இதுவரை...
எழுத்தாவது யாதென்றும்,
அவற்றின் எண்ணிக்கை, பெயர், உருவம், மாத்திரை, முதனிலை, ஈறுநிலை, போலி என்பனவற்றைக் கற்றோம்.
பின்னர் எழுத்துகள் சேர்ந்து பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு என்ற ஆறு உறுப்புகளாக உருப்பெற்று, ஒரு சொல்லாக உருவாவதைக் கண்டோம்.
அச்சொற்கள் பெயர், வினை, இடை மற்றும் உரி என்ற பிரிவுகளைக் கொண்டன என்பதைக் கண்டோம்.
அப்பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் என்றும், அவை பொருள், இடம், காலம், சினை, பண்பு மற்றும் தொழில் ஆகியவை என்றும் எடுத்துக்காட்டுகளோடு கண்டோம்...
வினைச்சொல்லின் முற்று எச்சம் என்ற பிரிவுகளும், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற ஆறு வகைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் கண்டோம்..
இனி ஒரு சொல்லாவது,
பெயர்ச்சொல்லாகவோ
வினைச்சொல்லாகவோ
இடைச்சொல்லாகவோ
உருவாவது எதனால் என்றால்,
அச்சொற்களில் உள்ள பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, திரிபு ஆகிய உறுப்புககளாலேயே என்றும், அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றையும்
குறித்து மேலும் தெளிவு பெற வேண்டின், எழுத்திகாரம் சொல்லும் இலக்கண நூலைக் காண்க என்றும் கூறி சொல்லுருவாக்கம் இதோடு இங்கு முடிக்கப்படுகிறது..
இனி எழுத்ததிகாரத்தின் கடைசி உறுப்பான புணர்ச்சிக்கு வருவோம்...
எழுத்திலக்கணத்தின் உறுப்புகள்
1. எண்
2. பெயர்
3. முறை
4. பிறப்பு
5. உருவம்
6. மாத்திரை
7. முதனிலை
8. ஈறுநிலை
9. இடைநிலை
10. போலி
11. சொல்லுருவாக்கம்
12. புணர்ச்சி
இதில் நாம் 12ஆம் உறுப்பான புணர்ச்சியை இன்று கற்கவுள்ளோம்..
புணர்ச்சியாவது என்ன என்றால் இருசொற்கள் இணையும் போது நிகழ்பவையே புணர்ச்சி என்க.
புணர்தல் என்றால் சேர்தல் இணைதல் என்று பொருள்.
இரு சொற்கள் சேரும்போது, நிற்கும் சொல்லை நிலைமொழி என்றும் அந்நிலைமொழியோடு வந்து சேரும் சொல்லை வருமொழி என்றும் அழைக்கப்படும்..
எ-டு: மற்று + ஒன்று = மற்றொன்று
இங்கு மற்று நிலைமொழியாம், ஒன்று வருமொழியாம் என்க.
புணர்ச்சியாவது நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணர்வதாம்.
குறிப்பு: புணர்ச்சிக்குள் புகும் முன்னர் இதுவரை கண்ட எழுத்தின் இலக்கணங்களை மேலும் ஒருமுறை தெளிவுறக் கண்டு கொள்க... எழுத்தின் வகைகள், குற்றியலுகரம் என்றால் என்ன, எழுத்தின் முதனிலை ஈறுநிலை என்றால் என்ன... அதாவது, சொல்லின் முதலிலும் இறுதியும் வரும் வராத எழுத்துகள் எவையெவை என்பதை மீண்டும் ஒருமுறை சிந்தித்துக் கொள்க...
புணர்ச்சியாவது, நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணர்வதாம்.
---
அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல்வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.
வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொற்கள் புணர்வதாம்.
எ-டு
மரம்வெட்டினான் .. மரத்தை வெட்டினான்
கல்லெறிந்தான் .. கல்லாலெறிந்தான்
கொற்றன்மகன் .. கொற்றனுக்கு மகன்
மலைவீழருவி .. மலையின் வீழருவி
சாத்தன்கை .. சாத்தனதுகை
மலைநெல் ..
மலையின்கணெல்
இவை வேற்றுமை உருபுகள் எனப்படும்
நம்பி
– முதல் வேற்றுமை (பெயர் வேற்றுமை)
நம்பியை
– இரண்டாம் வேற்றுமை (ஐ வேற்றுமை)
நம்பியால் – மூன்றாம் வேற்றுமை (ஆல் வேற்றுமை)
நம்பிக்கு – நான்காம் வேற்றுமை (கு வேற்றுமை )
நம்பியின் – ஐந்தாம் வேற்றுமை (இன் வேற்றுமை)
நம்பியது – ஆறாம் வேற்றுமை (அது வேற்றுமை)
நம்பி கண்
– ஏழாம் வேற்றுமை (கண் வேற்றுமை)
நம்பீ – எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
நம்பி கண்டான் - பெயர் - செய்பொருள்
நம்பியைக் கண்டான் - ஐ - செயப்படுபொருள்
நம்பியால் பெற்றான் - ஆல் - கருவிப்பொருள்
நம்பிக்குக் கொடுத்தான் - கு - கொடைப்பொருள்
நம்பியின் பிரிந்தான் - இன் - நீங்கல்பொருள்
நம்பியது வீடு - அது - கிழமைப்பொருள்
நம்பிகண் செல்வம் - கண் - இடப்பொருள்
நம்பீ! வா - விளி - விளிப்பொருள்
இந்த உருபு தோன்றியும் மறைந்தும் வரும் என்க...
தோன்றி வருதல் வேற்றுமை விரி எனப்படும்...
எ-டு. தமிழைக் கற்போம் (இரண்டாம் வேற்றுமை விரி)
மறைந்து வந்து பொருளை உணர்த்துதல் தொகை எனப்படும்..
தமிழ் கற்போம் (ஐ எனும் உருபு மறைந்து வந்த இரண்டாம் வேற்றுமைத் தொகை)...
தொக்கி வருதல் தொகை எனப்பட்டது...
தொகை என்றால் மறைத்துக்
காட்டல் என்க.... to show by hiding something என்று பொருள்...
தொகை என்னும் ஆழ்ந்த பொருள்தரும் சொல் வேறு மொழியில் உள்ளதா என்று தெரியவில்லை..
29/10/2015
அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம்.
அது,
வினைத்தொகை,
பண்புத்தொகை,
உவமைத்தொகை,
உம்மைத்தொகை,
அன்மொழித்தொகை,
என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும்,
எழுவாய்த்தொடர்,
விளித்தொடர்,
தெரிநிலை வினைமுற்றுத் தொடர்,
குறிப்பு வினைமுற்றுத்தொடர்,
பெயரெச்சத்தொடர்,
வினையெச்சத்தொடர்,
இடைச்சொற்தொடர்,
உரிச்சொற்றொடர்,
அடுக்குத்தொடர்,
என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.
தொகைநிலைத் தொடர்களுக்கு எடுத்துக்காட்டு
(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை
தொகாநிலைத் தொடர்கள் எடுத்துக்காட்டு
(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை ..உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்
தொகை என்பது தொக்கி நின்று அதாவது மறைந்து நின்று காட்டுவதாம்...
வினைத் தொகை
வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும். பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும், காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு, வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும். அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம் என்பர். கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.
(எ-டு) வீசு தென்றல்
இத்தொடரை விரித்துக் கூறும்பொழுது, வீசிய தென்றல், வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்திவரக் காணலாம். இவ்வாறு வினைத்தொகை முக்காலமும் குறித்து வருமானால் அவை முக்கால வினைத் தொகைகள் எனப்படும்.
வீசிய, வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின் விகுதியும் காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின் முதல்நிலையான வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும் பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.
சில வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.
(எ-டு) வருபுனல்
இவ்வினைத்தொகையில் வா என்னும் வினைப் பகுதியான முதல்நிலை வரு எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு வந்தது.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
ஊறுகாய் சுடுசோறு போன்று...
நேற்றும் ஊறுகாய் ஊறியது... இன்றும் ஊறிக்கொண்டு இருக்கிறது... நாளையும் ஊறும்... எனவே அதை ஊறுகாய் என்று முக்காலமும் உணர்த்துமாறு சொல்கிறோம்...
பண்புத் தொகை
பண்புத் தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும்.
பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.
பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.
ஆகிய என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் இடைச்சொல். இதனைப் பண்பு உருபு என்பர்.
(எ-டு)
செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை
வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை
முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை
இன்சொல் - சுவைப் பண்புத் தொகை
இவை விரியும்பொழுது, செம்மையாகிய தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என விரியும்.
மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் செந்தாமரை என்பது செம்மை ஆகிய தாமரை என விரியும் எனப் பார்த்தோம். இவற்றுள் செம்மை என்பது பண்பு; ஆகிய என்பது பண்பு உருபு; தாமரை என்பது பண்பி. இதேபோல மற்ற எடுத்துக்காட்டுகளைப் பிரித்து அறிந்து கொள்க.
பண்புத்தொகையில் ஒருவகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவதாகும்.
(எ-டு)
தலைவர் அப்துல்கலாம்
பலா மரம்
முதல் தொடரில் தலைவர் என்னும் சொல் பொதுப் பெயர். அப்துல்கலாம் என்னும் பெயர் சிறப்புப் பெயர். இத்தொடர் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பொதுப் பெயரும் சிறப்பு பெயரும் ஒருவரையே குறித்து வந்தது கவனிக்கத்தக்கது.
இரண்டாம் தொடரில் பலா என்பது மர வகைகளில் ஒன்றின் சிறப்புப் பெயர். மரம் என்பது பொதுப் பெயர். இத்தொடர் சிறப்புப் பெயரொடு பொதுப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் ஒரு பொருளையே குறித்து வந்தன.
தலைவர், பலா என்னும் சொற்கள் பண்புப் பெயர் ஆகாவிடினும்
பண்புத் தொகை போல ஆகிய என்னும் உருபு பெற்று ஒரு பொருளைச் சிறப்பிப்பதனால் இத்தொடர்கள் பண்புத் தொகைத் தொடர்களாகக் கருதப் பெறுகின்றன.
உவமைத் தொகை
உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.
போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.
(எ-டு.) பவளவாய்
இது பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம் என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபு; வாய் என்பது உவமேயம். (உவமானம் - உவமையாகும் பொருள்; உவமேயம் - உவமிக்கப்படும் பொருள்.)
இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும். (மெய் - வடிவம்; உரு - வண்ணம்.)
(எ-டு.)
புலி மனிதன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயனுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருவுவமைத் தொகை
இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.
30/10/15
உம்மைத் தொகை
அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பது உம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.
எ-டு :
ஒன்றேகால் - எண்ணல் அளவை உம்மைத் தொகை
தொடியேகஃசு - எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால் படி - முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி அங்குலம் - நீட்டல் அளவை உம்மைத் தொகை
இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும், தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.
மற்ற தொகைநிலைத் தொடர்களில் காணப்படாத தனிச் சிறப்பு இவ்வும்மைத் தொகைக்கு உண்டு. மற்ற தொகைநிலைத் தொடர்களில் உருபு இரண்டு சொற்களுக்கு இடையில் மட்டுமே மறைந்து வரும். உம்மைத் தொகையில் இரண்டு சொற்களுக்கு இடையிலும் இரண்டாம் சொல்லின் இறுதியிலும் உம் என்னும் உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
அன்மொழித் தொகை
அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள். மொழி என்றால் சொல் என்று பொருள். கூறப்படும் தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது. இது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும். இது,
1) வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2) வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
3) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
4) உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
5) உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
என ஐந்து வகைப்படும்.
1. வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம் வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.
(எ-டு) பூங்குழல் வந்தாள்
பூங்குழல் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) பொற்றொடி வந்தாள்
பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர், ‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கவியிலக்கணம்
கவியிலக்கணம் என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது, நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) பொற்றாலி
பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கிள்ளிகுடி
கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கீழ் வயிற்றுக் கழலை
கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர், ‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது, ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
2. வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) தாழ்குழல் பேசினாள்
தாழ்குழல் என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
3. பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) கருங்குழல்
கருங்குழல் என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது, பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
4. உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) தேன்மொழி
தேன்மொழி என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
5 உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
(எ-டு) உயிர்மெய்
உயிர்மெய் என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
அல்வழித் தொகாநிலைத் தொடர் என்பது,
அல்வழிக்கு உரிய தொகைகளான வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியன நீங்கலாக, தமக்கெனத் தனி உருபுகள் இல்லாத ஏனைய தொகாநிலைத் தொடர்கள் தொடரும் தொடராகும். இத்தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்... அவை
எழுவாய்த்தொடர்,
விளித்தொடர்,
தெரிநிலை வினைமுற்றுத் தொடர்,
குறிப்பு வினைமுற்றுத்தொடர்,
பெயரெச்சத்தொடர்,
வினையெச்சத்தொடர்,
இடைச்சொற்றொடர்,
உரிச்சொற்றொடர்,
அடுக்குத்தொடர்
இவ்வாறு தொக்கியும் தொகாதும் வரும்போது சொற்கள் எப்படிப் புணர்கின்றன என்பதே புணர்ச்சியாம் என்க...