எழுத்திலக்கணம் இரண்டம்பாதி

'எளிய இலக்கணம் கற்போம்' என்ற நான்காம் தமிழ் கற்போம் குழுவின் உரையாடற் றொகுதி

உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் ஆக முப்பதே தமிழின் முதல் எழுத்துகள் என்று கண்டோம்.
இந்த முப்பது ஒலிகளை வைத்து மட்டுமே இயங்கும் மொழியாகும், நம் தாய்மொழியான தமிழ் என்க.
இந்த முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் மற்ற எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும்.
சார்பு எழுத்துகளாவன

ஆய்தம்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
மற்றும் பிறவுமாகும்...
உயிர்மெய் சார்பெழுத்து ஆகும்.

அவை வல்லினம் மெல்லினம் இடையினம் என வகைப்படுத்தப்படும்.

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்

வல்லினம் வல்லோசையாகவும் மெல்லினம் மென்மையான ஓசையாகவும் இடையினம் இவ்விரண்டினுக்கும் இடைப்பட்ட ஓசையாகவும் உள்ள எழுத்துகள் ஆகும்....
இவ்வாறு 

குற்றெழுத்தும் நெட்டெழுத்துமான உயிர்கள் ஏறிய வல்லின மெல்லின இடையின மெய்கள் என்று பிரித்துக் கொள்ளலாம்...
அதாவது...

உயிர் எழுத்துகள் குறில் நெடில் என்றும்...

மெய் எழுத்துகள் வல்லினம் மெல்லினம் இடையினம் என்றும்....

வகைப்படுத்தப்பட்டதைப் போல

குற்றெழுத்தும் நெட்டெழுத்துமான உயிர்கள் ஏறிய வல்லின மெல்லின இடையின மெய்கள் என்று உயிர்மெய் எழுத்துகளைப் வகைப்படுத்திக் கொள்ளலாம்...
அம்பு என்ற சொல்லில் 

அகரம் குற்றெழுத்து உயிர்..
ம் எனும் மகரம் மெல்லின மெய்
பு என்பது குற்றெழுத்து ஏறிய வல்லின உயிர்மெய்.


********
புதை என்ற சொல்லில் உள்ள பு என்ற எழுத்தையும்

அம்பு என்ற சொல்லில் உள்ள பு என்ற எழுத்தையும் சொல்லிப் பார்க்கும்போது...

புதை என்பதின் 'பு' ஒரு மாத்திரை ஒலிக்க

அம்பு என்பதின் 'பு', அவ்வாறு ஒலிக்காது குறுகி ஒலிப்பதை ஒலித்துப் பாருங்கள்...
இவ்வாறு குறுகி ஒலிக்கும் உகர உயிர்மெய் குற்றியலுகரம் எனப்படும்


தமிழ் எழுத்துகள் முப்பதே என்றும் அவை பன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்யும் என்றும், சார்ந்து வருபவை உயிர்மெய் முதலிய பத்தும் என்றும் நன்னூல் காட்டும்... 
இந்த முப்பது எழுத்துக்களை முதல் எழுத்துகள் என்க...

அப்படியானால் ஜ ஷ ஸ ஹ க்ஷ ஸ்ரீ என்பனவற்றை எந்தக் கணக்கில் வைப்பது???

இவை வடமொழியை தமிழில் எழுத உருவானவை என்றும், இவற்றின் பயன்பாட்டால்தான் தமிழ் நடை சிதைந்து அழியும் நிலைக்குச் சென்றது என்றும், மணிப்பிரவாளம் என்னும் நஞ்சு உருவானதற்கு இந்த எழுத்துக்களே காரணம் என்றும், பற்பல அறிஞர்களின் பெருமுயற்சியாலும் மீண்டெழும் தமிழின் தன்மையாலும் தமிழ் மீண்டு வந்துள்ளது என்றும், இன்னமும் தமிழில் மணிப்பிரவாள நடை ஒழியாது பல சொற்களின் மூலம் தொங்கிக் கொண்டு தமிழைச் சீரழிக்கின்றதனாலும், தமிழின் சிறப்பு எழுத்துக்களான ழகர எகர ஒகரங்கள் போன்றவற்றை வடமொழியாளர் வடமொழியில் புது எழுத்துகளைப் புகுத்தி இவ்வொலிகளை ஒலிக்கச்செய்வதில்லையாதலாலும், இவை அறவே விலக்கி ஒதுக்கப்பட வேண்டியவை என்று கூறி விடுக்க...

இம்முப்பது முதலெழுத்துகளை உயிரணுக்களாகவும் (cell), அவ்வெழுத்துகள் இரண்டோ அதற்கு மேலோ கலந்து ஒரு பொருளை உணர்த்துதலாவது உயிரணுக்கள் பல கலந்து இயங்கங் கொண்ட தசையாகவோ தோலாகவோ எலும்பாகவோ நரம்பாகவோ ஆவது போலென்றும், இவ்வியக்கத்தைக் கெடுக்கும் புற்றுநோய்க் கிருமியணுக்களாக இவ்வாறு கிரந்த எழுத்துக்களையும் எண்ணிக்கொள்க....

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற பண்டைப் பழமொழி காண்க....

நம் எழுத்துக்களைக் கொண்டே புதுச்சொற்கள் படைப்பது என்பது உடம்பு உயிரணுக்களைக் கொண்டு தன்னை வளர்க்கும் வளர்ச்சியென்றும், அவ்வாறல்லாது பிற மொழி எழுத்துக்களை ஒலிகளைக் கொண்டு சொற்களை அமைத்துக்கொள்வது புற்று நோய் 
அணுக்களால் ஆன வீக்கம் போன்றதேயென்றும் கொள்க....

இனி, எழுத்தானது தனித்து நின்றோ இரண்டு எழுத்துகள் சேர்ந்தோ பல எழுத்துகள் சேரநதோ ஒரு பொருளை அறிவித்து நிற்பது சொல்லாம்...

சொல்: 

சொல்லாவது, ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவிப்பதாம்.

எ-டு: நிலம், நீர், மரம், நட, வா, உண், மற்று, ஏ, ஓ , 
உறு, தவ, நனி 
பொன்னன், நடந்தான் , 
பெரியன் , ஓடினான்.

ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்ற உறுப்புகளாகி சிலவிடங்களில் திரிபடைந்தும் சொல் என ஆகும் என்க...

எ-டு: 

(1) கூனி என்பது, கூன், இ எனப் பகுதி, விகுதி என்னும் இரண்டுறுப்பால் முடிந்தது.

(2) உண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, இடைநிலை, விகுதி என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது.

(3) உண்டனன் என்பது, உண், ட், அன், அன், எனப் பகுதி, இடைநிலை, சாரியை, விகுதி என்னும் நான்குறுப்பால் முடிந்தது.

(4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன், எனப் பகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகுதி என்னும் ஐந்துறுப்பால் முடிந்தது.

(5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி, முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய திரிபும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது.


16/10/2015


பகுசொல்லாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய சொல்லாம். அது, பெயர்ப்பகுசொல், வினைப்பகுசொல், என இருவகைப்படும்

 பகாச்சொல்லாவது, பகுக்கபடாத இயல்புடைய சொல்லாம். 


அது ;
 பெயர்ப்பகாச்சொல், வினைப்பகாச்சொல், 
இடைப் பகாச்சொல், உரிப் பகாச்சொல், 
என நான்கு வகைப்படும்.

எ-டு:
நிலம், நீர், மரம் - பெயர்ப் பகாச்சொல்

நட, வா, உண் - வினைப் பகாச்சொல் 

மற்று, ஏ, ஓ - இடைப் பகாச்சொல்

உறு, தவ, நனி - உரிப் பகாச்சொல் 

###########

 எளிமையாகச் சொல்வதானால் சொல்லானது 

பெயர்ச்சொல் 
வினைச்சொல் 
இடைச்சொல் 

என்ற மூன்று அடிப்படைப் பிரிவினவாம்... 

உரிச்சொல் என்ற ஒன்றும் உளதாம் என்க...

இவற்றுள், இடையும் உரியும், சொல்லின் ஆறுறுப்புக்களுள் (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு), பகுதியை மட்டுமே கொண்டு  வரும் என்க.... 

#########


 உரிச்சொல் இக்கால வழக்கில் அரிதாம் என்பதால் அடிப்படை முதல் மூன்றே என்று சொல்லப்பட்டதென்க...

###########

 பெயர்ச்சொல்:

பெயர்ச்சொல்லாவது ஆறு வகைப்படும்...

பொருட்பெயர் - பொன்னன், தாமரை, அவன், இவன், உவன், யாவன்

இடப்பெயர் - மதுரை, நிலத்தன், 

காலப்பெயர் - மாலை, 
தையான்... 

சினைப்பெயர் - கழுத்து, பல்லன் 

பண்புப்பெயர் - பெரியன்,  கரியன். 

தொழிற்பெயர் - நடையன், சொற்பொழிவாளன்...

வினைச்சொல்லாவது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாம்...
 வினைச்சொல் - விளக்கம்

ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.

அம்மா அழைக்கிறாள்
பாப்பா வருகிறாள்
என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.

நிலம் அதிர்ந்தது.
நீர் ஓடுகிறது.

என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும். ஆகவே, உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள் ஆகியவற்றின் தொழிலையே வினை என்கிறோம். பொருளின் அசைவையே வினை எனச் சுருக்கமாகக் கூறலாம். 

 தமிழ்மொழியில் அடிச்சொற்கள் பல பெயர், வினைகளுக்குப் பொதுவாகவே உள்ளன. அலை, காய், பூ முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம்.

அலை வருகிறது
அலையைப் பார்
இத் தொடர்களில் அலை என்பது பெயர்ச் சொல்லாகும்.

வெயிலில் அலையாதே
ஏன் அலைகிறாய்
இத் தொடர்களில் அலை என்பது வினைச் சொல்லாகும். இவ்வாறு பெயருக்கும், வினைக்கும் பொதுவான சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன என்பதை மட்டும் இப்பொழுது நினைவிற் கொள்க.
 அவ்வினைச்சொற்கள் இரு வகைப்படும்...

அவை
1. முற்று
2. எச்சம்

 வினைச்சொற்கள் தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும் என்க...

வினைச்சொல் முற்று மற்றும் எச்சம் என இருவகைப் படும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனவும் முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனவும் பெயர் பெறும்.

 முற்று வினையானது தெரிநிலை வினைமுற்று மற்றும் குறிப்பு வினைமுற்று என இருவகைபடும்.


 தெரிநிலை வினைமுற்று:

எ-டு: எழிலரசி மாலை தொடுத்தாள்.
இதில் எழிலரசி என்பது வினையைச் (செயலை) செய்பவர். தொடுத்தாள் என்பது அவரின் செயல். 
இச்சொல்லில் இருந்து
கருவி - நார், பூ, கை
நிலம் -அவள் இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் - மாலை என்பனவற்றை அறிய முடியும்.

இவ்வாறு, செய்பவன், காலம், நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்றாகும்.
இவற்றுல் சில குறைந்தும் வரும். ஆனால் காலத்தைத் தெளிவாகக் காட்டும் என்க.

 குறிப்பு வினைமுற்று:

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, விலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்றாகும்...
குறிப்பு வினைமுற்றாவது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது குறிப்பினால் உணர்த்தும் என்க...

 எ-டு: 
அவன் பொன்னன்.
இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடைவன் என்று பொருள் தருவதால் பொன் என்னும் பொருளின் அடிப்படையில் தூன்றி அதனைப் பெற்றிருப்பவனை உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை வெளிப்படையாக உணர்த்தவில்லை. பண்டு பொன்னையுடையன், இன்று பொன்னையுடையன் என்று ஏதேனும் குறிப்பினால்தான் காலத்தை உணர்த்தும்... இதுவே குறிப்பு வினைமுற்று என்க.


 ஏவல் வினைமுற்று:

முன்னிலையிடத்தாரை (முன்னால் இருப்பவரை) ஏவுதற் பொருளில் வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்றாகும். இது எதிர்காலத்தைத் தெளிவாகக் காட்டுவதால் ஒருவகைத் தெரிநிலை வினைமுற்றென்பது வெளிப்படை...
ஏவல் வினைமுற்று ஒருமை பன்மை உணர்த்தும்...
எ-டு: 
செய்வாய் - ஏவல் ஒருமை
செல்வீர் - ஏவல் பன்மை
சென்மின், கேண்மின் - ஏவல் பன்மை


 வியங்கோள் வினைமுற்று:
க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுகள் வியங்கோள் வினைமுற்றுகளாம். வியங்கோள் வினைமுற்றுகள் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும். 

எ-டு:
வாழ்க - வாழ்த்துதல்
ஒழிக - வைதல்
செல்க - விதித்தல்
ஈக, என்க - வேண்டல்
வாழிய வாழியர் - வாழ்த்துதல் 

 அனைத்து வினைமுற்றுகளும் உடன்பாட்டுப் பொருளிலும் வரும் எதிர்மறைப் பொருளிலும் வரும் என்க... 

எ-டு:
தொடுத்தான் - தொடுத்திலன் (தெரிநிலை வினைமுற்று உடன்பாடு எதிர்மறை) 

செல்வீர் - செல்லாதீர் (ஏவல் வினைமுற்று உடன்பாடு - எதிர்மறை) 

சொல்லுக - சொல்லற்க (வியங்கோள் வினைமுற்று)


17/10/2015


இனி, எச்சம் என்பது முடிவு பெறாத வினைச்சொல் எனப்படும் என்றும், அது பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும் என்றும் முன்னமே கண்டோம். 

 பெயரெச்சம்:
பெயர்ச்சொல்லை ஏற்றுத் பொருள் முடிவு பெறும் எச்சவினைச்சொல் பெயரெச்சமாகும்...

எ-டு: படித்த, அழகிய (இவை பொருள் தர வேண்டுமானால் தனக்குப் பின்னால் ஒரு பெயர்ச்சொல் பெறவேண்டியுள்ளமை காண்க..)

 பெயரெச்சம் இருவகைப்படும் 
1.தெரிநிலைப் பெயரெச்சம்
2. குறிப்புப் பெயரெச்சம் 

 1.தெரிநிலைப் பெயரெச்சம்

எ-டு
படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்

இவை காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலைப் பெயரெச்சங்களாம்... இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்றும், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் அறுவகைப் பொருட் பெயருள் ஒன்றனைக் கொண்டு முடியும் எச்சச்சொல் தெரிநிலைப் பெயரெச்சமென்க. 

2. குறிப்புப் பெயரெச்சம்
காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல், குறிப்புப் பெயரெச்சமாம்.

எ-டு: 
நல்ல மாணவன்
அழகிய பெண் 

 வினையெச்சம்

முடிவு பெறாத எச்ச வினைச்சொல் ஒரு வினைமுற்றினைக் கொண்டு பொருள் முடிவு பெறுமாயின் அவ்வெச்ச வினை வினையெச்சம் எனப்படும். அது தெரிநிலை வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும் என்க. 

 1.தெரிநிலை வினையெச்சம்:
எ-டு: 
படித்துத் தேறினான்
படிக்கச் செல்கின்றான்
படிப்பின் தேர்ச்சியடைவான்

இவற்றில் படித்து, படிக்க, படிப்பின் என்னும் சொற்கள் முறையே முக்காலத்தைக் காட்டி, படித்தல் என்னும் செயலையும் உணர்த்தி, வினைமுற்றுகளை ஏற்று பொருள் முடிவு பெறுவதால் இவை தெரிநிலை வினையெச்சமென்பது வெளிப்படை..

2. குறிப்பு வினையெச்சம்:

மெல்ல நடந்தான்
தமிழர் தமிழ் இன்றி வாழ்ந்திடார்...
இவற்றில் மெல்ல, இன்றி என்ற சொற்கள் காலங்காட்டாது வினைமுற்றால் காலம் பெற்று முடியும் குறிப்பு வினையெச்சங்களாம்...

குழுவினருக்கு வணக்கம்..

இதுவரை... 
எழுத்தாவது யாதென்றும்,
அவற்றின் எண்ணிக்கை, பெயர், உருவம், மாத்திரை, முதனிலை, ஈறுநிலை, போலி என்பனவற்றைக் கற்றோம்.
பின்னர் எழுத்துகள் சேர்ந்து பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு என்ற ஆறு உறுப்புகளாக உருப்பெற்று, ஒரு சொல்லாக உருவாவதைக் கண்டோம்.
அச்சொற்கள் பெயர், வினை, இடை மற்றும் உரி என்ற பிரிவுகளைக் கொண்டன என்பதைக் கண்டோம்.
அப்பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் என்றும், அவை பொருள், இடம், காலம், சினை, பண்பு மற்றும் தொழில் ஆகியவை என்றும் எடுத்துக்காட்டுகளோடு கண்டோம்...
வினைச்சொல்லின் முற்று எச்சம் என்ற பிரிவுகளும், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற ஆறு வகைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் கண்டோம்..

இனி ஒரு சொல்லாவது, 
பெயர்ச்சொல்லாகவோ 
வினைச்சொல்லாகவோ 
இடைச்சொல்லாகவோ 
உருவாவது எதனால் என்றால், 

அச்சொற்களில் உள்ள பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு ஆகிய உறுப்புககளாலேயே என்றும், அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றையும்
 குறித்து மேலும் தெளிவு பெற வேண்டின், எழுத்திகாரம் சொல்லும் இலக்கண நூலைக் காண்க என்றும் கூறி சொல்லுருவாக்கம் இதோடு இங்கு முடிக்கப்படுகிறது....