எழுத்திலக்கணம் மூன்றாம் பாகம்

#1.4.1
எழுத்திலக்கணம்:
பிறப்பு இயல்:
நம் வயிற்றினுள் எழுந்திடும் காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு எனும் நான்கு இடங்களிலும் பொருந்தி நின்று, உதடு, நாக்கு, பல், மேல்வாய் (அண்ணம்) ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வேறு வேறு ஒலிகளாகப் பிறப்பது பிறப்பு இயலாகும்.
முதல் எழுத்துக்களுக்கு இடப்பிறப்பு
முதல் எழுத்துகள் பிறக்கும் இடம்
உயிர் - கழுத்து
வல்லின மெய் - மார்பு
மெல்லின மெய் - மூக்கு
இடையின மெய் - கழுத்து
அடிவயிற்றால் வலிந்து எழுப்பும் ஒலிகள் தமிழில இல்லை என்க.
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
அகரமும் ஆகாரமும் அங்காத்தல் எனப்படும் வாயைத் திறத்தலால் பிறக்கும்.
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
இ , ஈ , எ , ஏ , ஐ ஐந்தும் அங்காப்புடனே , மேல்வாய்ப் பல்லை நாக்கு அடியினது ஓரமானது பொருந்தப் பிறக்கும் .
அண்பல் - நா விளிம்பால் அணுகப்படும் பல் .
உ , ஊ , ஒ , ஓ , ஒள ஐந்தும் உதட்டை குவிக்கப் பிறக்கும் .
#1.4.2
கவ்வும் ஙவ்வும் நாக்கின் அடி மேல்வாய் அடியை பொருந்தப் பிறக்கும்
சவ்வும் ஞவ்வும் நாக்கின் நடு மேல்வாய் நடுவைப் பொருந்தப் பிறக்கும்
டவ்வும் ணவ்வும் நாக்கின் கடை (கடைசி) மேல்வாய்க் கடையைப் பொருந்தப் பிறக்கும் .
ககரமும் ஙகரமும் ஒரே இடத்தில் பிறந்ததால் இன எழுத்துகளாக ஆயின...
சகர ஞகரமும், டகர ணகரமும் மற்ற இன எழுத்துகளும் இவ்வாறே என்க.
#1.4.3.
இந்தப் பிறப்பியலை மறந்ததால்தான் சகரத்தை நாம் கொன்றே விட்டோம் என்க.
சகரம் வல்லினம். எனவே இச்சகரத்தை cha என்றே ஒலித்தல் வேண்டும்... sa என்று ஒலித்தல் வலலினமாகாது... மேலும் sa என்று சகரத்தை ஒலிப்பதானால் ஸ என்பதை தமிழில் புகுத்த வேண்டி வந்திருக்காதே... மெய்யெழுத்துகளைச் சொல்லும்போதும் கூட க, ங , ச, ஞ என்று cha என்றே சொல்லுகிறோம்...
ஆனால்
சொல்
பேசு
சிற்பம்
காசு
என்பனவற்றை cha என்று ஒலிக்காமல் sa என்று ஒலித்தல் இன்று பெருவழக்காகி விட்டது...
மலையாளிகள் சகரத்தைச் சரியாக cha என்றே ஒலிக்கும்போது நமக்கு என்ன கேடா... குறையா.... சிந்திப்போம்.......... chindippoam...
மலையாளிகள் சகரத்தை எல்லா இடங்களிலும் எல்லா சொற்களிலும் மிகச்சரியாகப் பயன்படுத்துகின்றனர்....
சோற்றை soaru என்று அவர்கள் சொல்வதே யில்லை என்பதை நாம் கூர்ந்து கண்டுகொள்ள வேண்டும்...
இவ்வாறான குழப்பங்கள் வரும் என்பதற்கே வல்லின மெல்லின இடையின வேறுபாட்டையும் பிறப்பியல் என்ற இலக்கணத்தையும் மிகத் தெளிவாக நம் இலக்கணம் வைத்துள்ளது...
சகரத்தைக் கொன்ற தமிழர்கள் என்ற அவப்பெயர் நமக்கு வேண்டாமே....
#1.4.4.
அதே போல,
ககரத்தைச் சிலர் வல்லினமாக ஒலிக்காது மெல்லினமாக ஒலிப்பர்... அது பெருங்குற்றமும் தமிழ்க் கொலையுமே என்க...
முகம் - முஹம்... இது போல...
#1.4.5
றகரமும் ரகரமும் வெவ்வேறு ஒலிகளாம்... வேறுபடுத்தி ஒலிக்கும் முறை...
நாவினது நுனி
மேனோக்கிச் சென்று மேல்வாயைப் பொருந்திட, றகார னகாரமும் பிறக்கும்
அதே வேளை...
நாவினது நுனி
மேனோக்கிச் சென்று மேல்வாயைத் தடவ, ரகார ழகாரம் இரண்டும் பிறக்கும்.
இரை/இன்றை இவற்றை ஒலித்துக் கண்டு கொள்க...
#1.4.6
இதே போலவே...
மெல்லினங்களான நகர னகர ணகரங்கள் வெவ்வேறு ஒலிகளே ........
நம்மில் பலருக்கு னகர ணகரங்களை வேறுபடுத்தி ஒலிப்பது எளிதில் முடியும்...
ஆனால் நகர னகரங்களை வேறுபடுத்தி ஒலித்தலை நாம் தொலைத்தேவிட்டோம்....
இசையறிவு மிக்கோரான நம் முன்னோர்கள் இதை வேறுபடுத்தி ஒலித்ததால் மட்டுமே வெவ்வேறு எழுத்துகளாகக் குறித்தனர் என்பதை உணர்வோம்....
நகரத்துக்கு தகரம் இனமாவதும் னகரத்துக்கு றகரம் இனமாவதும் ஒலி வேறுபாட்டாலேதான் என்க...
அதே போல மொழியின் முதலில் நகரம் வருதலும் னகரம் வராதலும் ஒலி வேறுபாட்டாலேயே அன்றி வெறும் வழக்கம் அல்ல.....
#1.4.7
நகர னகரங்களின் ஒலிகளைக் கண்டு கொள்வதற்கு ஒரு முறை...
அந்த என்ற சொல்லைச் சொல்லிப்பாருங்கள்... அப்படிச் சொல்லும்போது அந் என்ற இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்... இதுவே நகரம்....
என்ற என்னுஞ் சொல்லைச் சொல்லிப்பாருங்கள்... அப்படிச் சொல்லும்போது என் என்ற இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்... இதுவே னகரம்....
நகர நகரங்கள் வெவ்வேறு ஒலிகள் தான். நாம் அவற்றை வேறுபடுத்தி ஒலித்தலை தொலைத்து விட்டோம்.
நகரத்துக்கு தகரமும்
னகரத்துக்கு றகரம் இனமாவதும் ஒலி வேறுபாட்டாலேதான்.
#
#
'அந்த' என்ற சொல்லைச் சொல்லிப்பாருங்கள்... அப்படிச் சொல்லும்போது அந் என்ற இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்... இதுவே நகரம்....
'என்ற' என்னுஞ் சொல்லைச் சொல்லிப்பாருங்கள்... அப்படிச் சொல்லும்போது என் என்ற இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்... இதுவே னகரம்....

*************************

எழுத்தியலில் முதனிலை, ஈறுநிலை ஏற்கனவே கற்றோம்.
இன்று கற்கப்போவது 

இடைநிலை

கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும் 

அதாவது, க், ச், த், ப் எனும் மெய் எழுத்துகளின் பின் அம்மெய்கள் கொண்ட உயிர்மெய்கள் மட்டுமே வரும். பிற உயிர்மெய்கள் வாரா.

எ-டு: அக்கை, உச்சி, மெத்தை, உப்பு...

இனி, இந்த விதியைக் கொண்டு தமிழில் கலக்கப்பட்டுள்ள வடமொழிச் சொற்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். 

முக்தி, இத்யாதி, சப்தம், ச்யாம போன்றன இவ்விதியை மீறி வருதல் காண்க..

******************

ரழ என்ற இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும்.

அதே போல, ரகர ழகர மெய்கள் ரகர ழகர உயிர்மெய்களோடு சேரா. பிற உயிர்மெய்களோடு மட்டுமே சேரும்...

எ-டு: கூர்மரம், வாழ்நிலம்..

ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும்.

இந்த ஆறனைத் தவிர மற்ற மெய் எழுத்துகள் அதே மெய் கொண்ட உயிர்மெய்யோடு பிற உயிர்மெய்யோடும் வரும்...

எ-டு:

என்னை/என்று; அம்மா/அம்பு; என்பன போன்று.

தனிக்குறிலை அடுத்து ரகர மெய்யும் ழகர மெய்யும் நிற்காது.

நிற்காது என்று சொல்லப்பட்ட விதியை மீறி நிற்பவை தமிழல்ல என்க.

எ-டு : அர்ச்சனை, கர்ப்பம் போன்ற பல வடமொழிகளை களைய இவ்விதி உதவும்...

*********************************************************

இனி தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் வைக்கப்பட்ட ஒழுங்கு முறை பற்றி கற்போம்.

நெடுங்கணக்கு வைப்பு முறை

உயிர்:

அ ஆ இ ஈ உ ஊ 
எ ஏ 

ஒ ஓ


மெய்:

க் ங் 
ச் ஞ்
ட் ண் 
த் ந்
ப் ம் 
ய் ர் ல் வ் ழ் ள் 
ற் ன்


உயிர்மெய்

க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங .....
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ ........
...............

ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்தம்:



பிற சார்பு எழுத்துகள்:
இந்த வைப்புமுறையின் சிறப்பு என்ன என்பதே கேள்வி....
நெடுங்கணக்கு வைப்புமுறை:

சிறப்பினாலும் இனத்தினாலும் படியான முறையின் வைப்பு என்ற ஒழுங்கின்படி வைக்கப்பட்டதே தமிழ் நெடுங்கணக்கு ஆகும்.
முதல் எழுத்துகளான உயிரும் மெய்யும் ஆன முப்பதும் முதலில் வைக்கப்பட்டன.
அவற்றுள், தனித்து இயங்கும் சிறப்பு கொண்டதனால் முதலில் உயிர் எழுத்துகள் வைக்கப்பட்டன. அச்சிறப்பில்லா மெய்கள் அவற்றின் கீழே வைக்கப்பட்டன...

அவ்வுயிர்களுள், அங்காத்தல் அதாவது வாயைத் திறத்தலால் உருவாகும் சிறப்பினதான அகரம் எல்லாவற்றுக்கும் முதன்மையாக வைக்கப்பட்டன. அகர முதல எழுத்தெல்லாம் என்று வள்ளுவர் இதையே வழிமொழிவார்.

அடிப்படை உயிர்களான அ இ உ என்பன முதலில் வைக்கப்பட்டதன் காரணம் அவை பிறக்கும் முறைமையினால் என்க... (பிறக்கும் முறைமை என்றால் அவ்வொலிகளை நாம் எந்தெந்த உறுப்புகளின் முயற்சி கொண்டு பலுக்குகிறோம் என்பதே என்க)

அகரம் என்பது அங்காந்து கூறும் முயற்சியாலும், 

இகரம் என்பது அவ்வங்காப்போடு அண்பல்லில் அடிநாக்கு விளிம்பு உறுவதாலான முயற்சியாலும், 

உகரம் என்பது அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியாலும் பிறத்தலான்
அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.

ஆகார ஈகார ஊகாரங்கள்
அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன.
முறை:

இனத்தினால் குறில்களுக்குப் பின் அவற்றின் இனமான நெடில்கள் வைக்கப்பட்டன...

அகரத்திற்கு ஆகாரம் இனம்
எகரத்திற்கு ஏகாரம் இனம்
ஒகரத்திற்கு ஓகாரம் இனம்...

அதன்படியே வைக்கப்பட்டன...
ஒரே இடத்தில் பிறந்தமையால் ஒரே இனமாகக் கொள்ளப்பட்டன...
க -ங
ச - ஞ
ட - ண
த - ந
ப - ம
ற - ன

என்பவை இன எழுத்துகள் என்று கண்டோம். இவற்றைச் சொல்லிப் பார்த்து இவை இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கும் உண்மையைக் கண்டு கொள்க..

மெய் எழுத்துகளின் வைப்புமுறை...

வலியவர் மெலியவருக்குப் பின்னே செல்வது போல வலிமைச் சிறப்பினால் க ச ட த ப ற எனும் வல்லின மெய்கள் முன்னாலும், அவற்றின் இன எழுத்துகளான ங ஞ ண ந ம ன ஆகிய மெல்லின எழுத்துகள் அவற்றின் பின்னாலும் முறையே வைக்கப்பட்டன...
இடையினம் ஆறும் ஒரே இனமாதலால் அவை ஆறும் வரிசையாக ய ர ல வ ழ ள என்று வைக்கப்பட்டன...
ஆனாலும் அவை தனியே தொங்க விடப்படக் கூடாது என்பதால் வல்லின மெல்லின இணையான ற ன என்பது அவற்றின் பின்னர் வைத்தை மெய் எழுத்துகளின் வைப்பு முறை அமைக்கப்பட்டது...
ஆனாலும் அவை தனியே தொங்க விடப்படக் கூடாது என்பதால் வல்லின மெல்லின இணையான ற ன என்பதை அவற்றின் பின்னர் வைத்து, மெய் எழுத்துகளின் வைப்பு முறை அமைக்கப்பட்டது...
இதுவே சிறப்பினாலும் இனத்தினாலும்
வைக்கப்பட்ட முறைமை ஆகும். நன்றி.

*****************

தமிழில் ஏன் சில எழுத்துகள் சொல்லின் முதல் எழுத்தாகக் கொள்ளப்படுவதில்லை...

:point_right:எந்த மெய்யும் முதலில் வருவதில்லை

எ-டு : ப்ரீ, ட்ரீ, க்ரீம், த்யானம், ப்ரதி...

:point_right: டகர வரிசை, ரகர வரிசை, லகர வரிசைகளில் உள்ள உயிர்மெய்கள் ஏன் சொல்லின் முதலில் வரக்கூடாது என்கிறோம்

எ-டு : டெலிகிராம், ராம், லட்சுமி...

:point_right: ங, ட, ண, ர,ல, ழ, ள, ற, ன என்ற வரிசை உயிர்மெய்களைக் கொண்டு, எந்த தமிழ்ச்சொல்லும் தொடங்காது என்பது ஏன்.

முன்தோன்றிய மூத்த மொழியாதலால் மழலை நாக்கு போன்ற தமிழரின் நாவில் கடினமான சொற்களைக் கொண்டு சொற்கள் தொடங்காதென்பதால் இவை விலக்கப்பட்டன..
மற்றும் இயல்பான ஒலிகள் இருக்கும் போது ஏன் வலிந்து வலிந்து இவை போன்ற கடின ஒலிகளால் தொடங்க வேண்டும் என்பதாலும் என்க...
சொல்ல எளிமையாக உள்ள ஒலிகளே முதலில் வரும் என்க...

:wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash:

fry என்ற சொல்லைச் சொல்ல எவ்வளவு கடினமாக உள்ளது என்பதைப் பலுக்கிப் பார்த்துக் கண்டு கொள்க...

:wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash:

லட்சுமி என்ற சொல்லைச் சொல்லிப் பாருங்கள். ல என்ற ஒலியில் தொடங்குவதற்கு நாக்கின் நுனியை அண்ணத்து நுனியில் பற்களுக்குப் பின்னால் வைத்து உறச் செய்வதான (தடவச்செய்வதான) முன்னேற்பாடுகளைச் செய்ய லட்சுமி என்ற சொல்லைப் பலுக்க முடியும்... 

இதுவே இலக்கு என்று பலுக்கிப் பாருங்கள். வாய் திறந்து சொல்லிய இகர உயிரோடு எளிதாக லகரத்தைச் சொல்லிவிட முடியும். இவ்வாறு, முதல் எழுத்து, எளிதாகச் சொல்ல முடிகின்ற எழுத்தாக அதாவது ஒலியாக இருக்க வேண்டும் என்பதாலேயே இவை விலக்கப்பட்டன ....

:wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash:

ரகரமும் மற்றவற்றுக்கும் இவ்வாறே... சொல்லின் முதலில் வந்தால் பலுக்குவது (உச்சரிப்பது) கடினம் என்பதால் இடையில் மட்டும் வரும் என்ற கட்டுப்பாடு இடப்பட்டது...
நாம் நிலத்தில் வளர்ந்த எல்லா இலைகளையும் உண்பது இல்லை, எல்லா பூக்களையும் சூடுவது இல்லை...

:wavy_dash::wavy_dash::wavy_dash::wavy_dash:

வாழை இலை போட்டு, அதில் கீரைக் குழம்பைச் சோற்றில் இட்டு, பனை ஓலையால் (இதுவும் இலையே) விசிறியவாறு உண்கிறோம் இல்லையா... அது போல எல்லா ஒலிகளையும் எழுத்துகளாக ஆக்காமலும், எழுத்தென ஆக்கப்பட்ட எல்லா எழுத்துகளையும் முதல் எழுத்தாகக் கொள்ளாமல் நடைபெறுவது நம் மொழி என்க...

சகர மெய்க்குப் பின் னகர உயிர்மெய் வாராதென்க... பிறமொழிச் சொற்களைத் தமிழில் புகுத்திச் சொல்லைக் கெடுப்பதொடு, எழுத்தையும் கெடுக்கும் கேடான செயல் இதென்க..

ர்ச்னை கர்ச்னை என்று எழுதினால் எபபடியோ, அப்படியே பிரச்னையும் என்று காண்க...

பிரச்சனை என்று எழுதலாம்... அல்லது இந்த பிரச்சனையே வேண்டாம் என்று சிக்கல் என்றெழுதிச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளலாம்....

:part_alternation_mark::part_alternation_mark::part_alternation_mark:

'ச்ன', 'த்ர' , 'ப்ர' , 'த்ன' , 'ச்ர' போன்ற வலிந்து சொல்லப்படும் கடும் ஒலிகள் எதுவும் தமிழிலில்லை... தமிழின் மென்மை எனும் பண்பின் விளக்கம் காண்க...

இவற்றை ஒலித்துப் பாருங்கள்... ஒலிப்பின் கடுமை புரியும்..

வண்ணம் > வர்ணம்
அகரம் > அக்ஷரம்
மெது > ம்ருது
படி > ப்ரதி
சுதி > ஸ்ருதி......

:part_alternation_mark::part_alternation_mark:

இதுபோல் இன்னும் எவ்வளவு தமிழ் வார்த்தைகள் மருவப்பட்டுள்ளதோ தெரியவில்லை..

"எச்சமையமோ எவரெவரது சூழ்ச்சியாலோ மருவப்பட்ட என் தமிழின் சிறப்பினைமீட்பதை எண்ணி இச்சமையம் என் உள்ளத்தில் அச்சம் மையம் கொண்டுள்ளது.."

அச்சமையம்/அந்த நேரம்
அச்சம் மையம் = நிலைத்த பயம்

ஒரு சொல்லில் பலபொருள் கூறும் தன்மையும் சிறப்பும் எம் தமிழுக்கே சொந்தம்.

****************
22/10/2015
தான் கொண்ட ஓசையளவை விடக் குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களான குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி இதுவரை கண்டோம்.
இனி,

பாட்டிலோ உரையிலோ, ஓசை குறைந்த இடங்களில், சில உயிரெழுத்துகளும் ஒற்று எழுத்துகளும் (மெய் எழுத்துகள்), தம் மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அவ்வுயிரெழுத்துக்கு உயிரளபெடை ஒற்றெழுத்துக்கு ஒற்றளபெடை என்றும் பெயராகும்.


ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

இக்குறளில் உள்ள ஓ எனும் நெடில் தனக்குரிய அளவான இரண்டு மாத்திரை அளவுக்கு ஒலிக்காது நீண்டு மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதாக உள்ளது காண்க. இதுவே உயிரளெபடை ஆகும்.

இங்கு ஓஒ என்பதில் முதலில் உள்ள ஓகார நெடிலை மட்டுமே நீட்டி ஒலித்தல் வேண்டும் என்றும் அதன் பின் உள்ள ஒகரம் என்பது அளபெடைக்கான குறியீடு மட்டுமே என்றும், அந்த ஒகரம் எனும் எழுத்தை ஒலித்தல் கூடாது என்றும் மனத்தில் இருத்துக. 

"எனக்கு இக்காதல் நோயைத் தந்த என்
கண்களும், இந்நோயில் அகப்பட்டுக் கொண்டு கலங்குவதைக் காண்பது ஒரு சுவையே" என்று ஒரு பெண் சொல்வதாக உள்ளது இக்குறளின் பொருள்.

தாஅம் என்பதும் உயிரளபெடையே...
சில வேளை குறில் நெடிலாகிப் பின்னர் அளபெடுக்கும்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
#182

இக்குறளில் அறளழீஇ புறனழீஇ என்பவை, அறனழி புறனழி என்ற இயல்பான சொற்களில் உள்ள ழி எனும் உயிர்மெய்க்குள் உள்ள இகரம் தன் அளவான ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது நெடிலாகியபின் நீண்டு அளபெடுத்து மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதைக் காண்க.
ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.
எ-டு. 
சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்த.
மாத்திரை அளவுகள்:

குறில்/குற்றெழுத்து - 1 
எ-டு : அ, தி, செ, மு...

நெடில்/ நெட்டெழுத்து - 2
எ-டு : ஈ, பூ, சா...

ஒற்று / மெய் - 1/2 (அரை)
எ-டு : க்,ங்,ச்....

குற்றியலுகரம் - 1/2 (அரை)
எ-டு : ஒன்று, இரண்டு ... இவற்றில் உள்ள ஈற்று உகரம்.

குற்றியலிகரம் - 1/2 (அரை)
எ-டு : ஒன்றியாது .... என்பதில் உள்ள இகரம்.

உயிரளபெடை - 3
எ-டு : ஆஅ, ஈஇ, கோஒ...

ஒற்றளபெடை - 1
எ-டு : நின்ன்று...

குற்றியலுகரம்
குற்றியலிகரம் என்று தனித்தனியாக இருக்கின்றது.

உகரம் குறுகி ஒலித்தால் குற்றியலுகரம்

எ-டு: ஒன்று, இரண்டு, மூன்று ... போன்றவற்றுள் உள்ள ஈற்று உகரங்கள்.

இகரம் குறுகி ஒலித்தால் குற்றியலிகரம்

எ-டு: நாகியாது, ஆறியாது, ஒன்றியாது என்பவற்றுள் இடையே உள்ள குறுகி ஒலிக்கும் இகரங்கள்...
ஈற்று என்றால் இறுதியில், கடைசியில் நிற்பவை என்று பொருள்... குற்றியலுகரம் தனக்குப் பின் யா என்பது வரும்போது குற்றியலிகரமாக ஆகும்...

நாகு யாது நாகியாது...
தெளிவான ஒலி வரையறை கொண்ட வரிவடிவங்களே தமிழ் எழுத்துகள் ஆவதால், இவ்வாறு குறுகி ஒலிக்கும் ஒலிகள் தனி எழுத்துகளாகக் கொள்ளப்படுகின்றன..


1.1: பகுதி


பகுஞ்சொல் உறுப்புகள்
ஆறு என்று கண்டோம். அவை 
பகுதி, 
விகுதி, 
இடைநிலை, 
சந்தி, 
சாரியை, 
திரிபு (விகாரம்)



ஆகியன. 



இவற்றுள் முதலாவதாக இருக்கும் ‘பகுதி‘ அமையும் தன்மையை விரிவாகக் காண்போம்.
பகுதி - பொது இயல்பு:



பெயர்ப் பகுஞ்சொற்கள், வினைப் பகுஞ்சொற்கள் என இருவகையாகப் பகுஞ்சொற்கள் அமைவதை முன்னரே கண்டோம். எனவே இவ்விரு சொற்களிலும் முதலில் நிற்கும் ‘பகாச்சொற்களே’ பகுதிகளாகும். 
இதனைப் பின்வரும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.



தத்தம் பகாப்பதங்களே பகுதி யாகும் (134)
என்பது நூற்பா.



சொல், கிளவி, மொழி என்பன ஒருபொருட் சொற்கள். பதம் என்பது வடமொழி என்க.
பொன்னன் என்ற பெயர்ப்பகுஞ்சொல்லில் உள்ள பொன் என்பது பெயர்ப்பகாச்சொல் எனும் பகுதி.



நடந்தான் என்ற வினைப்பகுஞ்சொல்லில், நட என்பது பகுதி. இது ஒரு வினைப்பகாச் சொல்...
இதற்கு மேல பகுத்தால் பொருள் தராதன பகுதிகள் என்க.


1.2. பெயர்ப் பகுஞ்சொற்களின் பகுதி
பெயர்ப்பகுஞ்சொற்களின் பகுதிகள் பெயர், வினை, இடை, உரிச் சொற்களாக அமைகின்றன.

(1) 
பொன்னன் - இதன் பகுதி பொன். இது பெயர்ப் பகுதிக்கு எடுத்துக்காட்டாகும்.

(2) 
அறிஞன் - இதில் அறி என்னும் பகுதி வினைப்பகுதிக்கு எடுத்துக் காட்டாகும்.

(3) 
பிறன் என்னும் சொல்லில் பகுதி பிற என்பதாகும். இதில் ‘பிற‘ என்பது இடைச்சொல்லாகும். இது இடைச் சொல் பகுதி.

(4) 
கடியவை என்னும் பெயர்ப்பகுஞ்சொல்லின் பகுதி கடி என்பதாகும். இதன் பகுதியான ‘கடி‘ என்பது உரிச்சொல். எனவே இது உரிச்சொல் பகுதி.

1.3 வினைப் பகுஞ்சொற் பகுதி
வினைப் பகுஞ்சொற்களில் பகுதியாகப் பெரும்பாலும் வினைச் சொற்களே வருகின்றன. சிறுபான்மை இடைச் சொற்களும் உரிச் சொற்களும் வருதல் உண்டு.

(1) 
நின்றான், இதில் நில் என்பதும், நடந்தான் என்பதில் நட என்பதும் வினைப் பகுதிகள். இங்கு வினைச்சொற்களே பகுதிகள் ஆயின.

1.4.
பெயர்ச்சொற்கள் ஆறு வகைப்படும் என்று கண்டோம்.

அவை 

பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்.

இதனுள் பண்புப்பெயர்ப் பகுதிகளான

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை
வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை
திண்மை, உண்மை, நுண்மை போன்றனவும் இவற்றின் எதிர்ப்பண்புகளும் பெயர்ப்பகுஞ் சொற்களாக ஆகும்போது சில சிறப்பு விதிகள் மூலம் உருவாகும் என்க....

அவ்விதிகள் வருமாறு...

(1) ஈறுபோதல்

சிறுவன் - சிறுமை + அன், நல்லன் - நன்மை+அன் இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை‘ விகுதி கெட்டது

(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்

பெரியன் - பெருமை + அன் 
இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை, கருமை என்பதில் இடையில் உள்ள உகரம், இகரமாக ஆகியுள்ளது.
கரியன் - கருமை + அன் 

(3) ஆதிநீடல் (முதல் எழுத்து நீண்டு வருதல்)

பசுமை + இலை = பாசிலை. பசுமை + இலை. பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது. ‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று. ‘மை‘ விகுதிகெட்டது. எனவே பாசிலை என்றாயிற்று.

(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்

பைங்கண் என்பது பசுமை + கண் - பைங்கண். பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது. ‘சு‘ என்பதும் கெட்டுள்ளது.

(5) தன் ஒற்று இரட்டல்

வெற்றிலை = வெறுமை + இலை என்பது வெற்றிலை என்றாகிறது. இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்‘ இரட்டித்துள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது.

(6) முன்நின்ற மெய்திரிதல்

செம்மை + ஆம்பல் - சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை‘ விகுதி கெட்டது. ஆதி செ - சே என நீண்டது. ‘செம்‘ முன்னின்ற ‘ம்‘ ‘த்‘ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.

(7) இனம் மிகல்

பசுமை + தழை என்பது பசுந்தழை என்றாகும். இதில் ஈற்றில் உள்ள ‘மை‘ கெட்டது. ‘தழை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்‘ என்னும் மெய்க்கு இனமான ‘ந்‘ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது (தோன்றியுள்ளது).

1.5

காலம் காட்டும் வினைச்சொற்களுக்குப் (தெரிநிலை வினைகளுக்கு) பகுதியாக ஏவல் வினை பகாச்சொற்கள் வரும்

எ-டு:

நட - நடந்தனன்
வா - வந்த
நில் - நின்றான்
போ - போனது
செய் - செய்கின்ற


இதனை

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே

என்னும் நன்னூல் (137) நூற்பா விளக்குகின்றது. 

இதில் நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று வரும் இருபத்து மூன்றும் ‘செய்‘ என்னும் வாய்பாட்டில் அமைந்த ஏவலுக்குப் பகுதியாகவும் வரும்; பிற தெரிநிலை வினைகளுக்குப் பகுதியாகவும் வரும்.

இவை ஏவலாய் வரும் இடத்து நடப்பாய், வருவாய், தின்பாய் என்பவற்றில் நட, வா, தின் என்ற வினைப்பகுதிகளைப் பெற்று வரும்.

இவை வினைமுற்றுப் பகுஞ்சொற்ளாய் வருமிடத்து இவற்றின் ‘வினைப்பகுதி‘ பின்வருமாறு அமையும்:

நடந்தான் நட
வந்தான் வா
மடிந்தான் மடி
சீத்தான் சீ
விட்டான் விடு
கூவினான் கூ
வெந்தான் வே
நொந்தான் நொ
போனான் போ
வௌவினான் வௌ
உரிஞினான் உரிஞ்
உண்டான் உண்
பொருநினான் பொருந்
திருமினான் திரும்
தின்றான் தின்
தேய்ந்தான் தேய்
பாய்ந்தான் பாய்
சென்றான் செல்
வவ்வினான் வவ்
வாழ்ந்தான் வாழ்
கேட்டான் கேள்
அஃகினான் அஃகு

மேலே காணும் வினை முற்றுகளில்

சீத்தான் என்பது சீவினான் என்றும்,
உரிஞினான் என்பது தேய்த்தான் என்றும்
பொருநினான் என்பது பொருந்தினான் என்றும்,
திருமினான் என்பது திரும்பினான் என்றும்
அஃகினான் என்பது சுருங்கினான் என்றும்
பொருள்படுவன.

இந்த 23 வினைப்பகுதி வாய்பாடுகளுக்கும் பொது வாய்பாடு ‘செய்‘ என்பதாகும் என்க.

1.6 தன்வினை பிறவினைப் பகுதிகள்:

ஒரு செயலைத் தானே செய்வது தன்வினை. பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை. 

தன்வினைப் பகுதிகள் பின்வரும் வழிகளில் பிறவினைப் பகுதிகளாக மாறும்

1. செய் - செய்வி; வரு - வருவி; நட - நடப்பி...

2. தெளி - தெளிவிப்பி, அறி - அறிவிப்பி...

3. போ - போக்கு; பாய் - பாய்ச்சு, நட - நடத்து; துயி - துயிற்று; எழு- எழுப்பு...

4. திருந்து - திருத்து; தோன்று - தோற்று....

5. ஆடு - ஆட்டு; ஓடு - ஓட்டு; உருகு - உருக்கு

1.7

விகுதி:

பகுஞ்சொற்களில் கடைசியில் நிற்கும் உறுப்பு விகுதி ஆகும். இதனை இறுதிநிலை என்றும் கூறுவர்.
1.8

பெயர்ப்பகுஞ்சொல் விகுதிகளை நன்னூல் தொகுத்துக் காட்டுகின்றது. அவை,

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், து, அ, இ
என்பவை. இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

சிறியன், சிறியான் - அன், ஆன்

சிறியள், வானத்தாள் - அள், ஆள்

குழையர், வானத்தார் கொண்டன்மார் - அர், ஆர், மார்

சிறியது, சிறியன, பொன்னி - து, அ, இ

இவற்றோடு, மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ் என்னும் 13 விகுதிகளும் பெயர் விகுதிகளாம்.

வடமான், கோமான், கோக்கள் - மன், மான், கள்

அவை, இவை - வை.

எந்தை, எங்கை, - தை, கை

எம்பி, எம்முன், தோன்றல் - பி, 
முன், அல்

பிறன், பிறள், பிறர், அவ் - ன், ள், ர், வ்
1.9

இவற்றோடு தொழிற்பெயர்ப் பகுஞ்சொற்களின் விகுதிகளாக

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் 19 விகுதிகள் வரும் என்க. இனி இவற்றில் சிலவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

நடத்தல் - தல்; ஆடல் - அல்; வாட்டம் - அம்; கொலை - ஐ; பார்வை - வை; போக்கு - கு; நடப்பு - பு; நடவாமை - மை.
1.10

பண்புப் பெயர் விகுதிகள்:

பண்புப் பெயர்களுக்கு அமைந்த விகுதிகள் பத்து. அவை,

மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

நன்மை - மை; தொல்லை - ஐ
மாட்சி - சி; மாண்பு - பு
மழவு - வு ; நன்கு - கு
நன்றி - றி; நன்று - று
நலம் - அம்; நன்னர் - அர்
இவையே பெயர்ச்சொற்களின் விகுதிகளாம் என்க.

#1.11

வினைச்சொல் விகுதிகள்:

முற்று:

தெரிநிலை வினைமுற்று:

காலங் காட்டும் தெரிநிலை வினைமுற்றுகளின் விகுதியாக

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவும் வரும் என்க...

எடுத்துக்காட்டுகள்:

நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.
---
இவற்றுள் ஏல் எனும் விகுதியை ஆத்திசூடிக்கண்ணும், ஆய் எனும் விகுதியை நடந்தாய் வாழி காவேரி முதலிய சிலம்பின் சிந்தடிகளிலும், மின் எனும் விகுதியை மறைமலை அடிகளார் கட்டுரைகளுள்ளும் கண்டு கொள்க...


#1.12.

காலம் காட்டாது வரும் குறிப்பு வினைமுற்றுகளின் விகுதிகள் பெயர்சொற்களின் விகுதிகள் போன்றனவே என்க.


#1.13

எச்ச வினைச்சொல் விகுதிகள்:

பெயரெச்ச விகுதிகள்:

தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.

செய்த, செய்கின்ற, செய்யும்.


#1.14

குறிப்புப் பெயரெச்ச விகுதி, 'அ' என்ற ஒன்று மட்டுமே...

கரிய, சிறிய, பெரிய...


#1.15

வினையெச்சங்களின் விகுதிகள்:

காலங் காட்டும் தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கீழுள்ள 28ம் பிறவுமாம்.

உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே

எடுத்துக்காட்டுகள்

நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே

இவற்றுள் கடைசி மூன்றும் எதிர்மறைப் பொருள் தருவன...
இவற்றுள் ஐந்தாம் விகுதியாகக் காட்டப்பட்ட ஆ எனும் விகுதியைக் கொண்டு வரும் வினையெச்சங்கள் எதிர்மறைப் பொருள் தருவதாக எண்ணக்கூடாது என்று நினைவில் நிறுத்துக...

எ-டு:

வண்டு பாடா நின்றது 

இங்கு வண்டு பாடியது என்பதே பொருள் என்க.

இன்றைக்கு (பல பிழைகளோடு) வந்த வெண்பாவிலும், மறைமலை அடிகளார் கட்டுரைகளிலும், வேங்கடசாமி நாட்டார் உரைகளிலும் கண்டு கொள்க....