குற்றியலுகரம் பற்றிய ஒரு மீள் பார்வை.

குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவை விடக் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

அதற்குச் சில வரையறைகள் உண்டு.

வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.


இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.

தனிக்குறில் எழுத்தை அடுத்து உகர உயிர்மெய் வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, மது, வடு, அறு முதலியவை.
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

மென்தொடர்க் குற்றியலுகரம்

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பவை ஆகும்.

• நெடில் தொடர்க் குற்றியலுகரம்

தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாகு
மூசு
பாடு
காது
ஆறு

• ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு ,து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ,டு :

அஃது (அது என்பது பொருள்)
கஃசு (பழங்காலத்து நாணயம் ஒன்று)

• உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும்.

எ.டு :

வரகு
பலாசு
தெரியாது
தவிசு
முரடு
வயது
கிணறு

• வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாக்கு
கச்சு
பட்டு
பத்து
மூப்பு
காற்று

• மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

சங்கு
பஞ்சு
நண்டு
பந்து
பாம்பு
கன்று

• இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :
மூழ்கு
செய்து
மார்பு
பல்கு
குற்றியலுகரம் என்பது தமிழின் தனிச்சிறப்பாகும். மற்ற மொழிகளில் இல்லாத ஒன்றும் ஆகும்.