப்போலியான முகன் என்ற சொல்லோடு நூல் சேர்ந்தால் என்னவாகும் ? முகன் + நூல் = முகனூல். (தன்+நலம் = தன்னலம் ஆவதுபோல).

முதலில் ‘வரை’ என்ற சொல்லைப் பற்றிப் பார்ப்போம். வரை என்பதற்கு மலை, வரம்பு, எல்லை ஆகியன நாம் நன்கறிந்த பொருள்கள். 

அவைமட்டுமல்ல. விரல் அளவு, கோடு, எழுத்து ஆகிய பொருட்களும் காணப்படுகின்றன. ஓவியம் வரைந்தேன்’ என்பதில் வரை என்ற சொல் கோடிழுப்பதைக் குறிக்கிறது. கவிதை வரைந்தேன் என்பதில் வரை என்ற சொல் எழுதியதைக் குறிக்கிறது. அடி உதை என்பன வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் ஆவதுபோல் எ சொல் வினையும் ஆகும், பெயரும் ஆகும். விரல் அளவிடத்தால் தீண்டப்படும் கோடு, எழுத்து என்ற விரிவில் ‘வரை’ என்ற சொல் மிகப்பொருத்தமே.

அடுத்து பட்டிகையைப் பார்ப்போம். பட்டிகை என்பதற்கு ‘மார்புக்கச்சை, மேகலை, தெப்பம், தோணி, சீந்திக்கொடி, சித்திரக் கம்பி, தாழை ஆகிய பொருள்களுடன் ‘ஏடு’ என்ற பொருளும் உண்டு. அரச பத்திரங்கள் பட்டிகைகள் எனப்பட்டுள்ளன. நாம் ஏடு என்ற பொருளைத் தேர்ந்துகொள்ளலாம். ஏடு என்றால் அது காகிதத்தில் மட்டுமே இருக்கவேண்டியதில்லை. பனையேடு, செப்பேடுகள் உண்டு. எடுபடும் என்பதால் அது ஏடு.

வரைப்பட்டிகை - கோடுகள் எழுத்துகள் எல்லாம் விரல் அளவுக்குள் தோன்றுகின்ற ஏடு’ என்ற பொருள் வருகிறது.
ஆக, டேப்லெட் (Tablet) என்பதற்கு ‘வரைப்பட்டிகை’ என்ற தமிழாக்கமும் 
உண்டு.
**********************************************************************************
என்+தன் = என்றன் 

உன்+தன் = உன்றன்

பலரும் ‘எந்தன், உந்தன்’ என்றே எழுதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் திரைப்பாட்டு எழுதியவர்கள் இசையில் உட்கார வேண்டும் என்று கருதி ‘எந்தன், உந்தன்’ என்றெழுதிவிட்டார்கள். பேச்சு வழக்கில்கூட கொச்சையாக ‘எந்தன் உந்தன்’ என்பதில்லை நாம். வியப்பாக இருக்கிறதா ? பேச்சு வழக்கில் மக்கள் என்றன் உன்றனைப் பயன்படுத்துகிறார்களா ? ஆம். பயன்படுத்துகிறார்கள். கோவைத் தமிழை நினைவுகூட்டிப் பாருங்கள்.

‘என்ற பேச்சக் கேட்பியா மாட்டயா ?’

‘உன்ற அழும்புக்கு அளவேயில்ல போ’

‘என்ற பொழப்பு இப்படியாகிப் போச்சே...’ 

‘உன்ற காட்டுல நல்ல விளைச்சல்தான்...’

இதில் உள்ள என்ற உன்ற - என்றன் உன்றன் தான் ! மக்கள்கூட என்றன் உன்றன் என்னும்போது, எழுதுகிறவர்கள் அறியாமல் தவறாக எழுதுகிறார்கள்.

பேச்சுத் தமிழில் இவ்வாறு ஏராளமான அருஞ்சொற்களும் தூய வழக்குச் சொற்களும் நாமறியாதபடி கலந்திருக்கின்றன.

-மகேசுவரி பெரியசாமி