எழுத்திலக்கணம் முதற்பாதி

'எளிய இலக்கணம் கற்போம்' என்ற நான்காம் தமிழ் கற்போம் குழுவின் உரையாடற் றொகுதி


இயல் தமிழ் இலக்கணம்:

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து முறைப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----
அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.

_____________

எழுத்தியல் (எழுத்தின் இலக்கணம்)

எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----
அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்

உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----
அகரத்தை முதலாகக் கொண்டு எழுத்துகளை வரிசைப்படுத்தி எழுதுவது என்ற ஒழுங்கு ஒரு இயன்மொழிக்கு (இயற்கையான மொழிக்கு) வருவதற்கு அந்த மொழி பத்தாயிரம் ஆண்டுகளாவது வழக்கத்தில் இருந்திருக்க வேணடும் எனபார் அறிஞர் திரு.மு.தனராசு (தேவாரம், தேனி).


உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), என இரண்டு வகைப்படும்.

############

குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.

############

நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.

############

மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.

இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

############

மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.

############

வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். 
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும். 

############

மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். 
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.

############

இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். 
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.

############

அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம். 
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன். 

*******************************************************************************************
வினாவெழுத்து:

எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம். 

எடுத்துக்காட்டு:

எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே

யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்...

இன வெழுத்து:

அகரத்துக்கு ஆகாரமும்,

இகரத்துக்கு ஈகாரமும்,

ஒகரத்துக்கு ஓகாரமும்,

உகரத்துக்கு ஊகாரமும்,

எகரத்துக்கு ஏகாரமும்,

ஐகாரத்துக்கு இகரமும்,

ஒகரத்துக்கு ஓகாரமும்,

ஒளகாரத்துக்கு உகரமும்,

ககரத்துக்கு ஙகரமும்,

சகரத்துக்கு ஞகரமும்,

டகரத்துக்கு ணகரமும்,

தகரத்துக்கு நகரமும்,

பகரத்துக்கு மகரமும்,

றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம்.

இடையெழுத்தாறும் ஓரினமாகும்.

*************

இன வெழுத்து என்றால் என்ன:

ககரத்துக்கு ஙகரமும், (அங்கு, பொங்கு...)

சகரத்துக்கு ஞகரமும், ( மஞ்சள், பிஞ்சு)

டகரத்துக்கு ணகரமும், (கண்ட, உண்ட..)

தகரத்துக்கு நகரமும், (அந்த இந்த...)

பகரத்துக்கு மகரமும், (வம்பன், அம்பு...)

றகரத்துக்கு னகரமும், (மன்றம், கொன்று...)

இவற்றை அக்கா தங்கை என்று நினைத்துக் கொள்க...
ன் வருமா, ண் வருமா, ந் வருமா என்ற குழப்பங்கள் வரும்போது அக்கா தங்கை என்ற நினைவு பயன்படும்.

அக்காள் இருக்கும்போது தங்கையின் குரல் ஓங்குவது போல ஙகரத்துக்கு அடுத்த ககரம் ஓங்கி ஒலிக்கும்... மற்றை இனவெழுத்துகளும் அப்படியே...

அங்கு
பந்து
செம்பு
மஞ்சு
கண்டு

ஐயப்பாடு :

உயிர் குறிலுக்கு உயிர் நெடில் இனமாகும் என்றால் ஏன் இ என்ற எழுத்துக்கு ஈ வரவில்லை.அதேபோல் உ விற்கு ஊ வரவில்லை. தயவுசெய்து விளக்கவும்.நன்றி.

விடை  :

இகரத்துக்கு ஈகாரம் இனமே ஐயா... 

அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஒ ஓ

இவை இனங்களே...

தவிர
ஐ இ
ஔ உ

என்பனவும் ஆம்...

***************************************************************************************

காலையில் மேலே குறிப்பிட்ட படி, உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.

உயிர்மெய் என்பது உயிர் ஏறிய மெய் என்க... 

க் + அ = க. 
அ + க் = அக்.

உயிர் மெய்யெழுத்துக்களாவன. பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம். 

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; 

உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; 

ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, 

உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, 

உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, 

ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.


ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.

எ-டு. எஃகு, கஃசு, அஃது, பஃறி


தமிழ் எழுத்துகளை மொத்தம் முறையாக எழுதுவது நெடுங்கணக்கு என்பது மரபு...

***********************************************************************************
எழுத்திலக்கணம் தொடர்கிறது.

**
குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, 

**
நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. 

**
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்கும் தனித்தனி மாத்திரை அரை. 

**
உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை ஒன்று; 

**
உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு. 

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், அராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும். 

**
குடம் என்பதில் முதல் எழுத்தாகவுள்ள 'கு' என்னும் குற்றெழுத்து ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
ஆனால், கொக்கு என்பதில் கடையெழுத்தாகிய கு என்னும் வல்லினக் குற்றெழுத்து, அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது என்பதைப் 
பாருங்கள்.

இவ்வாறு சொல்லின் இறுதியில் வந்து, குறைந்து ஒலிக்கும் வல்லின உகரத்தை குற்றியல் உகரம் அதாவது குற்றியலுகரம் என்று அழைக்கப்படும்.

**
அதே வேளையில், 'பகு' என்னும் சொல்லின் கடையில் இருக்கும் அதே 'கு' என்னும் வல்லினக் குற்றெழுத்து குறுகி ஒலிக்காமல், அதற்குரிய ஒரு மாத்திரை அளவு கொண்டே ஒலிப்பதைப் பாருங்கள்.
ஆகவே, தனிக்குறில் அல்லாது, மற்றை எழுத்துகளைத் (தனி நெடில், ஆய்தம், உயிர், வல்லொற்று, மெல்லொற்று, இடையொற்று) தொடர்ந்து வரும் வல்லின உகர உயிர்மெய் எல்லாம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும். அவை குற்றியலுகரம் என்றும் சொல்லப்படும்.
எ-டு.
நாகு, ஆடு -
நெடிற்றொடர்க்குற்றியலுகரம்; 

**
எஃகு, கஃசு, - 
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

**
வரகு, பலாசு , - 
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

**
கொக்கு, கச்சு - 
வன்றொடர்க் குற்றியலுகரம்

**
சங்கு, வண்டு - 
மென்றொடர்க் குற்றியலுகரம்

**
அல்கு, எய்து - 
இடைத்தொடர்க்குற்றியலுகரம்.

** தனிக்குற்றெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் மற்றும் இடையின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் .

எ-டு. நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு. ஒலித்துப் பார்த்தால் வேறுபாட்டை எளிதில் உணரலாம்.

******************************************************************
சிறப்பினாலும் இனத்தினாலும் பொருந்தி அகர முதல் வழங்குவது எழுத்துகளின் முறையாகும்.

சிறப்பினால் தனித்து இயங்கக்கூடிய உயிர் எழுத்து முதலிலும் மெய் அதன் பின்னரும் வைக்கப்பட்டது...
வலியவர் பின்னே மெலியவர் நிற்பது போல வல்லெழுத்து மெய்களுக்குப் பின் அதன் இனமான மெல்லெழுத்து வைக்கப்பட்டது... அதே போல குற்றெழுத்துக்குப் பின் அதன் இனமான நெட்டெழுத்துக்கள் நிற்பதும் இனத்தினால் எனக் கொளக...

இதுவே 'சிறப்பினாலும் இனத்தினாலும்' ஆன ஒழுங்கு என்க..

******************************************************************
நூலாவதியாது - நூலாவது + யாது, நூல் ஆவது + யாது
ஆவது என்ற சொல்லில் கடையில் உள்ள வல்லினக் குற்றெழுத்தான குற்றியலுகரம், யாது என்பதன் யகரத்தோடு புணரும்போது, குறுகிய இகரமாக மாறும்.

அவ்வாறு குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

***
குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
உதாரணம்.
நாகு + யாது = நாகியாது
எஃகு + யாது = எ.கியாது
வரகு + யாது = வரகியாது
கொக்கு + யாது = கொக்கியாது
சங்கு + யாது = சங்கியாது
அல்கு + யாது = அல்கியாது

இவை அன்றி, மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.

தான் கொண்ட ஓசையளவை விடக் குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களான குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி இதுவரை கண்டோம்.

*******************************************************************

அளபெடை:

பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவ்வுயிரெழுத்துக்கு உயிரளபெடை ஒற்றெழுத்துக்கு ஒற்றளபெடை என்றும் பெயராம்.
உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும். 
எ-டு. ஆஅடை, ஈஇடு, ஊஉமை, ஏஎடு, ஐஇயம், ஓஒடு, ஒளஉவை, பலாஅ.

சில விடங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னர் அளபெடுக்கும். 

"நத்தை சுமக்க,அதன் வீடது, நீயுந்தன்
மொத்தபகை ஆரியத்தை மூஉதுகில் தூக்குவதேன்..."

இங்கு முதுகு மூஉதுகு என்று ஆனது காண்க...எழுதல் - எழூஉதல், வரும் - வரூஉம், குரி - குரிஉஇ

ஐயப்பாடு :

முதுகு = மூஉதுகு ; 
எழுதல்=எழூஉதல், 
வரும் = வரூஉம், 
குரி = குரிஉஇ

இவை இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டா? இல்லை எனில் இப்படி எழுதுவதின் அவசியம் என்ன?

விடை  :

பொருள் ஒன்றே தம்பி... இவ்வாறு மூன்று எழுதுவதற்கு காரணங்கள் 

1. பாட்டில் ஓசை குறையும்போது அவ்வோசையை கூட்ட.

நத்தை சுமக்கவதன் வீடது நீயுந்தன்
மொத்தபகை யாரியத்தை மூஉதுகில் தூக்குவதேன்.

இது செய்யுளிசை அளபெடை

2. வினையெச்சங்களுக்கு இனிய ஓசை தருவதற்காக/ பெயர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுவதற்காக.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

இது சொல்லிசை அளபெடை

3. ஓசைக்குறைவு இல்லாதபோதும் இனிய ஓசைக்காக எழுதுதல்.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இது இன்னிசை அளபெடை.

மூஉதுகு என்ற அளபெடையை ஒலிக்கும்போது மூ என்ற நெடிலை மூன்று மாத்திரை அளவு ஒலிக்கவேண்டும்... மூ என்பதை அடுத்து வரும் உ எனும் எழுத்தை ஒலிக்கக் கூடாது என்றும் அறிக.

முன்பு கண்ட இனவெழுத்துகள் நினைவுள்ளதா.. அளபெடைக்குக் குறியாக அந்த இனவெழுத்துகளே எழுதப்படும். உரைநடையிலும் அளபெடுத்து எழுதலாம். மறைமலையடிகளின் நூல்களில் காண்க. மேலும் 'ஆஅய் அண்டிரன்' என்று மக்கட்பெயரிலும் அளபெடைகள் இருந்தன... இக்கால் புதுமை நோக்குடையோர் செய்யலாம்.

அளபெடைகள் தமிழர் பேச்சில் இரண்டறக் கலந்தவொன்றாகும்... கீழ்காணும் பேச்சில் அளபெடை இயல்பாக வருவதைக் கண்டுகொள்க...

மனைவி - இந்தக் கார்த்திகைக்கு பட்டுச்சேலை எடுக்கலாம்...

கணவன்- அறுப்புககுப் பிறகு பாத்துக்கலாம்... காசு வரும்... பொங்கலுக்கு வாங்கித்தாரேன்...

மனைவி- ஆமா. அப்படியே காசு வந்துட்டாஅலும்.... வாங்கிக் குடுத்துட்டாஅலும்...

தூஉம் மழை : தூ'உம்' மழை என்றே பல ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் .

அது தவறு... உ என்பதைத் தாங்கள் ஒலித்தீர் என்றால் என்ன ஆகும் என்று சொல்கிறேன்..

உடம்படுமெய்ப்புணர்ச்சி என்பது உயிரும் உயிரும் சேராது என்பதால் வகர யகர உடம்படு மெய் வந்து புணர்த்தும் அன்றோ... (அ + அன் = அவன்; அ அள் அவள்...)

அதனால் தூஉம் என்பது தூவும் என்றாகும்... 

மூஉதுகு மூவுதுகு ஆகும்...

அதனாற்றான் அளபெடைக்கான குறிகளை ஒலித்தல் கூடாது எனப்படுகிறது..

----------------------------------------------------------------------------------------------
அளபெடை பற்றிச் சொல்லும்போது...

அ இ உ 
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் 
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 

(அதாவது, குறிலுக்கு மாத்திரை ஒன்று...)

ஆ ஈ ஊ ஏ ஐ 
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் 
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 

(அதாவது, நெடிலுக்கு மாத்திரை இரண்டு)

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 
நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய 
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 

(அதாவது, இரண்டு மாத்திரைக்கு மேலுங் கூட்டி எழுத வேண்டுமாயின், அவ்வாறு கூட்டுதற்கு அவ்வளபுடைய எழுத்தைக் குறியாக எழுதுவர் என்றார்)

இதனால் நான்கு மாத்திரையாக நீட்டல் வேண்டின் இரண்டு குறிகள் போட்டும் நீட்டிக்கொள்ளலாம் என்க...

எ-டு:
‘கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு'

கூட்டி எழுதல் என்பதை எழூஉதல் என்று செய்துங் காட்டினார் தொல்காப்பியர்.

நான்குக்கு மேல் நீட்டுதல் இயற்றமிழில் இல்லை... இசைத்தமிழில் உண்டு..


*************************************************************************

"கற்ப்போம் " சரியா ?

தவறு. வல்லின மெய்களுக்குப் பின் எந்த மெய்யும் வராது.

பயிற்ச்சி? பயிற்சி///
முயற்ச்சி? முயற்சி///
கற்ப்பி? கற்பி///
மட்க்குடம் ? மட்குடம்///

ய் ர் ழ் மூன்று மெய்க்குப் பின்னர் மட்டுமே மற்றொரு மெய்வரும்

வாய்ப்பு
பார்த்து
வாழ்த்து

***************************************************************************
14/10/2015

தமிழின் ஒரு தனிச்சிறப்பு என்னவெனில், தமிழ்ச் சொற்கள் இன்னின்ன எழுத்துக்களில் தான் தொடங்க வேண்டும், இன்னின்ன எழுத்துக்களில் தான் முடிய வேண்டும், இன்னின்ன எழுத்துக்களின் பின் இன்னின்ன எழுத்துகள் தான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. வேறெம்மொழியிலும் இது போன்ற கட்டுப்பாடு இல்லை.

இதுவே எழுத்துக்களின் முதனிலை ஈறுநிலை இடைநிலை எனப்படும்.

***
முதனிலை:

பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.

எ-டு.
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி. 

மொழி எனிலும் சொல் எனிலும் ஒன்றாம் இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.

எ-டு.
1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டை, கோடை, 
கௌவை.

2. சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, 
சௌரியம்.

3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேள், தையல், தொண்டு, தோடு, தௌவை.

4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.

5. பந்து, பால், பிட்டு, பீடு, புல், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.

6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.

வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு. 
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால். 
----

யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.
எ-டு.. 
யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம். 
----

ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும். 
எ-டு. 
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

இவை தவிர எந்தவெழுத்தும் மொழிக்கு அதாவது சொல்லுக்கு முதலில் வாரா.... அப்படி வரும் சொற்கள் தமிழாகா.
.
இறுதி நிலை:

எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.


எ-டு. 
விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

அ என்னும் எழுத்தை, அகரம் என்று சொல்வது மரபு... இதில் கரம் என்பது எழுத்தின் சாரியை எனப்படும்...

எழுத்துக்களின் சாரியை:
உயிர்நெட்டெழுத்துக்கள் காரம் எனும் சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காரம் எனும் சாரியை யேயன்றிக் கான் எனும் சாரியையும் பெறும்.
எ-டு:
ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், 
ஔகான்..

உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க் குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும்.
எ-டு:
அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான்.

மெய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியையும், அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியையும் பெறும்.
எ-டு:. 
க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான். 

உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெற்று இயங்கா...

மெய்கள் சாரியை பெறாது இயங்காவாம்...


மொழியின் முதலில் வராது என்று சொல்லப்பட்ட எழுத்துக்கள், அவ்வெழுத்துக்களைச் சொல்ல வேண்டி வரும்போது மட்டும், மொழியின் முதலில் வரும் என்க... 
எ-டு. வுகரம், லகரம்.

எழுத்தியல் முதற்பாதி முற்றிற்று.