திருக்குறள் போற்றி : தொகுப்பாளர். இரா. இளங்குமரனார்

கந்த சஷ்டி அல்லது சுப்பிரபாதம் காலை எழுந்தவுடன் கேட்பது சில வீட்டாரின் வழக்கம். கடவுளர் துதி பாடுவதை கேட்பதினால் உண்டாகும் பயனறியேன். நம் வள்ளுவர் அருளிய திருக்குறளை துதி வடிவில் நம் பிள்ளைகளும் நாமும் நாள்தோறும் கேட்டால் வள்ளுவர் கூறும் அறம் மனதில் பதியுமல்லவா ? உங்களுக்காக "போற்றிக்குறல்" .



திருக்குறள் போற்றி

தொகுப்பாளர். இரா. இளங்குமரனார்

திருவள்ளுவர் கண்ட முழுமுதல் இறைமை வழிபாடு, உள்ளொளி மிக்க உயர்நத குருவர் வழிபாடு, உலக நலங்காக்கும் பண்பு நல வழிபாடு, என்பவற்றை அவர்தம் வாக்கும் நோக்கும் கொண்டு ஆக்கப்பட்டது இப் போற்றித் தொகுப்பாகும். தனிப்பேரிறைமை, தவப்பெருங்குருவர், தண்ணளிப் பண்பாடு என்பவற்றைத் தாய்மொழி வழியாக நினைந்து நினைந்து உணர்நது உணர்ந்து உருகி உருகிப் போற்றுவதே உலகொத்த ஒரு நெறியாகும். அந்நெறியை நெஞ்சார உணர்ந்து நேயத்தால் போற்றி உயிர் தளிர்க்கச் செய்யுமாறே இப்போற்றி ஆக்கப் பெற்றதாகும்.

திருக்குறளை ஓதினால் உயர்வு கிட்டும்,
திருக்குறளை ஓதினால் பண்பாடு தானே வரும்,
திருக்குறளை ஓதினால் மனமாசு ஒழியும்,
திருக்குறளை ஓதினால் நோய் நொடி நீங்கும்,
திருக்குறளை ஓதினால் உயிர் தளிர்த்து நீடு வாழலாம்,
திருக்குறளை ஓதினால் தெய்வநிலை எய்தலாம்.

ஆதலால் திருக்குறறை ஓதிச் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் வாழ்வும் வளமும் பெற்றுச் சிறப்பெனும் செம்பொருள் கண்டு பேராப் பெருநிலை எய்தலாம். இதனை எண்ணிப் பயன்பெற்று வரும் பட்டறிவால் படைக்கப் பெற்றதே இப்போற்றி. ஆதலால், இதனை ஓதியும் உணர்ந்தும் வழிபட்டும் ஒளிமிக்க வாழ்வை ஒவ்வொருவரும் அடைவாராக.
அகர முதலாம் ஆதியே போற்றி (1)
மலர்மிசை ஏகும் மானடி போற்றி (3)
தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி (7)
எண்குணத் திலங்கும் இறையே போற்றி (9)
அமிழ்த மழையாம் அருளே போற்றி (11)
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி (24)
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி (28)
குணமெனும் குன்றே குறியே போற்றி (29)
மனத்தில் மாசிலா மணியே போற்றி (34)
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி (50)

மங்கல மனையற மாட்சியே போற்றி (60)
அறிவறி பண்புப் பேறே போற்றி (61)
அன்போ டியைந்த வழக்கே போற்றி (79)
வருவிருந் தோம்பும் வளமே போற்றி (83)
இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி (99)
செய்யாமற் செய்யும் செழுநலம் போற்றி (101)
காலத் துதவும் கனிவே போற்றி (102)
நெஞ்சங் கோடா நெறிநிலை போற்றி (118)
நிலையில் திரியா மலையே போற்றி (124)
ஓழுக்கம் குறையா உரமே போற்றி (139)

பொறுக்கும் அழியாப் புகழே போற்றி (156)
அழுக்கா றில்லா அறனே போற்றி (163)
அறனறிந்து வெஃகா அறவே போற்றி (179)
புறஞ்சொலல் அறியாப் பொலிவே போற்றி
பயனில பகராப் பண்பே போற்றி (197)
பிறன்கே டெண்ணாப் பெருமையே போற்றி
ஒத்த தறியும் உயர்வே போற்றி (214)
ஊருணி நீராம் உடைமையே போற்றி (215)
பயன்மரம் ஆகும் பரிவே போற்றி (216)
மருந்து நலமாம் மாண்பே போற்றி (217)

வறியார்க் குதவும் வாழ்வே போற்றி (221)
பசித்துயர் மாற்றும் பரமே போற்றி (225)
வசையிலாப் புகழே வானே போற்றி (240)
தன்னுயிர் அஞ்சாத் தகவே போற்றி (244)
அல்லல் அறியா அருளே போற்றி (245)
உயிரழித் துண்ணா ஒளியே போற்றி (259)
தன்னுயிர் தானறு தவமே போற்றி (268)
கூற்றையும் வெல்லும் நோற்றலே போற்றி
அளவறி நெஞ்சத் தறமே போற்றி (288)
உள்ளத்தாற் பொய்யா ஒழுக்கமே போற்றி

வெகுளியை மறக்கும் விரிவே போற்றி (303)
இன்னாமை எண்ணா இனிமையே போற்றி
பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி (322)
நிலைபே றுணரும் நிலையே போற்றி (331)
பற்றது பற்றாப் பற்றே போற்றி (348)
மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி
ஐயம் அணுகாத் தெளிவே போற்றி (354)
சிறப்பெனும் செம்பொருட் செறிவே போற்றி
பேரா இயற்கைப் பெற்றியே போற்றி (370)
அசையா உறுதி ஆக்கமே போற்றி (371)

முறைசெய் தருளும் இறையே போற்றி (388)
உலகின் புறத்தா னின்புறவே போற்றி (388)
நுண்மாண் நுழைபுல நோன்பே போற்றி (407)
ஆவ தறியும் அறிவே போற்றி (427)
எதிரதாக் காக்கும் இயல்பே போற்றி (429)
வரும்முன் காக்கும் வாழ்வே போற்றி (435)
அறனறி மூத்த அறிவே போற்றி (441)
பெரியரிற் பெரிய பேறே போற்றி (444)
மன்னுயிர்க் காக்க மனநலம் போற்றி (457)
தக்கதே செய்யும் தகைமையே போற்றி (466)

அமைந்தாங் கொழுகும் அளவே போற்றி
செய்தற் கரிய செய்கையே போற்றி (489)
அஞ்சாத் துணிவே துணையே போற்றி (497)
திறந்தெரிந் தறியும் தெளிவே போற்றி (501)
வாரி பெருக்கும் வகையே போற்றி (512)
அளவ ளாவும் அமிழ்தே போற்றி (523)
சுற்றம் சுற்றும் சுடரே போற்றி (524)
புகழ்ந்தவே புரியும் புகழே போற்றி (538)
கோலது கோடாக் கொற்றமே போற்றி (546)
குடிபுறங் காக்கும் குணமே போற்றி (549)

ஒத்தாங் கொறுக்கும் உரனே போற்றி (561)
கண்ணோட்டம் என்னும் கவினே போற்றி
உள்ளம் உடைமையாம் உடைமையே போற்றி (592)
நீரள வுயரும் மலருளம் போற்றி (595)
குடியெனும் குன்றா விளக்கே போற்றி (601)
அறிவறிந் தாற்றும் ஆள்வினை போற்றி (618)
அடுக்கும் இடுக்கணை அழிப்பாய் போற்றி
இன்பத் தின்பம் விரும்பாய் போற்றி (629)
மதிநுட்பம் நூலோ டுடையாய் போற்றி (636)
உலகத் தியற்கை உணர்வோய் போற்றி (637)

நிரந்தினிது சொல்லும் நீர்மையே போற்றி
வேண்டிய எலாம்தரும் வினைநலம் போற்றி
நடுக்கறு காட்சி நயனே போற்றி (654)
சொல்லிய செய்யும் சுடரே போற்றி (664)
வீறெய்து மாணபாம் வினைத்திறம் போற்றி
நூலாருள் நூல்வலல் நுண்மையே போற்றி
தூய்மை துணைமை துணிவே போற்றி (686)
போற்றிற் கரியவை போற்றியே போற்றி
குறிப்பிற் குறிப்புணர் குறிப்பே போற்றி (703)
ஒளியார் முன்னுறும் ஒளியே போற்றி (714)

கற்றவை செலச்சொல் கலையே போற்றி
நாடா வளத்ததாம் நாடே போற்றி (739)
அன்பீன் குழவியாம் அருளே போற்றி (757)
அருள்வளர் செவிலிப் பொருளே போற்றி (757)
நிறைநீர நீரவர் கேண்மையே போற்றி (782)
உள்ளம் பெருகுவ உள்ளுகை போற்றி (798)
கேளிழுக்கம் கேளாக் கெழுதகை போற்றி
இகலெனும் எவ்வம் இல்லாய் போற்றி (853)
பகைநட்பாக் கொள்ளம் பண்பே போற்றி
அளவறிந் துண்ணும் அறிவே போற்றி (943)

செப்பமும் நாணும் சேர்வே போற்றி (951)
பெருக்கத்து வேண்டும் பணிவே போற்றி (963)
உள்ள வெறுக்கையாம் ஒளியே போற்றி (971)
கொல்லா நலத்ததாம் நோன்மையே போற்றி (994)
நயனொடு நலம்புரி பயனே போற்றி (994)
சீருடைச் செல்வ மாரியே போற்றி (1010)
கருமத்தால் நாணும் நாணே போற்றி (1011)
உழுதுண்டு வாழும் வாழ்வே போற்றி (1033)

அகர முதலாம் ஆதியே போற்றி போற்றி